

மார்கழி மாதம் மகத்துவமானது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அதே புத்துணர்ச்சியோடு வாசல் தெளித்து கோலம் போட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் பரங்கிப் பூக்களை வைத்து அழகு படுத்துவார்கள். இந்த கோலத்தைப் பார்த்தால் எந்த தெய்வத்திற்குதான் ஆசையிருக்காது. அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியிருப்பாள். தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதை தெரிவிக்க அடையாளமாக மார்கழி மாதங்களில் அழகிய கோலம் போட்டு அந்த கோலத்தின் மீது பரங்கிப் பூக்களை வைத்து அழகுபடுத்தும் பழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளது.
மார்கழி மாதத்தில் மட்டும் பரங்கிப் பூக்களை வைக்கிறார்களே மத்த 11 மாதங்களில் அந்த பழக்கம் இல்லையே என்று கேட்கலாம். மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கை கூடிவரும் என்பது நம்பிக்கை.
இந்தப் பழக்கம் பாண்டவர்கள் காலத்திலேயே தோன்றியதாக கூறப்படுகிறது. பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர் வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகி கோலம் போட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது.
அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது. மார்கழி மாத காலை வேளையில் வீட்டு வாசலில் போடப்படும் கோலமானது கன்னிப் பெண்ணின் கையால் போட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மார்கழி மாத காலை வேளையில் வெளிவரும் ஓதுவான் வாயுவை சுவாசிக்கும் கன்னிப்பெண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் ஓசோன் வாயு உடல் மீது படும்போது அவர்களின் முகமானது பொலிவுடனும் பிரகாசமாக மாறிவிடும் என்பது நம்பிக்கை.
மாட்டுச் சாணத்தில் பிள்ளையாரையும் பூசணிப்பூவையும் எதற்காக வைக்கின்றனர். இதற்கும் ஒரு தத்துவம் உள்ளது.
கிராமங்களில் மார்கழி முதல் தேதி அன்று ஒரு சாண பிள்ளையார் வைக்கத் தொடங்கி முப்பது தேதிகளுக்கு வரிசையாக அதிகப்படுத்திக் கொண்டே போவார்கள். இந்த பிள்ளையாரை கோலத்தின் மீது மண்ணில் வைக்கக்கூடாது. அரச இலையிலோ அல்லது ஆல இலையின் மீது வைக்கலாம். நாம் பிடித்து வைத்த சாண பிள்ளையாரை எல்லாம் சேகரித்து வைத்து தை மாத தொடக்கத்தில் கன்னிப்பெண்கள் அனைவரும் சேர்ந்து நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள். இந்த பிள்ளையாரை பிடித்து வைக்கும் பெண்கள் மனதார பிள்ளையாரை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இன்றளவும் கிராமங்களில் இந்த பழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் இந்த சாணங்களை சேகரித்து பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க பயன்படுத்துவதும் உண்டு.
அரச மரப் பிள்ளையாரை சுற்றினால் திருமணம் நடக்கும் என்பது அந்த காலத்தில் இருந்து வரும் நம்பிக்கை. திருமணத்தடையை நீக்குபவர் பிள்ளையார். எந்த வித தோஷமாக இருந்தாலும் விநாயகரை வழிபடும்போது அந்த தோஷமானது விலகிவிடும். இதனால்தான் , மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூ வைத்து கோலத்தின் மீது வைக்கிறார்கள்.