

குட்டீஸ்களா உங்களுக்கு விநாயகர் என்றாலே ரொம்ப பிடிக்கும் தானே..! அவரோட துதிக்கை மூஞ்சூறு வாகனம் பெருத்த வயிறு அவர் கையில வைத்து இருக்கிற கொழுக்கட்டை உங்களைப் போலவே குட்டியா க்யூட்டாக இருப்பாரே.. விநாயகரை கும்பிடாம பள்ளிக்கு போக மாட்டீர்கள் தானே..! அந்த விநாயகர் எப்படி பிறந்தார் என பார்ப்போமா!
சிவனின் மனைவி பார்வதியிடம் தோழிகள், "தேவி சிவனுக்குரிய பிருங்கி, நந்தி முதலிய கணங்களே நமக்கும் காவலர்களாக இருக்கின்றனர். நமக்கென ஒரு தனி காவலரை ஏன் நியமிக்க கூடாது?" என கேட்டனர்.
உடனே பார்வதி தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அதன் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிர் ஊட்டினாள். அவரையே தன் அந்தப்புர காவலராக நியமித்தாள். அவருக்கு கணபதி என்று பெயரிட்டாள். அவர் மனித முகம் கொண்டவராகவே இருந்தார். இந்த நேரத்தில் பார்வதியை காண சிவன் அங்கு வந்தார். புது காவலரான கணபதி அவரை தடுத்து நிறுத்த, "தன் தாயின் உத்தரவுப்படி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார்.
கோபம் கொண்ட சிவபெருமான் அவரது தலையை வெட்டிவிட்டார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று தன் பூதகணங்களை அழைத்து அவர்களிடம் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்து வருமாறு கூறினர். அவர்கள் முதலில் பார்த்தது ஒரு யானையை சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்பொழுது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? என கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயர் ஆகிவிட்டது. அந்த சிறுவன் தான் பிள்ளையார். இவர் யானை முகனாக அவதாரம் பெற்ற நன்னாள் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி என்ற அடிப்படையில் விநாயகரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.
விநாயகர் பிறந்தது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா அவருக்கு இப்படித்தான் தும்பிக்கை கிடைத்தது நீங்கள் இத்தனை நாளாக நமக்கு பிடித்த விநாயகருக்கு எப்படி டா தும்பிக்கை வந்தது என யோசித்துக் கொண்டே இருந்தீர்களே இப்படித்தான் விநாயகர் தன் உருவ அமைப்பை பெற்றார்.
விநாயகர் சதுர்த்தி அன்று எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் புதுப்புது விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள். பிறகு அரசு அனுமதி கிடைத்தவுடன் அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ போட்டு கரைக்கிறார்கள்.
இந்த வழக்கம் நம் தமிழ்நாட்டில் சில காலங்களாக தான் இருக்கிறது. இதற்கு முன்னர் இந்த வழக்கமில்லாமல் இருந்தது. ஆனால், மராட்டிய மாநிலத்தில் அது முதன்முதலில் இருந்து அந்த மாதிரி விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கடலில் கரைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த விழாவை மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடந்ததாம். மேலும் அந்த நாட்டின் தேசிய விழாவாகவும் கலாச்சார விழாவும் கொண்டாடப்பட்டது. பின்னர் பீஷ்வாக்கள் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு தொடர்ந்து நடந்து வந்ததாம். பிறகு மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறி மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு சுதந்திர போராட்ட காலத்தில் தான் இந்து மதத்தின் பால் ஈர்ப்புக் கொண்டவரான அந்த காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களை ஒருவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினாராம்.
அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து தங்கள் பகுதி மக்களுடன் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர்.
ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இந்த விழாவின்போது வழங்க ஆரம்பித்தனர். வீடு தோறும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வைத்து பூஜை செய்து வீட்டில் உள்ள கிணற்றிலோ பக்கத்தில் உள்ள ஆற்றிலோ அதை கரைத்து வந்தனர். ஆனால் இப்பொழுது மகாராஷ்டிரா மாநிலம் போல் நமது தமிழ்நாட்டிலும் விதவிதமாக பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன.
ஒரு நீங்கள் ஆர்வமாக பார்ப்பீர்களே இந்த விநாயகர் இந்த வாகனத்தில் இருக்கிறார் சிங்கமுகமாக இருக்கிறார் என பல காலத்திற்கு ஏற்றார் போல விநாயக சிலைகளை செய்து அதை பிரதிஷ்டை செய்து வணங்கி பிறகு ஊர் மக்கள் ஒன்று கூடி ஆட்டம் பாட்டத்துடன் ஆற்றில் அல்லது கடலில் கரைக்கிறோம் ஊர்வலமாக செல்லும் எத்தனை விநாயகர் சிலைகளை பார்க்கப்போகிறோம் என உங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறது இல்லையா..?
இந்த ஆண்டும் பல பல வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகளை பார்த்து மகிழ்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு விநாயக சதுர்த்தியினை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள் குட்டீஸ்களா!