விநாயகரின் தோற்றம் மனித வாழ்வியலுக்குச் சொல்லும் அற்புதமான தத்துவம்!

விநாயகர் உருவத்தின் பின்னால் மறைந்துள்ள வாழ்க்கைப் பாடங்கள் என்னென்ன?
விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,
விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,Image credit: pixabay
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on

விநாயகர் என்றாலே நம் நினைவுக்கு வருவது யானை முகமும், பெரிய காதுகளும், சிறிய கண்களும், ஒற்றைத் தந்தமும், பெருவயிறும்தான். இவை வெறும் அலங்காரத்துக்காக அமைந்த உருவ அம்சங்கள் அல்ல. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஆழமான வாழ்க்கைத் தத்துவம் மறைந்திருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே விநாயகரின் உருவம் அழகாகக் கற்றுத்தருகிறது.

விநாயகரின் பெரிய காதுகள், மற்றவர்கள் பேசுவதை அதிகமாகக் கேட்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன. நாம் பேசுவதற்கு முன்பு கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் கூறும் வார்த்தைகளில் நமக்குப் பிடித்தவை மட்டுமல்லாமல், நம்முடைய தவறுகளைச் சுட்டிக்காட்டும் கருத்துகளையும் பொறுமையாகக் கேட்கவேண்டும். நல்ல செவியே நல்ல அறிவுக்கு வழிகாட்டுகிறது.

அவருடைய சிறிய கண்கள், கவனத்தையும் ஒருமுகச் சிந்தனையையும் உணர்த்துகின்றன. உலகில் ஏராளமான கவனச்சிதறல்கள் இருந்தாலும், நாம் செய்ய வேண்டிய செயலின் மீது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும். பெரிய விஷயங்களைப் பார்க்கும் கண்கள் மட்டுமல்ல; சிறிய விஷயங்களைக் கூட கவனமாகப் பார்க்கும் திறனும் வெற்றிக்கு அவசியம்.

விநாயகரிடம் காணப்படும் ஒரு தந்தம், வாழ்க்கையில் தேவையற்றதை விட்டுவிட்டு, தேவையானதை மட்டும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை நினைவூட்டுகிறது. மகாபாரதத்தை எழுதியபோது விநாயகர் தனது தந்தத்தை எழுத்தாணியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மரபும், அறிவுக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கையில் சில நேரங்களில் நம்முடைய விருப்பங்களையும் சௌகரியங்களையும் விட்டுக் கொடுத்து உயர்ந்த நோக்கத்தை அடைய வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
வீடியோ காலில் இறுதிச்சடங்கு: உணர்வுகளை இழந்து நிற்குதா மனித உலகம்?
விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,

அவருடைய பெரிய வயிறு, வாழ்க்கையில் கிடைக்கும் நல்லதையும் கெட்டதையும் உடனடியாக வெளிப்படுத்தாமல், பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பிறர் சொல்வதையெல்லாம் மனதில் போட்டு குழம்பாமல், அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.

அதேபோல், விநாயகரின் யானைத் தலை, வலிமையுடன் கூடிய அறிவையும், தடைகளைத்தாண்டும் திறனையும் நினைவூட்டுகிறது. பெரிய உடலும் சிறிய எலியும் இணைந்திருப்பது, வாழ்க்கையில் பெரியவராக இருந்தாலும் சிறியவர்களை மதிக்கவேண்டும் என்ற பணிவையும் உணர்த்துகிறது.

விநாயகரின் உருவத்தில் இருக்கும் தும்பிக்கையும் ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறது. யானையின் தும்பிக்கை வலிமையான மரக்கிளையையும் தூக்க முடியும். அதே நேரத்தில் சிறிய பொருளையும் மென்மையாக கையாள முடியும். அதே போல நாமும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிரச்னை பெரியதாக இருந்தால் துணிவுடன் எதிர்கொள்ளவும், சிறிய விஷயமாக இருந்தால் பொறுமையுடன் அணுகவும் தெரிந்திருக்க வேண்டும். விநாயகரின் மூஷிக வாகனம் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துகிறது. எலி எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதைப்போல மனித மனமும் ஆசைகளின் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கும்.

விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,
விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,Image credit: pixabay

பணம், புகழ்,பதவி, பொருள் என எதை அடைந்தாலும் அடுத்த ஆசை தோன்றி விடுகிறது. ஆசைகளுக்கு அடிமை ஆகாமல் அவற்றை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதே உண்மையான வெற்றி.

அவரது அமைதியான முகமும் புன்னகையும் எத்தனை தடைகள் வந்தாலும் மன அமைதியை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. ஆனால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஒவ்வொருவரிடமும் வளர முடியும்.

கோபத்தில் எடுக்கும் முடிவுகளைவிட அமைதியாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே பொரும்பாலும் சிறந்ததாக அமையும்.. விநாயகர் தடைகளை நீக்கும் தெய்வம் என்று போற்றப்படுகிறார். ஆனால் தடைகள் அனைத்தும் வெளியில் இருந்து மட்டுமே வருவதில்லை.

பயம், சோம்பல், கோபம், பொறாமை, அவநம்பிக்கை போன்றவை நமக்குள் இருக்கும் தடைகள். அவற்றை வெல்வதற்கான அறிவையும் துணிவையும் வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை பாதையில் நம்மால் நம்பிக்கையுடன் முன்னேற முடியும்.

விநாயகரின் கால்களும் நமக்கு ஒரு செய்தியை தருகின்றன. யானையின் பெரிய கால்கள் உறுதியையும் நிலைத்தன்மையையும் குறிக்கின்றன. வாழ்க்கையில் எவ்வளவு உயரம் சென்றாலும் நம்முடைய அடித்தளம் வலிமையாக இருக்கவேண்டும். வெற்றி கிடைத்தவுடன் தலைக்கனம் கொள்ளாமல் பணிவுடன் இருப்பது அவசியம்.

விநாயகரின் நான்கு கரங்கள், மனிதன் அறிவு, செயல், அன்பு, பொறுப்பு ஆகியவற்றை சமநிலையுடன் கையாள வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகக் கொள்ளலாம். ஒரு கையில் இருக்கும் ஆயுதம் தீமையை அகற்றும் துணிவையும், மற்றொரு கையில் இருக்கும் பாசக் கயிறு நம்மை நல்வழியில் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:
முதுமையில் சுய அன்பை மீட்டெடுப்பது எப்படி? இனி உங்களுக்காக வாழும் பொற்காலம்!
விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,

ஆசீர்வதிக்கும் கை நம்பிக்கையையும், மற்றொரு கை இனிமையான உணவை ஏந்துவது வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சி களையும் மதிக்கச் செய்கிறது. இவ்வாறு விநாயகரின் ஒவ்வொரு உறுப்பும் நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு குறியீடாகவே தெரிகிறது. அவரை வணங்கும்போது இந்த பாடங்களையும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால் வழிபாடு வெறும் சடங்காக இல்லாமல் வாழ்வியல் பயிற்சியாக மாறும்.

விநாயகரை வழிபடுவது என்பது அவருடைய உருவத்தைப் பார்ப்பதோடு முடிந்துவிடக் கூடாது. பெரிய காதுகள் கேட்கவும், சிறிய கண்கள் கவனிக்கவும், ஒரு தந்தம் தியாகம் செய்யவும், பெரிய வயிறு பக்குவமாக வாழவும் கற்றுத்தருகின்றன. விநாயகரின் உருவமே நம் வாழ்க்கைக்கான அழகான வழிகாட்டி.

குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளிலும் மன உறுதியைக் கைவிடாமல், தடைகளைத் தாண்டி இலக்குகளை நோக்கிச் செல்லும் துணிச்சலையும் பக்குவத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தியானம் வாழ்க்கையை மாற்றுமா? ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
விநாயகர் தத்துவம் - Vinayagar Philosophy,
logo
Kalki Online
kalkionline.com