நம்பினார் கெடுவதில்லை
நான்குமறை தீர்ப்பு!
நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு!
பசிக்கு விருந்தாவான்!
நோய்க்கு மருந்தாவான்!…
என்பது திரைப்படப் பாடல் மட்டுமல்ல; எளிய வேதமும் அதுதான்!
நம்பிக்கையுடன் கடின உழைப்பும், நன்றி பாராட்டும் நல்ல மனதும் அமைந்து விட்டால், அவர்கள் வாழ்வில் உச்சத்தை அடைவார்கள் என்பதே உலக வரலாறு!
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஊழைக் கூட, அதாவது விதியைக்கூட வெற்றி கொள்ளும் உபாயமாகக் கூறுவது இதைத்தான் - சோர்வு அடையாமல், காலந்தாழ்த்தாது உழைக்க வேண்டும் என்பதைத்தான்!
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
அவரே மேலும் சொல்வது ஒன்றும் உண்டு. இந்தப் பூவுலகத்தையே தனதாக்கிக் கொள்ள விரும்புபவர் மனக்குழப்பம் இன்றி தக்க காலத்திற்காகக் காத்திருப்பர் என்கிறார்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்மிடம் எவ்வளவு திறமையும், நம்பிக்கையும், கடின உழைப்பும், நன்றியறிதலும் இருந்தாலும், எதையும் நல்ல நேரம் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதைத்தான்!
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
நமது முன்னோர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! ஒவ்வொரு நாளிலும் அந்த நல்ல நேரம் எது என்பதையும், ஒவ்வொரு செயலைச் செய்யவும் உகந்த நேரம் எது என்பதையும், விலக்க வேண்டிய சாதகமற்ற நேரம் எது என்பதையும் சரியாகவே கணித்து, நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
ஆமாங்க! ராகு காலம், எம கண்டம், குளிகை போன்றவைகளும், ஓரைகளுந்தான் அவை.
ஸ்வர்பானு என்ற அசுரன், தேவவேடத்தில் தோன்றி, அழிவற்ற வாழ்வு தரும் அமிர்தத்தை அருந்தி விடுகிறான்! ஆனாலும் பிடிபட்டு விடுகிறான். தண்டனையாக, விஷ்ணு தன் வட்டு சுதர்சன சக்கரத்தால் அவன் உடலை இரண்டு துண்டுகளாக்கி விடுகிறார். அதில் ஒன்று ராகுவாகவும், மற்றது கேதுவாகவும் ஆனதாக வரலாறு கூறுகிறது. இரண்டுமே தீய கிரகமாகக் கருதப்படுவதுடன் அவற்றின் செல்வாக்கு அதிகமாக உள்ள நேரம் சாதகமற்றதாகவும் சொல்லப்படுகிறது. எனவேதான் அந்த நேரங்களை ஒவ்வொரு நாளிலும் கணக்கிட்டு அதனை விலக்கச் சொல்கிறார்கள்.
சூரிய உதய நேரமான காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையுள்ள 12 மணி நேரத்தை எட்டாகப் பிரித்து, முதல் ஒரு பிரிவை ஒதுக்கி விட்டு, பிறவற்றை 7 நாட்களுக்குமாகப் பகிர்ந்துள்ளார்கள். இவை ஒவ்வொன்றும் 90 நிமிடங்களை எடுத்துக் கொள்வதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ராகு காலத்தில், புதிய தொழில்கள் ஆரம்பிப்பது, சுப காரியங்களுக்கான பேச்சை ஆரம்பிப்பது, சுப காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது நலம் என்கிறது சாஸ்திரம்.
ஆனால் எமகண்டத்தில் இவற்றையெல்லாம் செய்யத் தடையேதுமில்லை என்கிறது.
குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தச் செயலும் மீண்டும் மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. எனவே திருமணம், இறந்த உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்றவற்றைக் குளிகை நேரத்தில் தவிர்ப்பது நலமாம்!
யாம் கூறியுள்ளது ஒரு துளியே! இவற்றைப் பற்றிய விபரங்கள் கடல் அளவு உள்ளன.
ராகு காலம், புதிதாக எதையும் தொடங்க சாதகமற்ற காலம் என்பதால், ஒவ்வொரு நாளும் அதன் நேரத்தை எளிய பாடல் மூலம் நாம் மனதில் இறுத்தலாம். இதோ அந்தப் பாடல்:
திருவிழா சந்தடியில்
வெளியில் புகுந்து
விளையாடச் செல்வது
ஞாயமோ?
தி, ச, வெ, பு, வி, செ, ஞா என்பவை வார நாட்களின் முதல் எழுத்துக்கள்! திங்கட் கிழமை 7.30 மணிக்குத் தொடங்கும் ராகுகாலம் 9.00 மணி வரை தொடரும். சனிக்கிழமை 9 - 10.30; வெள்ளிக் கிழமை 10.30 - 12; புதன்அன்று 12 - 1.30; வியாழனில் 1.30 - 3; செவ்வாயன்று 3 - 4.30 மற்றும் ஞாயிறன்று 4.30 - 6.
மேற்கண்ட சிறு பாடலை மனதில் பதித்து விட்டால், ராகு காலம் பார்க்க நேர்கையில் பஞ்சாங்கம், காலண்டர், டைரி போன்றவற்றைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது!
எதையும் எளிதாக்கிக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்!