
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்,” இது காவியம். ஆனால், இது ஏதும் அறியாது தூய்மையே ஒரு வடிவெடுத்தாற்போல் அண்ணன் ராமனைத் தவிற வேறு உலகமே அறியாத லக்ஷ்மணன் … தாயை விட்டுத், தகப்பனை விட்டு, அரண்மனை சுக போக வாழ்வை விடுத்து, அன்பு மனைவியை விட்டு , அண்ணன் ராமனுக்கு துணையாகத் தானும் 14 ஆண்டுகள் கானகம் சென்று, உண்ணாமல், உறங்காமல் சேவகம் செய்த இளைய செம்மல் லக்ஷ்மணனைக் கண்டு காதல் கொண்டாள் ஊர்மிளை. இப்படியும் இருந்திருக்கலாமோ அல்லது இருந்திருக்கக் கூடாதா என்ற கற்பனையின் விளைவே இச்சிறுகதை....
ஊர்மிளையும் நோக்கினாள்.
“அக்கா, யாரை அப்படிப் பார்க்கிறீர்கள்?“ என்றாள் ஊர்மிளா தேவி.
“என்ன?”
“அதோ, வீதியில் பொன்னிறமாக ஐந்து தலை நாகத்தைப் போல ஒருவன் போகிறானே, அவன் அருகில் செல்பவனைத்தான் சொல்கிறேன்."
“யாரை?”
“அவன் தான் அக்கா... மலையைப் போன்ற இரு தோள்கள், வீர வில், அம்பறாத்தூணி, இவைகளுக்கு நடுவே பொன்னையொத்த முகம், அதில் இழையோடும் சிறு கோபம்… சந்தேகமில்லை, இவன் ஐந்து தலை நாகமே தான்!”
“ஊர்மிளை, எனக்கு ஒரு சந்தேகம்...”
“என்ன அக்கா?”
“நீ, நான் கண்டவனைப் பற்றிப் பேசுகிறாயா, அல்லது, நீ கண்டவனை வர்ணிக்கிறாயா?”
பதிலேதும் சொல்லாமல் முகம் சிவந்து தலை குனிந்தாள் ஊர்மிளை.
"வீதியில் கண நேரமே பார்த்தவனிடம் இவளுக்கு இத்தனை சொந்தமா? இது சாத்தியமா? ஆம் என்றுதான் தோன்றியது. தன் மனமும் அதோ அங்கு கடல் வண்ணமாய், கம்பீரமாய், சிம்மத்தைப் போல நடந்து செல்லும் பேரழகனின் பின்னாலல்லவா சென்றுகொண்டிருக்கிறது? யாரவன்? எங்கு பார்த்திருக்கிறோம் இவனை? நிச்சயம் எங்கோ பார்த்துத்தான் இருக்கிறோம்! கடலின் அருகே, ஒரு ஐந்து தலை நாகத்தின் மேல் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு... சீச்சீ! இது என்ன அதீதமான கற்பனை! யாராவது பாம்புப் படுக்கையில் சயனிப்பார்களா?... இவன் செய்வான் என்று தோன்றியது. அந்த நாகம் கூட ஊர்மிளா வர்ணித்தவன் தானோ?"
சகோதரிகள் இருவரும் ஒருவர் மனதை மற்றவர் அறிந்ததால் முகம் சிவந்து , மறுபடியும் வீதியைப் பார்த்தனர். உயிரைக் கவர்ந்து சென்றவர்களைக் காணோம்.
இனிமைக்கும், வேதனைக்கும் ஒருங்கே உரித்தான அந்த அந்தி மாலைப் பொழுதின் மௌனத்தைக் கலைத்தது ஊர்மிளாவின் குரல்.
“இப்படிக் குற்றுயிராக நம்மை விட்டு செல்வதற்கு பதில், கருணைக் கொலை செய்திருக்கக் கூடாதா அந்த பாதகர்கள்!“ என்றாள் ஊர்மிளா.
“இப்படி பேசிப் பேசியே பொழுதைக் கழிக்காமல், ஏதாவது செய்யலாமல்லவா?”
“என்ன செய்ய முடியும் அக்கா? நாளை சுயம்வரம்” என்று ஊர்மிளா ஞாபகப்படுத்தினாள். “நூறு நூறு அரச குமாரர்கள் வந்து காத்திருக்கின்றனர். அதில் எவன் சிவ தனுஸை வளைத்து நாணேற்றினாலும், மணப்பெண் ஆக வேண்டியவள் நீ!”
ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய், “வா என்னுடன்,” என்று ஊர்மிளையை இழுத்துக் கொண்டு, அம்பாள் பவானியின் ஆலயத்துக்கு விரைந்தாள்.
“தாயே! அவர் யாரென்றே தெரியாமல் என் மனம் அவரோடு ஐக்கியமாகி விட்டது. தூய்மை நிறைந்த என் உள்ளம் இனி யாரையும் மனதாலும் தீண்டாது. என்னைக் காத்து ரட்சிப்பாய்!”
சகோதரிகள் இருவரும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
குருவுடன் நீல வண்ணனும், பொன் வண்ணனும் தங்கியிருந்தனர். நீலமேக சியாமளன், நித்ரா தேவியின் வரவுக்காகக் காத்திருந்தான். அனுதினமும் ஆர்வத்துடன் அவனை ஆட்கொள்ளும் அந்த தேவி, அன்று வேறொறு மங்கை நல்லாளுக்குத் தோற்றுப் பின்வாங்கி விட்டாள். வீதியில் கண நேரமே பார்த்திருந்தாலும், பொன்னை உருக்கியது போன்ற அவள் வடிவமும், தீப்பிழம்பை மங்கச் செய்யும் ஒளி பொருந்திய அந்த வதனமும் அவன் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடியேறி விட்டது. வழக்கத்திற்கு விரோதமாய் தனக்கு முன்னதாக உறங்கிவிட்ட தன் இளையோனைப் பார்த்து, “தம்பி ! நீயல்லவோ பாக்யவான்! மனதில் சலனமில்லை, அதனால் தூங்குகிறாய். என் மனம் அந்த வீதியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. மன நிம்மதியை முழுவதுமாய் இழந்துவிட்டேன்…” என்று புலம்பினான். இரவு மெல்ல நகர்ந்தது.
மறுநாள்…. அரசர்கள் நிறைந்த சபா மண்டபத்தில் வீற்றிருந்த சக்கரவர்த்தி ஒருவர், ஆம்மண்டபத்தின் நடுவில் இருந்த மஹா பெரிய தனுஸைச் சுட்டிக்காட்டி, “இந்த வில்லை வளைத்து நாண் ஏற்றுபவனுக்கு என் மகளை கன்யாதானம் செய்து கொடுப்பேன்”, என்று அறிவித்தார்.
எண்ணிலடங்கா ராஜ்குமாரர்களுக்கு மத்தியில், தன் உள்ளம் கவர் கள்வனைக் கண்டாள் அரசகுமாரி. ஊர்மிளா தேவியும் பெரும் வியப்புடன் அவ்விருவரையும் அடையாளம் கண்டு கொண்டாள்.
கையில் மாலையுடன் நிற்கும் அவளைக் கண்டு, அவனும் முறுவல் பூத்தான். ராஜ்குமாரர்கள் ஒவ்வொருவராக வில்லைத் தூக்க முயன்று தோற்றனர்.
அவன் முறை வந்தது. குருவின் ஆக்ஞைப்படி, சிவ தனுசை அணுகி, ஒரு பூமாலையைப் போல் இலகுவாகக் கையிலெடுத்து, வளைத்து, நாணேற்றி, அம்முயர்ச்சியில் அவ்வில் பெரும் சத்தத்தோடு முறித்ததெல்லாம், நொடியில் நூற்றில் ஒரு பங்கு நேரத்தில் நடந்து முடிந்தது.
உப்பரிகையில் கையில் மணமாலையுடன் நின்ற அரசகுமாரியைப் பார்த்து ஊர்மிளா தேவி, அளவில்லா உவகையுடன்,
“அக்கா! இவர் தானே… அவர்?” என்று வினவினாள்.
“ஊர்மிளை! அங்கு அவனருகில் நிற்கிறானே, அவன் தானே நாகதேவன்?” என்றாள் குறும்பு மிளிர.
இளவரசிகள் கலகலவென்று நகைத்த ஒலி சற்று பலமாகவே ஒலித்தது.
தந்தை ஜனக மகாராஜன் சமிக்ஞை செய்ய, உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து அந்தக் கல்யாண ராமனின் கழுத்தில் மாலையிட்டாள் சீதா தேவி.
பின் வந்த சில நாட்களில் ஒரு நன்னாளில், உண்ணா நோன்பினன், உறங்கா வில்லி, லக்ஷ்மணனுக்கு மாலையிட்டாள் ஊர்மிளா தேவி.