

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்து நாட்காட்டியில், அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் 11-வது திதியாகும். இது பெருமாள் (மகாவிஷ்ணு) வழிபாட்டிற்குரிய மிகச் சிறந்த விரத நாளாகும்.
மாதத்திற்கு இரண்டு முறை (வளர்பிறை மற்றும் தேய்பிறை) என ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனித்துவமான பலன்கள் உண்டு. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்பட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆனி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த இந்த நாட்களில் முழு ஈடுபாட்டுடன் விரதம் மேற்கொள்வது பாவங்களைப் போக்கி, மன அமைதியைத் தருவதோடு முக்தி பேற்றையும் (வைகுண்ட பதவி) அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.
ஆனி மாத யோகினி ஏகாதசி (தேய்பிறை) கடுமையான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. குபேரனின் சாபத்தால் அவதிப்பட்ட ஹேமமாலி என்ற யக்ஷன், மார்க்கண்டேய முனிவரின் அறிவுரைப்படி யோகினி ஏகாதசி விரதம் இருந்து தனது கொடிய சரும நோய்களிலிருந்து விடுபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
88,000 பிராமணர்களுக்கு அன்னதானம் செய்த பலன் இந்த யோகினி ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான (2026) யோகினி ஏகாதசி விவரம்:
இந்த ஆண்டு யோகினி ஏகாதசி ஜூலை 10-ம்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.
ஏகாதசி திதி தொடக்கம்: ஜூலை 10-ம்தேதி, காலை 08:16 மணிக்கு தொடங்கி
ஏகாதசி திதி முடிவு: ஜூலை 11-ம்தேதி, அதிகாலை 05:22 மணிக்கு முடிவடைகிறது.
ஜூலை 10-ம்தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசியுடன் சேர்ந்து முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை 10:07 மணி வரை பரணி நட்சத்திரமும், அதன்பின்பு கிருத்திகை நட்சத்திரமும் தொடங்குகிறது.
கிருத்திகை திதி தொடக்கம்: ஜூலை 10-ம்தேதி, காலை 10:07 மணிக்கு தொடங்கி
கிருத்திகை திதி முடிவு: ஜூலை 11-ம்தேதி, காலை 08:38 மணிக்கு முடிவடைகிறது.
கிருத்திகை மற்றும் ஏகாதசி ஒரே நாளில் வந்தால், அன்று ஹரி (பெருமாள்) மற்றும் ஹரன் (முருகன்) இருவரையும் ஒரே சமயத்தில் வழிபடும் பேறு கிடைக்கிறது.
அந்த வகையில் செல்வ செழிப்புக்கு உரிய ஜூலை 10-ம்தேதி வெள்ளிக்கிழமை ஆனி மாத தேய்பிறை ஏகாதசி திதியும் அதோடு சேர்த்து கிருத்திகையும் பிறக்கவிருக்கின்றது.
இத்தனை சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த நாளில் எவர் ஒருவர் முருகப்பெருமான் வழிபாட்டையும், பெருமாள் வழிபாட்டையும் தவறாமல் செய்கின்றாரோ, அவருக்கு நிச்சயம் செய்த பாவங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்தைத் தொடங்க வேண்டும். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களாலும், மகா விஷ்ணுவிற்கு துளசி இலைகள், மஞ்சள் நிற மலர்களைச் சாற்றியும், தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பெருமாள் வழிபாடு: உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள பெருமாள் (மகா விஷ்ணு) அல்லது கிருஷ்ணர் படத்திற்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, "ஓம் நமோ நாராயணாய" அல்லது "ஓம் நமோ பகவாதே வாசுதேவாய" என்ற மந்திரங்களை ஜபிக்க வேண்டும். பகவத் கீதை படித்தல் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது மிகவும் நல்லது. அன்றைய தினம் முழுவதும் ஏகாதசிக்குரிய மந்திரங்களை (ஓம் நமோ நாராயணாய) ஜபிக்கவும்.
விரதம், உணவு முறை: விரதங்களில் சில விரதங்கள் கடுமையான விதிமுறைகளை கொண்டவை. அவற்றில் ஒன்று ஏகாதசி விரதம்.
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விரத விதிகளை முறையாக பயன்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் மட்டுமே அதன் முழு பலனையும் பெற முடியும். பொதுவாக விரதங்கள் சூரிய உதயத்தின் போது துவங்கி, மாலையில் நிறைவு செய்வார்கள். ஆனால் ஏகாதசி விரதத்தை, ஏகாதசி திதி துவங்கும்போது விரதத்தை துவங்கி, துவாதசி திதியில் பாரனை செய்யும் நேரத்தின் போது நிறைவு செய்ய வேண்டும். அதோடு கடுமையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
ஏகாதசி அன்று பெருமாளை வழிபாடு செய்பவர்கள் முழு உணவைத் தவிர்த்து, பால், பழங்கள் அல்லது துவாதசி உணவுகளை மட்டும் உட்கொள்ளலாம். அதாவது அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவற்றைத் தவிர்த்து, பால், பழங்கள், அல்லது துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது வழக்கம். ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்து, மறுநாள் (துவாதசி) காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகு, பூஜை செய்து துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
பலன்கள் : இந்த விரதத்தின்போது உணவு தவிர்ப்பது அல்லது எளிமையான உணவுகளை உட்கொள்வது மன அமைதியையும், ஆன்மீக சிந்தனையையும் மேம்படுத்துகிறது.
ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் உட்பட அனைத்தும் நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும். பெரிய அளவில் புண்ணியத்தை கொடுக்கும்.
வறுமையை அகற்றி, வாழ்வில் செல்வ வளத்தை பெருக்கும் ஆற்றல் கொண்டது. அன்றைய தினம் பிராமணர்கள், ஏழைகள் ஆகியோருக்கு கண்டிப்பாக தானம் வழங்க வேண்டும்.
முருகன் வழிபாடு: வரும் வெள்ளிக்கிழமை ஏகாதசியுடன் சேர்ந்து கிருத்திகையும் வருவதால் முருகனுக்கு விரதம் அனுஷ்டிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து விரதத்தைத் தொடங்கவும். பூஜை அறையில் முருகனின் படத்திற்கு செவ்வரளி அல்லது சிவப்பு நிற மலர்களை சாற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் அல்லது சண்முக கவசம் பாடி வழிபட வேண்டும்.
பால், பழம் மட்டும் உண்டு, நாள் முழுவதும் 'ஓம் சரவணபவ' மந்திரத்தை உச்சரித்து, மாலை 6 மணிக்கு முருகனுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது பழங்களை நைவேத்தியமாகப் படைத்து தூப, தீப ஆராதனை காட்ட வேண்டும். பின்னர் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசிப்பது சிறப்பு.
பலன்கள் : இந்த நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவதால், சகல ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும், எதிரிகளை வெல்லும் தைரியமும் கிடைக்கும். மேலும், குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.
வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 10-ம்தேதி, முருகப்பெருமான் மற்றும் பெருமாளை விரதம் அனுஷ்டித்து வழிபாடு செய்து அவர்களுடைய நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.