
இந்தியாவின் பல பகுதிகளிலும் விநாயகப் பெருமானுக்கு கோயில்கள் அமைந்துள்ளன. விநாயகரின் வடிவம் வித்தியாசமானது, அபூர்வமானது. அத்தகைய ஆயிரக்கணக்கான ஆலயங்களில் புகழ் பெற்ற (Famous pillayar temples) வித்தியாசமான சில ஆலயங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் திருக்கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகருக்கு அமைந்த ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோயில் குடையப் பெற்றுள்ளது. இத்தலத்தின் பிரதானமான விநாயகரான கற்பக விநாயகர் ஆறு அடி உயரத்தில் வடதிசை நோக்கி அமைந்து அருள்பாலிக்கிறார். கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளியாகவும் அமைந்துள்ளது. விநாயகரின் திருவுருவம் வடக்கு நோக்கியும், தும்பிக்கை வலது புறமாகவும் சுழித்து அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
மும்பையில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் இக்கோவில் 1801 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் செங்கல் கட்டிடமாக இருந்த இக்கோவில் இன்று மிகவும் புகழ் பெற்று ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் ஒரு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. முந்தி விநாயகர் கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் மூலவர் 20 அடி உயரம் மற்றும் 11 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான கோலத்தில் காட்சி தருகிறார். இவர் ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் என்றும் கூறப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் காணிப்பாக்கத்தில் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாவார். காணிப்பாக்கம் மூலவரான ஸ்ரீவரசித்தி விநாயகர் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கிறார். பொதுவாக விநாயகர் திருத்தலங்களில் மோதகம் அல்லது கொழுக்கட்டையினை நைவேத்யம் செய்து பிரசாதமாகத் தருவார்கள். ஆனால், அதிசயமாக இத்தலத்தில் கிணற்று நீரைப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
திருச்சிராப்பள்ளி நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. இக்கோவில் மலைக்கோட்டையின் உச்சியில் சுமார் 273 அடி உயரத்திலும் 437 படிகளோடும் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பழமையான பாறையின் மீது கட்டப்பட்ட ஒரு கோட்டை இது. திருச்சி மலைக்கோட்டை பாறையின் வயதோ சுமார் 340 கோடி ஆண்டுகள்! அதாவது இமயமலை பிறப்பதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாறை தோன்றிவிட்டது. டைனோசர்கள் பூமியில் வாழ்ந்தது சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஆனால், இந்தப் பாறை டைனோசர்கள் தோன்றுவதற்கு 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது.
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லத்திலிருந்து இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது கொட்டாரக்கரா என்ற ஊர். இங்கு கிழக்கேகரா சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சிவன். ஆனாலும் இத்தலத்தில் விநாயகர் மிகவும் புகழ் பெற்று விளங்குவதால், இக்கோவில் ஸ்ரீமஹாகணபதி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் உன்னியப்பம் பிரசாதம் பெரும்புகழ் பெற்றது.
இராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் மோத்தி டங்ரி விநாயகர் கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. 'மோத்தி' என்றால் முத்து. 'டங்ரி' என்றால் சிறிய மலை. மோத்தி டங்ரி மலையின் அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூலவர் உதயப்பூரில் இருந்து மகாராஜா முதலாம் மாதோ சிங்கால் கொண்டு வரப்பட்டவர். இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மகாராஜாவிடம் பணிபுரிந்த சேத் ஜெய்ராம் பாலிவால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தன் மேற்பார்வையில் இந்த ஆலயத்தை கி.பி.1761 ல் கட்டி முடித்தார். செந்தூர நிறத்தில் விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். விநாயகரை தரிசித்தவாறு அவருடைய வாகனமாக எலி அமர்ந்துள்ளது.