திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் 70 யானைகளுக்கு அன்னம் ஊட்டும் திருவிழா!

Aanayoottu festival in Vadakkunnathan temple
Aanayoottu festival in Vadakkunnathan templeImg Credit: Kerala Tourism
Published on

யானையூட்டு திருவிழா!

குழந்தைகளுக்கு, முதல் அன்னம் ஊட்டும் வழக்கம், அன்னப் பிரசன்னம் என்று கொண்டாடப்படுகிறது. குழந்தையைப் பொறுத்தவரை இந்த சம்பிரதாயம், அதன் வாழ்நாளில் ஒருமுறைதான். 

ஆனால் வருடா வருடம் யானைகளுக்கு அன்னம் ஊட்டும் பழக்கம், கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்குநாதர் கோயிலில் ஆடி மாதம் தோறும் இந்த வைபவம் கொண்டாடப்படுகிறது. ஆமாம், வைபவம்தான், 70 யானைகளுக்கு ஊட்ட வேண்டுமே! 

பொதுவாகவே கேரளத்தில் யானை வழிபாடு மிகவும் பிரசித்தம். உதாரணமாக, குருவாயூர் கோயிலில் யானைகளுக்கிடையே ஓட்டப் பந்தயம் வைத்து அதில் முதலில் வரும் யானையை அந்த ஆண்டு குருவாயூரப்பனை சுமந்து வரச் செய்து, அதைப் பெருமைபடுத்துவார்கள். 

திருச்சூரிலுள்ள வடக்குநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் யானையூட்டு நிகழ்ச்சி 16.07.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த 38 ஆண்டுகளாக நிகழும் இந்த கோலாகலத்தில், இந்த ஆண்டு 70 யானைகள் கலந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
குருவின் முக்கியத்துவமும், குரு பூஜையும்!
Aanayoottu festival in Vadakkunnathan temple

யானையூட்டுக்குப் போகுமுன் சுருக்கமாக வடக்குநாதர் கோயிலைச் சுற்றிப் பார்த்து விடுவோமா?

இந்த வடக்குநாதர் கோவிலுக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு என்று மூன்று திசைகளிலும் நுழைவாயில்கள் இருந்தாலும் வடக்கு நுழைவாயில்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கோவில் சம்பந்தப்பட்ட உற்சவங்கள், பூஜைகள் எல்லாமே வடக்கு திசை நோக்கிதான் செய்யப்படுகின்றன. அதனாலேயே இந்தத் தல இறைவன், வடக்குநாதர்!

கோவில் மிகப்பெரிய வளாகமாக அமைந்திருக்கிறது. 

இந்த வடக்குநாதரை வழிபட்டுதான் சிவகுரு -ஆர்யாம்பாள் தம்பதி, ஆதிசங்கரர் தங்களுக்கு மகனாகக் கிட்டும் பாக்கியம் பெற்றனராம். அதனாலேயே ஆதிசங்கரர் பூரண சிவகடாட்சம் கொண்டவராக விளங்கினாராம். 

கோவிலினுள் முதலில் நம்மை விநாயகர் வரவேற்கிறார். அடுத்தடுத்து மஹாவிஷ்ணு, ஸ்ரீராமர் மற்றும் ஐயப்பன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் கொலுவிருந்து நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

பிரமாண்ட தோற்றத்தில் வடக்குநாதர் பேரருள் புரிகிறார். பீடத்திலிருந்து லிங்கம் உயர்ந்து நிற்கிறது. வரிவரியாகத் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உச்சியில் மூன்றுதலை நாகம். 

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சுமார் பதினைந்து அடி உயரத்தில் பிரமாண்ட விளக்கின் நூற்றுக் கணக்கான கிளை விளக்குகளில், மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டுடன் நெய்யூற்றி, தீபமேற்றி கோயிலையே இயற்கையாக ஜொலிக்கச் செய்கிறார்கள். அத்தனை விளக்குச் சுடர்களும் காற்றில் மெல்ல அலைகின்றனவே தவிர, ஒன்றுகூட அணைவதில்லை என்பது ஈசனின் திருவிளையாடல்தானோ! ஆமாம், அரனன்றி ஓர் அணுவும் அசையாதல்லவா?

வடக்குநாதரை மானசீகமாக தரிசித்து விட்டு, இப்போது யானையூட்டு எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

Aanayoottu festival in Vadakkunnathan temple
Aanayoottu festival in Vadakkunnathan templeImg Credit: Medium

தந்திரி புலியன்னூர் சங்கர நாராயணன் நம்பூதிரி தலைமையில் பிரமாண்ட ஹோமம் இயற்றப்பட்டது. இது மெகா பெரிய ஹோமம்தான். 12 ஆயிரம் கிலோ தேங்காய்கள், 2000 கிலோ வெல்லம், 2000 கிலோ அவல், 50 கிலோ மலர்கள், 60 கிலோ எள், தேன் – எலுமிச்சை – கரும்பு ஒவ்வொன்றும் 50 கிலோ, 3000 கிலோ நெய் என்று ஹோமத்தில் இடப்பட்டன.

இதையும் படியுங்கள்:
வீடு கட்டுவதில் உள்ள பிரச்னைகள் அகல வழிபட வேண்டிய கோயில்!
Aanayoottu festival in Vadakkunnathan temple

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட யாகத்தைத் தொடர்ந்து கஜபூஜை நடைபெற்றது. அடுத்த நிகழ்வுதான் யானையூட்டு. இதற்காக மேற்கு கோபுர வாயில் வழியே 70 யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்தன. செறுமொக்கு ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி ஆரம்பித்து வைக்க, யானைகளுக்கு உணவு ஊட்டப்பட்டது. என்ன உணவு?

500 கிலோ சமைக்கப்பட்ட சாதம், அத்துடன் மஞ்சள், நெய், வெல்லம் என்று பெரிய பெரிய கவளமாக உருட்டி உருட்டி யானைகளின் வாய்க்குள் இட்டார்கள். இது தவிர, அன்னாசி, தர்பூசணி, வெள்ளரி, வாழை முதலான எட்டு பழ வகைகளையும் யானைகள் ருசித்து மகிழ்ந்தன. 

இந்தக் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தார்கள். (இது அவர்களுடைய வருடாந்திர வழக்கம்!) யானைக்கு உணவாயிற்று, இந்த யானையூட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு? அவர்களுக்கும் ஊட்டு உண்டு. ஆமாம், அத்தனை பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இறையம்சமாகவே கருதப்படும் யானைக்கு இவ்வாறு உணவளிக்கும் நிகழ்ச்சியைக் காண்போர் இல்லங்களில் என்றும் பஞ்சம், பட்டினி இருக்காது என்ற நம்பிக்கையும் கேரளத்தில் வலுவாக இருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com