ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் ஹாசனாம்பா கோவில்: அணையா தீபமும், அதிசயங்களும்!

ஹாசனாம்பா கோவில் - Hasanamba Temple
ஹாசனாம்பா கோவில் - Hasanamba Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோவிலின் சிறப்புகளோ அதிகம். கர்நாடகா மாநிலம் ஹாசன் (Hassan) நகரின் நடுவில் சக்தி தேவியான ஹாசனாம்பா (Hasanamba) எனும் அம்பிகை சுயம்பு வடிவில் அருள் பாலிக்கிறார்.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போசளப் பேரரசு காலத்தில் கிருஷ்ணப்ப நாயக்கரால் இக்கோவில் கட்டப்பட்டது. பாம்பு புற்று வடிவத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருப்பதுடன் கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது.

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது மட்டுமே இந்தக் கோவில் நடை திறக்கப்படும். தீபாவளி சமயத்தில் ஆண்டுக்கு 10 முதல் 14 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் ஹாசனாம்பா கோவிலின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. கோவில் நடை மூடப்படும் பொழுது அம்மனின் முன்பு ஏற்றப்படும் நெய் தீபம் பற்றியும் மற்றும் அன்னம் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் நிறைந்துள்ளன. இந்த வருடம் (2026) அக்டோபர் 29ஆம் தேதி திறக்கப்பட்டு நவம்பர் 12ஆம் தேதி கோவில் நடை மூடப்படுகிறது.

ஹாசனாம்பா கோவிலின் அதிசயங்களும் சிறப்புகளும்:

அணையாத தீபம்:

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விழா முடிந்து கோவில் நடை அடைக்கப்படும் பொழுது அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, நைவேத்தியமாக அன்னம் (சாதம்) மற்றும் அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலை இடப்படும் பூக்கள் எல்லாம் மீண்டும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு நடை திறக்கப்படும்போது அந்த நெய் தீபம் அணியாமல் எரிந்து கொண்டிருப்பதும், நைவேத்தியப் பொருளான அன்னம் கெடாமலும், மலர்கள் வாடாமலும் அப்படியே புதியதாக இருக்கும் என்பதும் இக்கோவிலின் முக்கிய அதிசயங்கள் ஆகும். முக்கியமாக இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாட்களில் கோவிலுக்கு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
"தலைமுறைகளைத் தாண்டி வெளிநாடுகளில் உயிர்ப்பெறும் இந்திய பாரம்பரியம்!"
ஹாசனாம்பா கோவில் - Hasanamba Temple

கோவில் திறக்கும் காலம்:

ஒவ்வொரு ஆண்டும் அஸ்வினி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை அன்று இக்கோவில் திறக்கப்பட்டு தீபாவளியின் 'பலிபாட்யாமி' நாளுக்கு மறுநாள் மூடப்படும். நடைதிறக்கப்படும் முதல் நாளும், நடை அடைக்கப்படும் கடைசி நாளும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இடைப்பட்ட நாட்களில் மட்டுமே இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

நகரத்தின் பெயர் காரணம்:

போசளப் (Hoysala) பேரரசு காலத்தில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் வீற்றிருக்கும் 'ஹாசனாம்பா' அம்மனின் பெயராலேயே இந்த ஊருக்கு 'ஹாசன்' என்ற பெயர் வந்தது. இங்கு கருவறையில் அம்மன் புற்று வடிவில் காட்சியளிக்கிறார். ஹாசனாம்பா என்பதற்கு சிரிக்கும் முகமுடைய தாய் என்று பொருள்.

ஹாசனாம்பா கோவில் - Hasanamba Temple
ஹாசனாம்பா கோவில் - Hasanamba Temple

மாமியார் மருமகள் கல்:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோவிலுக்கு நாள் தவறாமல் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கும் பெண்ணை அவளது மாமியார், வீட்டில் வேலை செய்யாமல் இங்கு என்ன செய்கிறாள் என்று அவளைப் பின்தொடர்ந்து வந்து பார்த்து அவளை அடிக்க, அப்பெண்ணோ வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு தோன்றி அவளுடைய மாமியாரைக் கல்லாக மாற்றி விட்டதாகவும் அந்த கல் தான் தற்பொழுது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோவிலில் காணப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

திருடர்கள் கோவில்:

ஹாசனாம்பா கோவிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை 4 திருடர்கள் திருடிச்செல்ல வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களைக் கல்லாகப் போகுமாறு சபிக்க, அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோவிலாக 'திருடர்கள் கோவில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோவில் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது.

புராண வரலாறு:

இக்கோவிலில் சப்த கன்னியர்களுக்கும் சிறப்பிடம் உள்ளது. சப்த கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வாரணாசியில் இருந்து இப்பகுதிக்கு வந்ததாகவும், அந்த சப்த கன்னியர்களில் சாமுண்டி, வாராஹி மற்றும் இந்திராணி ஆகிய மூவர் மட்டும் ஹாசன் நகரில் உள்ள இக்கோவிலில் நிலை கொண்டு இருப்பதாகவும், வைஷ்ணவி, கௌமாரி, மகேஸ்வரி அம்மன்கள் இக்கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைபெற்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

தீபாவளிக்கு முன்பும் பின்புமாக 14 நாட்கள் திறந்திருக்கும் இக்கோவிலில் 24 மணி நேரமும் அம்மனை தரிசிக்கலாம். கோவில் திறக்கப்படும் நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு விசேஷ தரிசன டிக்கெட்டுகள் உள்ளன. இவற்றை அதிகாரப்பூர்வ கோவில் இணையதளம் மூலமோ அல்லது கோவிலில் உள்ள கவுண்டர்களிலோ பெற்றுக் கொள்ளலாம்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து ஹாசன் 184 கி.மீ தொலைவில் உள்ளது. கோவிலுக்கு செல்ல நிறைய நகரப்பேருந்து வசதிகள் உள்ளன. பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து ஹாசன் ரயில் நிலையத்திற்கு பல ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து கோவில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
மணலில் மிதக்கும் பிரம்மாண்ட கோவில்: அங்கோர் வாட் பின்னால் உள்ள அறிவியல் என்ன?
ஹாசனாம்பா கோவில் - Hasanamba Temple