

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான அரவணை பாயசம் பலரது ஃபேவரைட். பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அல்லது குடும்பத்தில் ஒருவர் சபரிமலைக்கு சென்று வந்தால் அரவணை பாயசத்தை வாங்கி வந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொஞ்சமாக கொடுப்பார்கள். அதனை சாப்பிட்டதும் இன்னும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என எண்ண தோன்றும்.
இப்படித்தான் பலருக்கும் அரவணை பாயாசம் அறிமுகம் ஆகி இருக்கும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி 41 நாட்களுக்கு பின் சபரிமலை சென்று வருவார்கள். திரும்பி வரும்பொழுது வீட்டில் உள்ள அனைவருக்கும் அரவணை பாயசம் வாங்கி வரச்சொல்வார்கள்.
அரவணை பாயாசம் ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த அரவணை பாயசத்தை வீட்டிலும் தயார் செய்யலாம்.
கார்த்திகை மாதம் இதனை செய்து ஐயப்பனுக்கு படைத்து வழிபடலாம். அரவணை பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கேரள சிவப்பு அரிசி 200 கிராம்
வெல்லம் 400 கிராம்
தேங்காய் துண்டுகள் ஒரு கப்
சுக்குத்தூள் இரண்டு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு 100 கிராம்
தண்ணீர் நெய் தேவையான அளவு
செய்முறை:
அரவணை பாயாசம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பொடித்த வெல்லத்தை கரைக்கவும். பின்னர் அடுப்பில் வைத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி தேங்காய் துண்டுகளை போட்டு வறுக்கவும். தேங்காய் பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது அதே பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவேண்டும். அரிசியை நன்கு கழுவி ஐந்து முதல் ஆறு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
தண்ணீர் கொதித்து வந்ததும் அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து மூடி போட்டு அரிசியை வேகவிடவும். சாதம் வெந்து வந்ததும் கரைத்த வெல்லத்தை வடிகட்டி சேர்க்கவும்.
இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரிசியை நன்கு கலந்து விடவும். கூடவே சுக்குப்பொடியை சேர்க்கவும். பின்னர் 3 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். பாயாசம் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது வறுத்த தேங்காய் துண்டுகள் முந்திரி சேர்த்து கலந்து மூடி விடவேண்டும். பத்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து பார்த்தால் அரவணை பாயாசம் தயார்.
கேரள மட்டை அரிசி அதாவது சிவப்பு அரிசி இல்லை என்றால் வேறு சாதாரண அரிசியை பயன்படுத்திக் கொள்ளலாம். பாஸ்மதி அரிசியை சேர்க்கக்கூடாது. அரிசியை குக்கரில் வைக்கக் கூடாது பாத்திரத்தில் தான் வேகவைக்க வேண்டும். அரவண பாயசத்தில் பால் மற்றும் பருப்பு பொருட்கள் சேர்க்காததால் இவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
கடைகளில் வாங்குவதை விட சுத்தமாகவும் பாரம்பரிய நறுமணத்தோடும் உங்கள் கையாலேயே அரவணை பாயசத்தை தயார் செய்து, ஐயப்ப பக்தர்களின் விரத வழிபாட்டை நிறைவு செய்து குடும்பத்திற்கு தெய்வீக மகிழ்ச்சியைக் கொண்டுவரலாம்.