கோயில்கள் மற்றும் வீட்டு பூஜை அறையில் இறைவனுக்குப் படைக்கப்படும் பலதரப்பட்ட உணவுகள் 'பிரசாதங்கள்' எனப்படுகின்றன. உணவானது இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிறகு 'பிரசாதம்' என்று அழைக்கப்படுகிறது. உணவுகள் மட்டுமின்றி விபூதி, குங்குமம், புஷ்பம் மற்றும் தீர்த்தம் முதலானவையும் பிரசாதம் என்றே அழைக்கப்படுகின்றன.
பூஜையில் நைவேத்தியத்தைப் படைக்கும் போது வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள்களை நோக்கியும் நுனிப்பகுதியானது நம்மை நோக்கிய நிலையிலும் இருக்க வேண்டும்.
நைவேத்தியப் பிரசாதங்களை தயாரிக்கும் போது அதில் குறைந்த அளவே காரம், உப்பு, எண்ணெய் முதலானவற்றைப் பயன்படுத்த வேண்டும். தூய்மையான பசு நெய்யை அதிக அளவில் பயன்படுத்தலாம்.
பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, தனியா, வரமிளகாய், கருப்பு உளுந்து, கோதுமை மாவு, நவதானியங்கள், வெந்தயம், மிளகு, சுக்கு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, வெல்லம், ஏலக்காய், பால், நெய், நல்லெண்ணெய், கறுப்பு எள், பச்சைக் கற்பூரம், முந்திரி, திராட்சை, உப்பு முதலானவற்றைக் கொண்டு பிரசாதங்கள் கோவில்களில் உள்ள மடப்பள்ளிகளில் தயாரிக்கப்படுகின்றன.
கோவிலில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஒரு மரபு உண்டு.
பெரும்பாலோருக்கு பிரசாதத்தை தங்கள் வலது உள்ளங்கைகளில் பெற்று அந்த பிரசாதத்தை அப்படியே வாயில் கடித்துச் சாப்பிடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்வது தவறாகும். கோவில்களில் தரும் பிரசாதத்தை வலது கையில் வாங்கி இடது கையில் வைத்து பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிட வேண்டும்.
மேலும் இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதத்தை கீழே சிந்தாமல் பொறுமையாக சாப்பிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் பலவகையான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. இப்படியாக காஞ்சிபுரம் குடலை இட்லி, அக்கார வடிசில், ஸ்ரீமுஷ்ணம் கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம், அழகர் கோவில் தோசை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மண்டையப்பம், கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவில் அப்பம், பழநி பஞ்சாமிர்தம், பிள்ளையார்பட்டி மோதகம், பெருமாள் கோவில் புளியோதரை, சபரிமலை ஐயப்பன் அரவண பாயாசம், சிங்கபெருமாள் கோவில் மிளகு தோசை, ஆருத்ரா திருவாதிரைக் களி, ஸ்ரீரங்கம் சம்பார தோசை, ஆழ்வார்திருநகரி வங்கார தோசை, திருக்கண்ணபுரம் முனையதரன் பொங்கல், ஸ்ரீஹயக்ரீவ பண்டி, கருடாழ்வாருக்கு உகந்த அமிர்தகலசம், ஸ்ரீரங்கம் அரங்கன் கோவில் அரவணை, திருப்புல்லாணி பாயாசம் என புகழ் பெற்ற பல கோவில் பிரசாதங்கள் உள்ளன.
மேலும் பெருமாள் கோவில் சர்க்கரைப் பொங்கலும் தயிர்சாதமும் மிகவும் புகழ் பெற்றவை. நவராத்திரி சமயத்தில் விநியோகிக்கப்படும் சுண்டல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பிரசாதமாகக் கருதப்படுகிறது.
இறைவனுக்குப் படைத்து பின்னர் பக்தர்களாகிய நமக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. கோயில்களில் சிறிதளவே தரப்படும் இத்தகைய பிரசாதங்களை நாம் சாப்பிட்டதும் பசி முழுவதும் அகன்று வயிறு நிறைந்த ஒருவித திருப்திகரமான உணர்வு நமக்கு ஏற்படும். இது இறைவனின் அருளாகும்.
கோயிலில் இறைவனுக்குப் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் தெய்வீக சக்தி நிறைந்த பிரசாதத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் வீணாக்கக்கூடாது. கீழே சிந்தக்கூடாது. இது மிகவும் முக்கியம்.
பிரசாதம் மட்டுமின்றி எந்த ஒரு உணவையும் வீணாக்கக் கூடாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.