'கண்'ணும் கருத்துமாக இருங்கள் கண்மணிகளா!

Eye problem
Eye problem
Published on

உலக அளவில் ஒரு பில்லியன் மக்கள் பார்வை குறைபாட்டுடன் இருக்கின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பார்வை குறைபாடு வருவது சகஜம் தான். ஆனால் தற்காலத்தில் சிறு சிறு குழந்தைகள் கூட பார்வை குறைபாட்டு நோயினால் தவிக்கின்றனர். அவர்களால் பள்ளிப் பாடங்களைச் கவனம் செலுத்தி வாசித்துப் படிக்க முடியவில்லை. சிறிது நேரம் படித்த உடனேயே அவர்கள் கண்கள் சோர்வடைந்து விடும். தூக்கம் வருகின்றது என்று சொல்கிறார்கள்.

காற்று மாசு கண்ணுக்கு கேடு. கோடை காலத்தில் சாலையில் போகும்போது வெயிலும் தூசும் சேர்ந்து கண்ணையும் உடம்பையும் பாதிக்கின்றது. சாலைகளின் வாகனப் புகை கண்களில் அரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வாகன புகையிலிருந்து வரும் ஹைட்ரோ கார்பன் கெமிக்கல்கள், குறிப்பாக C4 C5 ஆகியவை தொடர்ந்து கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்புக்கு மேல் பாதிப்பாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கண்ணில் அரிப்பு, உறுத்தல்:

கண்களில் அரிப்பு அல்லது உறுத்தல் இருந்தால் காண்டாக்ட் லென்ஸ் அணிவதை நிறுத்தி வைக்க வேண்டும். கண்களுக்கு மேக்கப் போடவும் கூடாது. சில வேளைகளில் மேக்கப் பொருட்களாலும் கண்களில் அரிப்பு உறுத்தல் ஏற்படும்.

கருப்புக் கண்ணாடி:

சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் போனாலும் பேருந்து மற்றும் கார்களில் சென்றாலும் நடந்து சென்றாலும் கண்களுக்குப் பாதுகாப்பாகக் கருப்புக் கண்ணாடி அணிய வேண்டும். அல்லது தூசுகள் கண்ணில் படாத வகையில் முழுவதுமாக மூடி இருக்கக் கூடிய கண்ணாடி அணிவது சிறந்தது.

வெயில் காலங்களில் வெளியே செல்லும்போது வாகனப் புகை, தொழிற்சாலை புகை மற்றும் காற்று மாசு, தூசு ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாக்க கருப்பு கண்ணாடி அணியலாம். இதுவும் தரமான தயாரிப்பாக இருக்க வேண்டும். தெருவில் விற்கும் கண்ட கண்ட கருப்பு கண்ணாடியும் வாங்கி அணியக்கூடாது.

காற்று மாசு:

காற்று மாசு காரணமாக தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை கண் உறுத்தும். இவ் உறுத்தலுக்கு ஆளானவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களைத் தேய்த்து கொண்டே இருப்பார்கள். 2 மைக்ரானுக்கு குறைவான அளவுடைய தூசியோ புகையோ கண்ணில் பட்டால் உறுத்தல் அதிகம் இருக்காது. இதைவிடப் பெரிய அளவிலான தூசு கண்ணில் பட்டால் கண்கள் உறுத்தும் அல்லது அரிக்கும்.

வாகனப் புகை கண்ணுக்குப் பகை:

சாலையில் போகும் வாகனங்கள் ஹைட்ரோ கார்பன் மற்றும் நைட்ரிக் ஆக்சைடை புகையாய் கக்கும். வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் ஹைட்ரோ கார்பன் அளவு கூடுதலாக இருந்தால் புகையிலும் கூடுதலாக இருக்கும். இது தவிர சல்ஃபர் டையாக்சைடு மற்றும் ட்ரயாக்சைடு போன்றவற்றாலும், சோடியம் குளோரைடு மற்றும் காற்றுத் துகள்கள் சேர்வதாலும் கண் உறுத்தல் ஏற்படும்.

பெரிய நகரங்களில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டயக்சைடு, சல்பர் டையாக்சைடு, ஆர்செனிக், ஆஸ்பெஸ்டாஸ், பென்சீன் போன்ற வேதிப்பொருட்கள் காற்றில் பரவி கண்ணில் உறுத்தலை உண்டாக்கும். காற்றில் உள்ள ஆக்சிடென்ட் கண்ணில் பட்டால் கண்ணின் தசைகள் பாதிக்கப்படும்.

கண் பாதிப்புகள்:

காற்று மாசு காரணமாக கண்ணின் வெள்ளை விழி சிவப்பாக மாறும், கண் உறுத்தும், கண்களில் தண்ணீர் வடியும், சிலருக்கு விழி ஓரங்களில் பீழை சேரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கண்களில் வீக்கம் காணப்படும். இதனால் இமைகள் மூடிக்கொள்ளும் . கண்ணைத் திறக்க இயலாது. இப்பாதிப்புகள் தொடர்ந்தால் சிலருக்குக் கலர் தெரிவதில் பிரச்சனை தோன்றும். கண்புரை வளரக்கூடும். மேலும் உலர் கண் பிரச்சனை தோன்றும்.

உலர் கண் பிரச்னை (Dry Eyes Syndrome):

வெயில் காலத்தில் அதிக வெப்பம் காரணமாக கண்கள் உலர்ந்து ஈரப்பசை இன்றி இருக்கும். தகுந்த மருத்துவர்களிடம் காட்டி அதற்குரிய சொட்டு மருந்தை (Eye Lubricant Drops) பயன்படுத்த வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கண்கள் உலர்ந்து காணப்படும். இவர்கள் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். கண் இமைக்காமல் டிவி சீரியல், மொபைல் போன் பார்க்க கூடாது. சில வினாடிகள் கண்ணை மூடித் திறக்க வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவருக்கும் இந்த உலர் கண் பிரச்சனை வரும். உடம்பில் நைட்ரஜன் ஆக்சைடு அளவு அதிகரித்தால் கண்கள் சிவப்பாகும்.

கை சுத்தம், கண் சுத்தம்:

கண்களில் அரிப்பு உறுத்தல் ஏற்பட்டால் உடனே கண்ணை நல்ல சுத்தமான தண்ணீரில் லேசாக கழுவ வேண்டும். தேய்க்கக் கூடாது. முகத்தை எப்போது கழுவினாலும் முதலில் கைகளை நன்றாகக் கழுவி விட்டு பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். கண்களைச் சுற்றி உள்ள பகுதியைக் கழுவும் போது கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும், அல்லது கை நகத்தில் இருக்கும் அழுக்கு கண்ணின் ஓரத்தில் பட்டு கண்ணை பாதிக்கும்

காலையில் கண் விழித்து பின்பு:

தினமும் காலையில் எழுந்தவுடன் கண்களை சுத்தமான நீரால் கழுவி கண்ணின் ஓரங்களில் உள்ள சேர்ந்திருக்கும் பீழையை அகற்ற வேண்டும். குளிக்கும் போது கண்ணில் சோப்பு நுரை படாத வகையில் கவனமாகக் குளிக்க வேண்டும். முகத்துக்கு சோப்புக் போட்டுக் கழுவும் போது கண்ணைச் சுற்றிலும் விட்டுவிட வேண்டும். அதிகமாக தேய்க்கக்கூடாது. சோப்பின் காரத்தன்மை கண்ணைப் பாதிக்கும்.

தூங்கப் போகும் முன்பு:

இரவில் படுக்கப் போகும் முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப்பைக் கலைத்து விட்டு முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். முகம், கை,கால் விரல்கள் கழுத்து ஆகியவற்றை நன்றாக சோப் போட்டு கழுவி ஈரம் போகத் துடைத்து விட்டு தான் படுக்கையில் படுக்க வேண்டும்.

கண்ணைத் துடைப்பது எப்படி?

காலையில் எழுந்ததும் மீண்டும் கைகளை சோப் போட்டு கழுவி விட்டு முகத்தை கழுவி கண்களை மெதுவான துணியில் பதமாக பொத்தி எடுத்து முகத்தை துடைக்க வேண்டும். கண்களின் மீது கனத்த துணியை வைத்துத் தேய்க்கக் கூடாது. கண்ணின் ஓரத்தில் துண்டின் நூல் பிசிறு ஒட்டிக் கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
‘கருப்பு வவ்வால் பூ’ - நீண்ட மீசைகளைக் கொண்ட, மருத்துவ குணம் வாய்ந்த அசாதாரண பூ!
Eye problem

அலைபேசி, கணினி திரை:

காலையில் எழுந்தவுடன் மொபைல் போனை பார்த்து இரவில் வந்த மெசேஜ்களைப் படித்து காலையில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்புகின்றவராக இருந்தால் மொபைல் ஃபோன் திரையின் வெளிச்சத்தை நிதானமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைவாக வைத்திருந்தால் கண்ணுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படும். அதிகமான வெளிச்சம் கண்களில் எரிச்சலை உருவாக்கும். எனவே அவரவர் கண்ணுக்குத் தேவைப்படும் அளவிற்கு மொபைல் ஃபோனின் வெளிச்சத்தை காலை, மாலை, இரவு, மற்றும் அறை வெளிச்சம், வெளி வெளிச்சம் ஆகியவற்றுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அங்கே பார்! இங்கே பார்!

மொபைல் போனில் போஸ்ட் போடும்போதும் மெசேஜ் அனுப்பும் போதும் இடையிடையே எதிரே இருக்கும் சுவர் அல்லது ஜன்னல் வழியாக தெரியும் வானத்தைப் பார்க்க வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை வெளியே பார்த்துவிட்டு பிறகு மொபைல் போனைப் பார்க்கலாம். இரண்டு கண்களையும் உள்ளங்கையால் ஐந்து நிமிடம் பொத்திக் கொள்ளுங்கள். கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள். இருபது நிமிடத்திற்கு ஒருமுறை 20 அடி தூரத்தை 20 நொடிகள் பார்க்க வேண்டும் என்பர்.. 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அண்ணாந்து அறையின் மேல் புறத்தை சில நொடிகள் பார்க்க வேண்டும். குனிந்து இருந்த கழுத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்ப்பது கழுத்துக்கு சிறந்த பயிற்சியாகும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? சாப்பிடலாம் , ஆனால்...
Eye problem

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போனைக் கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் நீட்டி பின்பு மேலே உயர்த்தி கீழே கொண்டு வர வேண்டும். இவ்வாறு கைகளை நீட்டி மேலே உயர்த்துவதால் (stretching exercise) கை மூட்டுகளுக்கு ரிலாக்ஸ் ஆகும்.

கால், தோள், கழுத்து, கண்:

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது நீங்கள் செய்த வேலை முடிந்தவுடன் அறையின் இரண்டு பக்கமும் முகத்தை திருப்பாமல் கண்களை மட்டும் அசைத்துப் பாருங்கள். இது கண்ணுக்குத் தரும் சிறந்த பயிற்சியாகும். மீண்டும் கண்களை உயர்த்தியும் தாழ்த்தியும் பாருங்கள். ஐந்து ஆறு முறை இவ்வாறு செய்தால் போதும். பின்பு கண்களை இடப்பக்கமாக ஒரு முறை வலப்பக்கமாக ஒருமுறை சுற்றுங்கள். இவ்வாறு கண்களை ஒரு வட்டம் போடுவது போல ஐந்தாறு முறை செய்யலாம். அதன் பின்பு மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் உங்கள் பணியை தொடருங்கள். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களுக்கும் தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். போனில் பேசும் போது அறைக்குள்ளேயோ அல்லது வெளியே வராண்டாவிலோ வெளிக் காற்றில், சூரிய வெளிச்சத்தில் நடந்தபடி பேசலாம்.

இவ்வாறு காலுக்கும் தோளுக்கும் கழுத்துக்கும் கண்ணுக்கும் பயிற்சி கொடுத்தால் கண்களும் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹாலிடே ஜாலிடே - 'ஜில் ஜில்' ஜவ்வாது மலை!
Eye problem

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com