அமாவாசை நாட்களில் கடல், ஆறு, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் அலைமோதுவார்கள். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெற மிகவும் உகந்த நாள் அமாவாசை என்பதால், அமாவாசை விரதம் இருக்க வேண்டியவர்கள் விரதமிருந்து பித்ருக்களின் ஆசி பெற்றிடுங்கள். பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து நம் குடும்பம் நன்றாக இருக்க வாழ்த்துவார்கள்.
மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வீட்டில் உள்ள அனைவரும் விரதம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய், தந்தை இல்லாத பெண்கள் அமாவாசை அன்று விரதம் இருக்கலாம். கணவர் இல்லாத பெண்களும் அமாவாசை நாளில் விரதம் இருக்கலாம். ஆனால், திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. காரணம் அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் கண்டிப்பாக அமாவாசை விரதத்தை கடைப்பிடித்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை மனதார வழிபட வேண்டும். உங்களால் இயன்ற அளவு தான தர்மங்களை செய்ய வேண்டும். குறிப்பாக அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியம் தரும். காமதேனு என கருதப்படும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கவும்.
பிதுர் காரியங்களில் பெண்கள் தனியாக சடங்கு செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. திருமணமான பின் மாமனாரும், மாமியாரும் பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளதால் விரதம் இருக்க கூடாது. அவர்கள் இல்லாத பட்சத்தில் கணவனுடன் சேர்ந்து விரதம் இருக்கலாம். அப்போது உங்கள் பெற்றோரை மனதில் நினைத்து கொள்ள வேண்டும்.
பெண்ணிற்கு சகோதரர்கள் இருப்பின் அவர்கள் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள். சகோதரரும் இல்லை, பெற்றோரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றிய பின்னர் தானம் கொடுக்கலாம். வீட்டிற்கு வந்து 5 பேருக்கு அன்னதானம் தரலாமே தவிர அமாவாசை விரதத்தை கணவர் இருக்கும் பெண்கள் கடைபிடிக்கக் கூடாது. அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.