

தமிழகத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள், சித்தர்கள் சித்தி அடைந்த தலங்களாக உள்ளன. ஆனால் சித்தரே இறைவனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு, சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தேஸ்வரர் கோயிலுக்கே (Kanjamalai Siddheswarar Temple) உண்டு. இங்கு காலங்கிநாதர் என்னும் சித்தர் லிங்க வடிவில் இறைவனாய் அருள்பாலிக்கிறார். சேலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கஞ்சமலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவிலுக்கு சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.
காலங்கி சித்தர் பழனியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் சித்த மரபு வழியில் வந்தவர். கூடு விட்டு கூடு பாய்வது போன்ற அஷ்டமா சித்திகளை நன்கு அறிந்தவர். ஏழு மடங்களை உருவாக்கி வழி நடத்தியவர். பல சித்தர்களைக் கண்டவர். காற்றைப் போல பறக்கும் சக்தி கொண்டதால் சீன தேசம் வரை சென்றதாகவும், அங்கேயே சமாதி கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் உடலே இறைவன் என்ற தத்துவத்தை போதித்தவர் இவர். உடலையே கோவில் என்றும், உடம்புக்குள் இருக்கும் இறைவனை உணர்வதே கடவுள் பணி என்றும் போதித்தார்.
காலங்கிநாதர் வட இந்தியாவின் நாத மரபு மற்றும் தென்னிந்தியாவின் சித்த பாரம்பரியம் இரண்டையும் சேர்ந்த ஒரு இந்தியத் துறவி ஆவார். சதுரகிரி மற்றும் பொதிகை மலைகளில் வாழ்ந்தவர். ஜோதி விருட்சம் மூலம் அழியா உடலைப் பெற்றவர். காற்றில் பறக்கும் சக்தி கொண்டவர். சதுரகிரி மலைகளிலும், பொதிகை மலைகளிலும் காலங்கி சித்தர் தங்கியிருந்தார். மந்திரங்கள் மூலம் விலங்குகளை அடக்கும் ஆற்றல் பெற்றவர். கஞ்சமலையில் தவமிருந்ததால் கஞ்சமலை சித்தர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சுவாசக் கட்டுப்பாட்டு கலையில் (வாசி யோகம்) நிபுணராக இருந்தார்.
காலங்கி நாதர் சித்தர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது 18 சித்தர்களில் ஒருவரான காலங்கி நாதரின் ஜீவசமாதி ஸ்தலமாகும். இங்கு காலங்கிநாதர் தவம் புரிந்து, சித்தேஸ்வரர் என்ற பெயரில் லிங்க ரூபத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்த நீருக்கு நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு பல வற்றாத கிணறுகள், நோய் தீர்க்கும் மூலிகைகள் நிறைந்துள்ளன. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இங்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகிறார்கள். திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக கஞ்சமலையில் கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானது. அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செய்கிறார்கள்.
இவர் சதுரகிரி மலைக்கு சென்ற சமயம் அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர் கையில் பணம் இல்லாததால் காலங்கி சித்தரிடம் கோவிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும் என்று வேண்ட, காலங்கி முனிவரோ, "என்னிடம் ஏது பணம்.
நான் அருடாசெல்வத்தை வேண்டி அலைபவன்" என்று கூற, வணிகர் விடவில்லை. அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குருபக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலங்கி நாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்து அவற்றிலிருந்து தைலம் தயாரித்து, அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார் என்று கூறப்படுகிறது.