
அம்மனின் சக்தி பீட வரிசையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள காளிகட் காளிகா கோயில் உக்ர சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுவது தனிச்சிறப்பு. பாகீரதி நதிக்கரையில் அமைந்த காளிதேவியின் தீர்த்தக் கட்டம் என்பதால் பின்னாட்களில் காளிகாட் என்பது உருமாறி கல்கத்தா என்று ஆனது.
பகன், முகன் என்ற இரு அசுரர்கள், தங்கள் உடலை வருத்தி, தவத்தால் ஒப்பற்ற வரங்களைப் பெற்றனர். ஆணவம் மேலிட, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல விதங்களில் இன்னல்களை அளித்து வந்தனர். தவ வலிமையால் பெற்ற வரங்களை எல்லாம் தவறான வழிகளில் இந்த அரக்கர்கள் பயன்படுத்தி வந்தனர். இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகள், யாகங்களை செய்யவிடாமல் முனிவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டி அடித்தனர். தேவர்களும் இவர்களுடன் போரிட்டு தோல்வியைத் தழுவினர்.
செய்வதறியாது தவித்த தேவர்களும், முனிவர்களும், பின்னர் காசி விஸ்வநாதரை சரண் புகுந்து, தங்கள் மனக் குறைகளைத் தெரிவித்தனர். பெருமானும் அசுரர்களை அழித்து, தேவர்களையும் முனிவர்களையும் காக்க திருவுள்ளம் கொண்டார்.
அதன்படி, இரு பெண்களை அவதரிக்கச் செய்தார். காளிகா தேவி, பகவதி தேவி ஆகிய இருவரையும் தோற்றுவித்து, இரு அசுரர்களையும் அழிக்கச் செய்தார். மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக ஒரு தேவி வட எல்லையிலும் (கல்கத்தா), மற்றொரு தேவி தென் எல்லையிலும் (குமரி) கோயில் கொண்டனர்.
தாட்சாயணியின் கோபத்தில் உருவான மாகாளியைப் போன்று கோபம் கொண்டவராக அமைந்திருந்தாலும், ஒரு தாயின் கருணையோடு அனைவரையும் காத்து வருகிறார் காளிகா தேவி. காளிதேவியின் இடது மேற்கரத்தில் மகா பத்ராத்மஜன் என்ற வாள் உள்ளது. கீழ்க்கையில் குருதி சொட்டும் அசுரனின் தலை காணப்படுகிறது. வலது மேற்கரத்தில் அபய முத்திரையும் கீழ்க் கரத்தில் வரம் அருளும் முத்திரையும் உள்ளன. கருமை நிறம் தாங்கி, மண்டை ஓட்டு மாலை அணிந்து அசுரரை வதம் செய்த பின்னர் உக்கிரத்துடன் காளிதேவி திரும்பினார். யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காளிதேவி இருந்தார்.
காளிதேவியை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், அவர் வரும்வழியில் குறுக்காகப் படுத்துக் கொண்டார். சிவபெருமான் மேல் கால் இடரி, காளிதேவி விழுவதற்கு முற்படும் சமயத்தில், தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடிக்கும் நிலையே அவரது தோற்றமாகக் கொள்ளப்பட்டது. காளிதேவி சம்ஹார நாயகியாக இருப்பதால் மூன்று கண்களுடன் அருள்பாலிக்கிறார்.
காளிதேவியின் கழுத்தில் உள்ள 51 கபால மாலை 51 மாத்ருகா அக்ஷரங்களாக கருதப்படுகின்றன. இவை கோடானுகோடி மந்திரங்களுக்கு ஆதாரமாக போற்றப்படுகின்றன.
காளிகட் பகுதியில் நீராடுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதனால் ஸ்நான கட்டத்துக்கு அருகில் நிறைய தர்ம சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்விடத்தில் பூஜைக்குத் தேவையான சந்தனம், துளசி, மலர்கள், விளக்குகள் கிடைக்கின்றன. பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு திதி கொடுக்கும் வழக்கமும் இங்கு உள்ளது. ஸ்நானம், பூஜை, சங்கல்பம், தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை முடித்த பிறகே பக்தர்கள் காளி தரிசனத்துக்குப் புறப்படுகின்றனர். இங்கு தசராவிழாவின் போது நடைபெறும் துர்கா பூஜையின் போது, நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அம்மனை வழிபட கூடுவது குறிப்பிடத்தக்கது.