திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட போது ஸ்ரீவில்லிபுத்தூர் மீது தனிக் கவனம் செலுத்தி வந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் நிறைய பழங்கால சிறுசிறு மண்டபங்களை காணலாம். இவை யாவும் நாயக்க மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி மீது இருந்த பக்தி காரணமாக கோவிலுக்கும் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.
திருமலை நாயக்கர் ஆண்டாள்மீது இருந்த பக்தி காரணமாக ஆண்டாள் கோவிலில் பூஜை முடிந்த பின்தான் உணவு எடுத்துக் கொள்வார். அப்படி பூஜை முடிந்த செய்தியை மதுரையில் உள்ள திருமலை நாயக்கருக்கு தெரிவிக்க பூஜை முடிந்த பின் மணி அடிப்பார்கள்.
மணி ஓசை கேட்டு அருகில் உள்ள மண்டபத்தில் மணி அடிப்பார்கள். இந்த மணி ஓசை பலமைல் தூரம் கடந்து அங்குள்ள மண்டபத்திற்கு கேட்கும். இந்த மண்டபங்கள் மதுரை வரை உள்ள ஒவ்வொரு மண்டபத்திலும் மணி அடிக்கப்பட்டு மதுரை வரை வந்தவுடன் திருமலை நாயக்கர் பூஜை முடிந்ததை அறிந்து உணவு எடுப்பார்.
இந்த செய்தியை கொண்டு செல்லதான் இந்த மண்டபங்கள் கட்டப்பட்டன. இது அக்காலகட்டத்தில் பயணத்தில் வழிப்போக்கர்கள் ஒய்வெடுக்க கட்டப்பட்டது. இதில் பாதி சேதமடைந்த போதிலும் பூவானி கிராமத்தில் உள்ள மண்டபம் கோவில் போல காட்சி தரும் அளவிற்கு கலை நயத்துடன் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது.
மொத்தமாக 30 தூண்களை கொண்டது. மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களும் இசைப்பது, நடனம் ஆடுவது, சண்டையிடுவது போன்ற நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளது. இப்போதும் இந்த மண்டபம் வழிப் போக்கர், ஓய்வெடுத்துச் செல்வோர், வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கின்றனர்.
ஆண்டாள் கோவில் ஒட்டிய தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது குட்டி திருமலை நாயக்கர் மஹால். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் போது ஓய்வெடுக்க இங்கு வந்து தங்க ஒரு அரண்மனையை கட்டியுள்ளார். ஶ்ரீ ஆண்டாள் தாயாரை சேவிக்கவும், ஸ்ரீ ஆண்டாளுக்கு கைங்கர்யங்கள் செய்யவும், இந்த அரண்மனை கட்டியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால் இந்த மஹாலை சென்று பாருங்கள்.