
சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் அற்புத நகரம் காஞ்சிபுரம். பதிகங்கள் பெற்ற சிவத்தலங்களும், பாசுரங்கள் பெற்ற பெருமாள் தலங்களும் இங்கே நிறைந்து அருள் பெருக்குகின்றன. ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ‘நிலாத் திங்கள் துண்டத்தான்‘ என்ற திவ்ய தேசமும், அதேபோல காமாட்சி அம்மன் ஆலயத்துள் ‘ஸ்ரீகள்வன்‘ என்ற பெருமாளின் கோயிலும் அமைந்துள்ளன!
இந்தக் காஞ்சி நகரின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு அடையாளம் – காஞ்சி சங்கர மடம், சாலைத் தெருவில் அமைந்திருக்கிறது. வீதியின் பெயரே வித்தியாசமாக இல்லை – சாலைத் தெரு? அதாவது சங்கர மடம் என்ற ஆன்மிக நெறி பரப்பும் (வேத கலா) சாலை அமைந்திருக்கும் தெரு என்று கொள்ளலாமா?
இந்த காமகோடி பீடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலினுள் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்த ஆதிசங்கரர், கோயிலின் தொன்மையைப் பரப்பும் வகையிலும், காமாட்சி அம்மன் மேற்கொண்ட 32 அறங்களும் தொடர்ந்து கடைபிடிக்கப்படவும், அவற்றால் ஆன்மிக உணர்வு தழைத்தோங்கவும் அவ்வாறு மடத்தை, கி.மு. 482ம் ஆண்டில் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது.
பல பீடாதிபதிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்த காஞ்சி சங்கர மடம், 18ம் நூற்றாண்டு வாக்கில் போர்ச்சூழல் காரணமாக கும்பகோணம் நகருக்கு மாற்றல் கண்டிருக்கிறது. போர் மேகங்கள் கலைந்த பிறகு, மீண்டும் காஞ்சிபுரத்திற்கு வந்து நிலைகொண்டது. டி.ஏ. கோபிநாத ராவ் அவர்களின் ஆராய்ச்சியின்படியும், செப்புப் பட்டயங்களின் ஆதாரத்திலிருந்தும் இவ்வாறு அறிய முடிகிறது.
மடத்தின் ஆசார்யார்களைப் பொறுத்தவரை, முந்தையவர்களைப் பற்றியதான வரிசைக்கிரமம் கால சர்ச்சைக்கு உள்ளாகிறது என்றாலும், ஆங்கிலேயர்களான கிறிடோபர் புல்லர் மற்றும் டேவிட் ஸ்மித் இருவரும் காஞ்சி சங்கராச்சார்யார்களை ஆதிசங்கரரின் ‘ஆன்மிக சந்ததியினர்‘ என்றே குறிப்பிடுகிறார்கள். அதோடு, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி பரமாச்சார்யாரின் தலைமைக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில் காஞ்சி காமகோடி பீடத்தின் வரலாறு மீண்டும் எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இத்தகைய மடத்தின் தற்போதைய மற்றும் 70வது மடாதிபதியான ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு இளவலாக நியமிக்கப்படவிருக்கிறார் – ‘டுட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா ட்ராவிட்‘ என்ற 24 வயது சீடர். இவருக்கு 30 ஏப்ரல் 2025 அக்ஷய த்ரிதியை நாளன்று சன்யாச தீட்சை அளித்து பீடத்தில் சேர்த்துக் கொள்ளப் போகிறார், ஸ்ரீ விஜயேந்திரர். இந்த வைபவம், 02.05.2025 அன்று, அதாவது ஆதிசங்கரரின் 2534வது ஜயந்தி நாளை ஒட்டி நிகழவிருக்கிறது.
ஸ்ரீவிஜயேந்திர ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகப் பெற்றோருடன் (ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணிய தன்வந்திரி – அலமேலு மங்காதேவி) சென்றிருந்த கணேச சர்மாவை, தன் முதல் பார்வையாலேயே கணித்தார், ஸ்வாமிகள். அவரை, வேதம் பயிலுமாறு ஊக்குவித்தார். அவ்வாறே ஸ்ரீகணேச சர்மா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்துகுட்லு ஹோசமானே ரத்னாகர பட் சர்மா அவர்களிடம் 12 ஆண்டுகள் குருகுல வாசமாக ஆசானின் இல்லத்திலேயே தங்கிக் கொண்டு, குரு சேவை புரிந்தவாறே வேதப் பயிற்சியும் பெற்றார். இவ்வாறு ரிக்வேத சம்ஹிதை, ஐதரேய பிராமணம், ஆரண்யகம் மற்றும் உபநிடதங்களையும், பாதம், க்ரமம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார். கூடவே, பிரதிஷாக்யம், வியாலி சிக்ஷா போன்ற மேம்பட்ட வேத நூல்கள் மற்றும் ஜடபாதத்தையும் கற்றுக் கொண்டார்.
அடுத்தடுத்து பல கட்டங்களில் ஸ்ரீவிஜயேந்திரரை தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்அவருடைய சமஸ்கிருத புலமையும், ஆன்மிக ஈடுபாடும் மேன்மையுறுவதை ஸ்ரீவிஜயேந்திரர் கவனித்தார்.
அதன் நற்பலன்தான், இப்போது தன்னுடைய ஆன்மிக வாரிசாக ஸ்ரீகணேச சர்மாவை அவர் அங்கீகாரம் செய்திருப்பது.
ஸ்ரீ கணேச சர்மா ட்ராவிட், ரிக் வேத விற்பன்னர். ‘சலக்ஷணா கணபதி‘ என்ற அந்த வேதத்தின் முழுத் தேர்ச்சிக்கான அங்கீகார விருது பெற்றவர். ரிக் தவிர, யஜுர், சாம வேதங்களையும், ஆறு அங்கங்கள் கொண்ட ஷதங்கம், தஷோபநிஷத் ஆகியவற்றையும் கற்றுத் தெளிந்தவர். இவர், தெலங்கானா மாநிலம், நிஸாமாபாத், நிர்மல் மாவட்டம், பஸாராவிலுள்ள ஸ்ரீஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவை புரிந்திருக்கிறார்.
‘புதுப் பெரியவாளா‘கப் போற்றப்படும் ஸ்ரீகணேச சர்மாவின் வரவு ஆன்மிகம் மேன்மேலும் தழைத்தோங்க வழி வகுக்கும்.