
தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோவில் இது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற கோவில். தலைச்சங்க நாண்மதியம் எனப்படும் இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 25வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
தல சிறப்பு:
தலைச்சங்க நாண்மதியத்துள்ளான், தலைச்சங்க பெருமாள் என்றும், உற்சவர் வெண்சுடர்ப் பெருமாள் என்ற திருப்பெயர்களில் காணப்படுகிறார். தாயார் தலைச்சங்க நாச்சியார், செங்கமலவல்லி, சௌந்தரவல்லி என்னும் பெயருடையாள். இங்குள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசை நோக்கி காணப்படுகிறார். தல மரம் புரசு. இங்குள்ள விமானம் சந்திர விமானம் என அழைக்கப்படுகிறது.
பெயர்க்காரணம்:
தலை + சங்கு + காடு. அதாவது சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாக பயிரிடப்பட்டு இங்குள்ள கோயில்களுக்கும், இவ்வூரைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் அனுப்பப்பட்டன. இதனால்தான் இப்பெயர் உருவாகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
பெருமாள் கையில் சங்குடன் காட்சி தருவதும் இத்தலத்திற்கு இப்பெயர் வர காரணமாக அமைந்தது என்று கூறுகிறார்கள்.
பூம்புகாரில் இருந்து கொண்டுவரும் அழகான சங்குகளை விற்பனை செய்யும் இடமாக இருந்ததாகவும், புரச மரங்கள் வளர்ந்து காடு போல் இருந்ததால் இந்த இடத்திற்கு தலைச்சங்காடு என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திர தோஷம் நீங்க:
சந்திரன் தன்னுடைய சாபம் தீர இக்குளத்தில் நீராடி சாபம் தீர்ந்ததால் இக்குளத்திற்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். சந்திர தோஷம் உள்ளவர்கள் இக் கோவிலுக்கு வந்து இந்த குளத்தில் நீராடி பெருமாளை வேண்டி நிற்க சந்திர தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.
சங்கு தீர்த்தத்தில் பௌர்ணமியில் நீராடுவது மிகவும் விசேஷமாக கூறப்படுகிறது. சங்கு தீர்த்தத்தில் நீராடி பெருமாளையும் தாயாரையும் வணங்கிட நாள்பட்ட சரும நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள பெருமாள் சிவனைப் போன்று பிறைசூடி காட்சி தருவது சிறப்பாகும். இதனால் இவர் நாண்மதியப் பெருமாள் என்றும், சந்திரசாபஹரர் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் கையில் சங்குடன் காட்சி தருவதும், இத்தலப் பெருமாளை சந்திரன், தேவர்கள் ஆகியோர் தரிசித்துள்ளதாகவும், சந்திர தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது.
தல வரலாறு:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன் என்றும், அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர் தேவ குருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து ராஜ சுய யாகம் செய்யும் பொழுது தேவகுருவின் மனைவி தாரையும் வர, சந்திரனும் தாரையும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கினர்.
அதிர்ச்சி அடைந்த குரு, திருமாலிடம் முறையிட, சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட, திருமால் கூறியபடி குருவிடம் அவரது மனைவியை ஒப்படைத்தார் சந்திரன். அத்துடன் வேறொரு தவறும் செய்துவிட அதாவது தக்கனுடைய 27 மகள்களையும் சந்திரன் திருமணம் செய்து கொண்டு 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக வாக்கு கொடுத்த சந்திரன் ரோகினியிடம் மட்டுமே மிகுந்த அன்புடன் இருந்ததால் மற்ற மனைவிகள் அவர்களது தந்தையிடம் முறையிட கோபம் கொண்ட தக்கனும் சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என்று சாபமிட்டார்.
இதனால் முழு சந்திரன் தேயத் தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைக்க, திருமாலிடம் சென்று தன் குறையை கூறி சாப விமோசனம் கேட்க பெருமாள் தலைச்சங்க நாண்மதியம், ஸ்ரீரங்கம், திரு இந்தளூர் ஆகிய மூன்று தலங்களுக்கும் சென்று குளத்தில் நீராடி வழிபட சாபம் நீங்கும் என்று அருளினார். அதனால் மூன்று தலங்களிலும் சந்திரன் வந்து குளத்தில் நீராடி திருமாலை வழிபட அவனுக்கு ஏற்பட்ட தோஷமும் நோயும் விலகியது. திருமால் சந்திரனுக்கு காட்சி கொடுத்து அப்படியே சந்திரனை தலையில் சூடிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் இத்தலத்தில் சிவனைப் போன்று பிறைசூடி காட்சி தருகின்றார் திருமால்.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி தினங்களில் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி வரை 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.