
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். திருச்செந்தூரில் சூரனை வென்ற முருகனின் வீரத்தை பாராட்டிய இந்திரன், தன் மகள் தெய்வானையை அவருக்கு மணம் பேசி நிச்சயித்தார். முருகன் அவரைத் திருப்பரங்குன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். குடவறைக்கோயிலான இங்கு தெய்வானை திருமணக் காட்சியை சிற்பமாக செதுக்கியுள்ளனர்.சிற்பத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் "தெய்வானை நாச்சியார் கல்யாணம்" என்று எழுதப்பட்டுள்ளது.
ஆறு படை வீடுகளுல் முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மட்டும் தான். சூரனை ஆட்கொண்ட வெற்றி வேலுடன் முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்ததால் இப்படி. கந்தசஷ்டி விழாவின் 7ம் நாள் காலை சட்டத் தேரில் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் கிரிவலம் வருவார். இந்த தேரை விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே இழுக்கிறார்கள். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாள் சூரனை வதம் செய்த முருகப்பெருமானின் சினம் தணிய 100 படி அரிசி கொண்டு சாதம் வடித்து, அதில் தயிர் ஊற்றி கிளறி சுவாமிக்கு படைக்கிறார்கள். தயிரின் குளிர் தன்மையால் சுவாமி மனம் குளிர்ந்துவிடுவதாக ஐதீகம். இதனை "பாவடை தரிசனம்" என்கிறார்கள்.
திருத்தனி முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால்,திருத்தணிகை முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 5வதும் வள்ளியை மணந்த தலமுமான திருத்தனி சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி அன்று முருகனை குளிர்விக்க ஆயிரம் கிலோ பூக்களால் புஷ்பஞ்சலி செய்கின்றனர். முருகனின் பரிவார தெய்வங்களுக்கு இங்கு அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனம் பிரசாதமாக விஷேச நாட்களில் மட்டுமே கிடைக்கும். இந்த சந்தனத்தை நீரில் கலந்து குடித்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருத்தனியில் தினசரி பள்ளியறை பூஜையின் போது ஒரு நாள் தெய்வானையுடனும், ஒரு நாள் வள்ளியுடனுமாக முருகன் அருள்பாலிக்கிறார்.
கிராமங்களில் திருவிழாக் காலங்களில், கன்னிப் பெண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுள்ள சிறுவர்களுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வார்கள். அதே போன்று முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு மஞ்சள் நீராட்டு நடத்தப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவின் கடைசி நாளில், முருகப்பெருமான் தன் மனைவி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அந்த நேரத்தில், பக்தர்கள் தங்கள் கிராமத்தில் திருமணம் செய்து கொண்ட இறைவனை ஏற்றுக்கொண்டு, சூரனுடன் போரிட்டதால் ஏற்பட்ட கோபத்தை அடக்க, மகிழ்ச்சியுடன் இறைவன் மீது மஞ்சள் நீர் ஊற்றுகிறார்கள்.
கந்த சஷ்டி விழா சுவாமிமலையில் கொடியேற்றத்துடன் துவங்கும். விழாவில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவார் ஸ்ரீசுப்ரமண்யர். இதையொட்டி தினமும் கந்தக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இது இங்கு மட்டுமே.
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றாகிய சோலைமலை (பழமுதிர்சோலை) முருகன் கோவிலில், சூரசம்ஹாரத்தை கொண்டாடும் கந்தசஷ்டி திருவிழா, விமர்சையாக நடைபெறும். அதன்படி வள்ளி தெய்வானையுடன் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்குடத்தால் பாலாபிஷேகம், மற்றும் பன்னீர், பழம், தேன், சந்தனம், தீர்த்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேமுகம், மகா தீபாராதனை களும் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்களின் மந்திரங்களுடன் நடக்கும். இங்கு முருகனுக்கு தேனுடன் தினை மாவும் படைப்பது விசேஷமானது. அப்போது
சூரசம்ஹாரதன்று சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடாகி, திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகா சூரனையும் தல விருட்ஷமான நாவல் மரத்தடியில், பத்மா சூரனையும் சம்ஹாரம் செய்து பின்னர் ஒளவைக்கு (சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு) நாவல் கனி கொடுத்தல் நிகழ்வு நடைபெறும்.