

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரும் கார்த்திகை மாதம் தெய்வீக மாதம் என்றே அழைக்கப்படுகிறது. அந்தளவுக்கு கார்த்திகை மாதம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிவது, திருவண்ணாமலை தீபம், கார்த்திகை சோமாவாரம் போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருவதுடன், சிவன், முருகன், மற்றும் ஐயப்பன் போன்ற தெய்வ வழிபாடுகளுக்கும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பொதுவாக எல்லா மாதங்களிலும் தீபம் ஏற்றி வழிபட்டாலும், கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 2-ம்தேதி பிரதோஷமும், பரணி தீபமும் வருது. பரணி தீபம் என்பது திருக்கார்த்திகை தீப திருவிழாவின் ஒரு அங்மாகும். கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி, கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும் நாளில் இந்த மகத்தான விழா கொண்டாடப்படுகிறது.
பரணி நட்சத்திரம் அன்று இந்த முறைப்படி பரணி தீபத்தை ஏற்றினால் உங்களுக்கு இந்த முருகன் மற்றும் சிவபெருமானின் முழுஅருளும் கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுறை வருகின்ற இந்த பரணி நட்சத்திரமானது 2-ம்தேதி மாலை 6.24 மணிக்கு ஆரம்பித்து 3-ம்தேதி மாலை 04.47 வரை உள்ளது.
அன்றைய தினம் திருவண்ணாமலை போன்ற பிரசித்தி பெற்ற தலங்களில் தீபம் ஏற்றுவது என்பது பஞ்சபூதங்களை குறிக்கும் ஐந்து தீபங்களை ஏற்றுவதை குறிக்கிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக அடிமுடி காணமுடியாத ஜோதி ஸ்வரூபமாக நின்றார் என்பதை நினைவுபடுத்தும் விதமாக இந்த தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் உங்களது வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக்கூடாது.
நாளை மாலை (டிசம்பர் 2-ம்தேதி) 6.30 மணிக்கு மேல் நீங்கள் வீட்டில் மொத்தம் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். ஐந்து என்பது ஐம்பூதங்களை குறிக்கும். அதனால் கட்டாயம் ஐந்து விளக்கு தான் ஏற்ற வேண்டும். முதலில் வீட்டு வாசலில் தான் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வீட்டு வாசலில் ஏற்றிய பிறகு அந்த ஐந்து விளக்குகளையும் எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை வருவதால் இதற்கு மூன்று மடங்கு சக்தி அதிகம். இந்நாளில் உங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நடக்க கூடாது என்று நினைத்து அதை ஒரு பேப்பரில் எழுதி தீபத்தில் எரித்தால் உங்களை பிடித்த பீடை விலகிச்செல்லும் என்பது ஐதீகம்.
டிசம்பர் 3-ம் தேதி திருக்கார்த்திகை தீபம் வருகிறது. மாலையில் திருவண்ணாமலையில் ஜோதி பார்த்து விட்டு வீட்டில் திருகார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். குறைந்தது 27 விளக்குகளாவது ஏற்ற வேண்டும். அதுவும் அகல் விளக்குகளை ஏற்றுவது தான் மிகவும் சிறப்பானது. போன வருடம் பயன்படுத்திய அகல் விளக்குகளையும் இந்த வருடம் உபயோகப்படுத்தலாம். அதனுடன் சேர்த்து குறைந்தது 2 புது விளக்குகளையும் நிலைவாசலுக்கு வைக்க வேண்டும்.
டிசம்பர் 4-ம்தேதி வியாழக்கிழமை பௌணர்மி மற்றும் பாஞ்சராத்திர தீபமும் வருகிறது. திருக்கார்த்திகை தினத்தில் சிவபெருமானுக்கு கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவது போலவே விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் கோவில்களில் கார்த்திகை மாதம் ஏற்றப்படும் தீபங்களுக்கு பாஞ்சராத்திர தீபம் எனப்பெயர். இது விஷ்ணு கார்த்திகை என்றும் அழைக்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் பரணி தீபமும், 2-ம் நாள் திருக்கார்த்திகை நாளில் மகா தீபமும், 3-ம் நாள் பௌர்ணமி திதியில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்சராத்திர தீபமும் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நாளில் விளக்கேற்றி வழிபட்டால் நிறைவான மனநிம்மதியும், செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிகை. பாஞ்சராத்திர தீபம் அன்று மாலை 6 மணிக்கு இந்த தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நாள் சிவ, விஷ்ணு இருவருக்கும் உரிய வழிபாடாக கருதப்படுவதால் வழக்கமாக வீட்டில் ஏற்றப்படும் தீபத்துடன் ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் போவதற்கு மிகவும் உகந்த நாள். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதை விட கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது மிகவும் புண்ணிய பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.
இப்படி மூன்று நாட்களுமே சிவ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாக இருப்பதால் சிவ பக்தர்கள் இந்த நாள்களை மறந்து விடாதீர்கள்.