கார்த்திகை தீபம் வெறும் பண்டிகை இல்ல... இது ஒரு வானியல் அதிசயம்! இதோ முழு விவரம்!

பிளையட்ஸ் நட்சத்திரக் கூட்டமும் மண் அகல் விளக்குகளும் இணையும் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம்.
கார்த்திகை தீபம் - Karthigai Deepam
கார்த்திகை தீபம் - Karthigai DeepamImage credit: Gemini
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு நம்பிக்கையின் பின்னணியில் ஒளிந்திருக்கும் வானியல் சுவாரசியங்களைத் தெரிந்துகொள்வோமா?

இருள் விலகி ஒளி பிறக்கும் அழகான திருநாள் கார்த்திகை தீபம். வீட்டு வாசல்களிலும், முற்றங்களிலும், கோயில் களிலும் வரிசையாக ஏற்றப்படும் அகல் விளக்குகள் மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகின்றன. ஆனால் இந்தத் திருநாளுக்குப் பின்னால் புராணக் கதைகள் மட்டுமல்லாமல், வானத்தைப் பற்றிய சுவாரசியமான செய்திகளும் இருக்கின்றன என்பது பலரும் அறியாத ஒன்று.

வானில் மின்னும் கார்த்திகை நட்சத்திரங்கள்!

கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் வானியலில் பிளையட்ஸ் (Pleiades) என்று அழைக்கப்படுகிறது. இது ரிஷப ராசி பகுதியில் காணப்படும் ஒரு நட்சத்திரக் கூட்டமாகும். தெளிவான இரவு வானில் வெறும் கண்களாலேயே இதன் பல நட்சத்திரங்களைக் காணமுடியும். குறிப்பாக ஆறு அல்லது ஏழு நட்சத்திரங்கள் நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதால் இது பல பண்பாடுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

நம் புராண மரபில் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர். அவர்கள் சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளையும் வளர்த்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் பார்வதிதேவி அந்த ஆறு குழந்தைகளையும் அணைத்தபோது ஆறுமுகப் பெருமானாக முருகன் தோன்றினார் என்பது ஐதீகம். இதனால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்கும் முருகப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

அகல் விளக்குகளின் அழகிய தத்துவம்!

வானில் நட்சத்திரங்கள் இருளைப் போக்குவதுபோல, பூமியில் ஏற்றப்படும் விளக்குகள் நம் மனதில் இருக்கும் அறியாமை, பொறாமை, கோபம் போன்ற இருளைப் போக்க வேண்டும் என்பதே கார்த்திகை தீபத்தின் ஆழமான தத்துவம்.

முன்னொரு காலத்தில் மின்சார வசதிகள் இல்லாத வீடுகளில் எண்ணெய் விளக்குகளே இரவின் வெளிச்சமாக இருந்தன. எள் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, திரி வைத்து ஏற்றப்படும் அகல் விளக்குகள் நம் பாரம்பரிய வாழ்வியலின் ஓர் அங்கமாக இருந்தன. இன்று மின்விளக்குகள் நிறைந்திருந்தாலும் மண் அகல் விளக்குகளை ஏற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.

கார்த்திகை தீபம் - Karthigai Deepam
கார்த்திகை தீபம் - Karthigai DeepamImage credit: Gemini

திருவண்ணாமலை மகாதீபத்தின் மகத்துவம்!

கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்படும் மகாதீபம். சிவபெருமான் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாகத் தோன்றியதை நினைவுகூரும் வகையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த ஜோதி தரிசனம் இறைவன் எல்லையற்றவன் என்பதையும், ஒளியே இறைமையின் அடையாளம் என்பதையும் உணர்த்துகிறது.

கார்த்திகை தீபமும் இயற்கையின் பாடமும்!

கார்த்திகை மாதத்தில் மாலை நேரத்தில் விளக்கேற்றுவது நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த அழகிய மரபு. மண் அகல் விளக்குகள், எண்ணெய், திரி என இயற்கையோடு இணைந்த பொருட்களைக் கொண்டு இந்த வழிபாடு நடைபெறுகிறது. சிறிய குழந்தைகளுக்குக் கூட நம் பாரம்பரியத்தின் சிறப்பையும், இறை வழிபாட்டின் அர்த்தத்தையும் எடுத்துச் சொல்ல இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்து வியப்பதும், பூமியில் விளக்கேற்றி மகிழ்வதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான அழகான உறவை உணர்த்துகின்றன. ஒவ்வொரு விளக்கும் ஒரு நம்பிக்கையின் அடையாளமாகவும், ஒவ்வொரு சுடரும் ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கமாகவும் அமைகிறது.

விளக்கேற்றுவதில் மறைந்திருக்கும் அறிவியல்!

அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி ஏற்றும் போது, எண்ணெய் திரியின் வழியாக மேலேறி சுடராக எரிகிறது. இது தந்துகிச் செயல்பாடு ( Capillary action) எனப்படும் அறிவியல் நிகழ்வுடன் தொடர்புடையது. நம் முன்னோர்கள் அறிவியல் விளக்கம் தெரியாமலேயே இயற்கையின் இயல்புகளைத் தங்கள் அன்றாட வாழ்வில் அழகாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மேலும் மண் அகல் விளக்குகளை வாங்குவதன் மூலம் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் நாம் உதவுகிறோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்து வத்தையும் இந்தத் திருநாள் நமக்கு உணர்த்துகிறது. குழந்தைகளுடன் சேர்ந்து விளக்கேற்றி, நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியும் பேசினால் பண்டிகை மகிழ்ச்சியுடன் புதிய அறிவையும் அவர்களுக்கு பகிர முடியும்.

இதையும் படியுங்கள்:
ஒரே கூரையின் கீழ் தனித்தனியா? குடும்ப உறவுகளை இணைக்கும் 20 நிமிட அதிசயம்!
கார்த்திகை தீபம் - Karthigai Deepam

கார்த்திகை விளக்குகளும் குடும்ப மகிழ்ச்சியும்!

கார்த்திகை தீபத்தன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து விளக்கேற்றுவது தனி மகிழ்ச்சியைத் தருகிறது.‌ வீட்டு வாசலில் கோலமிட்டு, அதன் ஓரங்களில் அகல் விளக்குகளை வரிசையாக வைப்பது அழகான காட்சியை உருவாக்குகிறது .

அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் கார்த்திகை பொரி உருண்டை இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வது உறவுகளிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது. இத்தகைய சிறிய மகிழ்ச்சிகள் தான் நம் பாரம்பரியப் பண்டிகைகளைத் தலைமுறை தலைமுறையாக உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

ஒளியின் பின்னணியில் ஒரு சிறிய செய்தி!

விளக்கின் சுடர் காற்றில் அசைந்தாலும் அணையாமல் தொடர்ந்து ஒளிர்வதைப் பார்க்கும்போது, வாழ்க்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இருளுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு சிறிய சுடரும், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை நமக்கு அமைதியாக எடுத்துரைக்கிறது.

விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியவை!

விளக்குகளை ஏற்றும்போது குழந்தைகள் அருகிலேயே பெரியவர்கள் இருப்பது அவசியம்.‌ காற்றில் அணையாமல் பாதுகாப்பான இடங்களில் விளக்குகளை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்களுக்குப் பதிலாக பூக்கள், மாவிலை போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறு பாதுகாப்பையும் சுற்றுச் சூழலையும் கருத்தில் கொண்டு கொண்டாடும்போது கார்த்திகை தீபத்தின் மகிழ்ச்சி மேலும் சிறக்கும்.

வானில் மின்னும் நட்சத்திரங்களையும், மண்ணில் ஒளிரும் அகல் விளக்குகளையும் இணைக்கும் அழகான திருநாள்தான் கார்த்திகை தீபம். இந்த ஆண்டு விளக்கேற்றும்போது, இருளை அகற்றுவது வெளிச்சம் மட்டுமல்ல; நம் நல்ல எண்ணங்களும் என்பதை நினைவில்கொள்வோம். அன்பும் அமைதியும் அனைவரின் வாழ்விலும் நிறையட்டும்!

இதையும் படியுங்கள்:
வீட்டில் இருக்கும்போதும் நீட்டாக உடுத்தினால் மூளையில் நடக்கும் அதிசயம்!
கார்த்திகை தீபம் - Karthigai Deepam