

பொதுவாக வெளியில் செல்லும்போது நன்றாக உடை உடுத்திச் செல்வது மனிதர்களின் வழக்கம். விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என்றால் சிறப்பாக உடையணிந்து அலங்கரித்துக் கொள்வோம். ஆனால், வீட்டில் இருக்கும்போது பலரும் ஏனோதானோவென்றுதான் உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும் நைட்டியிலும், ஆண்கள் பழைய டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அல்லது லுங்கியிலும் காட்சியளிப்பார்கள்.
ஆனால், சிலர் வீட்டுக்குள் இருக்கும்போதும் வெளியில் செல்வதுபோல நேர்த்தியாக உடுத்திக் கொள்கிறார்கள். அதில் அவர்களுக்குத் தனி மகிழ்ச்சி உண்டாகிறது. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
நாம் அணியும் உடை மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது என்கிறது உளவியல். உடை மனதை இரண்டு வழிகளில் பாதிக்கிறது. ஒன்று, அந்த உடைக்கு நாம் கொடுக்கும் மரியாதை. இரண்டாவது, அதை அணியும் போது உண்டாகும் மனமகிழ்ச்சி.
இதனைப் புரிந்துகொள்ள ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. சிலரிடம் ஒரே மாதிரியான வெள்ளைக் கோட்டைக் கொடுத்து அணியச் சொன்னார்கள். அதில் சிலரிடம் அது "மருத்துவரின் கோட்" என்றார்கள்; சிலரிடம் அது "ஓவியரின் கோட்" என்று சொன்னார்கள். மருத்துவரின் கோட் என்று நினைத்து அதை அணிந்தவர்கள் மிகக்கவனத்துடனும் சரியாகவும் தங்கள் வேலையைச் செய்தார்கள். இதிலிருந்து ஒரு நல்ல உடை உடுத்தும்போது மனதுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் பொறுப்பும் வந்துவிடுகிறது என்று தெரியவருகிறது.
உடை என்பது மனிதர்களை அவர்களுக்கே யார் என்று காட்டுகிற ஒரு வழி. வீட்டில் இருக்கும்போது கூட அழகாக, நேர்த்தியாக உடை அணிந்துகொள்பவர்கள் அடுத்தவர்களைக் கவரவேண்டும் என்று நினைத்து அப்படிச் செய்வதில்லை.
தனியாக இருக்கும்போதும், யாரும் பார்க்காதபோதும் கூடத் தாம் அழகாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று நினைத்துச் செய்கிறார்கள். அது அவர்கள் மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வீட்டிலேயே 'ஒர்க் ஃபிரம் ஹோம்' செய்யும் சிலரை உதாரணமாக எடுத்துப் பார்க்கலாம். சிலர் டி-ஷர்ட், ஷார்ட்ஸ், நைட்டியிலேயே லேப்டாப்பில் வேலை செய்வார்கள். சிலர் குளித்துவிட்டு, அலுவலகத்திற்குச் செல்வது போல நீட்டாக உடை அணிந்துகொண்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.
அப்படி உடை அணிந்துகொள்ளும்போது, "இது தூங்குகிற நேரம் அல்ல; வேலை செய்யும் நேரம்" என்று மூளைக்குச் சொல்லும் ஒரு கட்டளையாக அது மாறிவிடுகிறது. இதனால் அவர்களால் தமது வேலையை மிக நேர்த்தியாகச் செய்ய முடியும். அதேபோல, நேர்த்தியாக உடை அணிந்துகொண்டு ஒரு காபி குடித்தாலும் கூட, அந்த நேரத்தை மிகச் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவிப்பார்கள் என்கிறது உளவியல்.
நாம் அணியும் உடைக்கு நமது உணர்வை மாற்றும் சக்தி இருக்கிறது. சில நாட்களில் காலையில் எழுந்திருக்கும் போதே சோம்பேறித்தனமாக உணர்வோம். அப்போது குளித்துவிட்டு, நீட்டாகப் பிடித்த நல்லதொரு உடையை எடுத்து அணிந்து கொண்டால் சோம்பல் காணாமல் போய் மனது சுறுசுறுப்பாகிவிடும்.
கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு; தினமும் ஒரே நேரத்தில் எழுந்து குளித்து, நன்றாக உடுத்திக்கொள்வது அந்த நாளுக்கு ஒரு தெளிவான வடிவத்தைத் தருகிறது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கும், ஓய்வுபெற்ற பெரியவர்களுக்கும், வேலையில்லாத நாட்களில் விடுமுறையில் இருப்பவர்களுக்கும் இந்த ஒழுங்கு ஒரு நல்ல பிடிமானத்தைத் தருகிறது.
‘ஒரு நாளை ஏனோதானோவென்று தொடங்காமல், நாம் அந்த நாளைச் சிறப்பாகத் தொடங்கி வைக்கிறோம்’ என்கிற நிறைவான உணர்வு கிடைக்கிறது. உடை அணிவது என்றால் விலையுயர்ந்த, பகட்டான உடையை அணிய வேண்டும் என்பதல்ல. சுத்தமான, உடலுக்குப் பொருத்தமான, பிடித்தமான உடைகளே போதும்.
நன்றாக உடை அணிவதால் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. ஆனால், இதுபோன்ற சிறு பழக்கங்கள் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். பண்டிகை நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்துப் புத்தாடை அணிந்து அந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது நமது வழக்கம் தானே! அதைத்தான் இன்று உளவியல் ஆய்வுகளும் விளக்குகின்றன.
‘வீட்டில்தானே இருக்கிறோம், எப்படி உடுத்தினால் என்ன?’ என்று அலட்சியமாகத் தோன்றினால் ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கலாம். நாம் உடுத்துவது உடலுக்கு மட்டுமல்ல, மனதின் மகிழ்ச்சிக்கும் சேர்த்துதான்!
வாசகர்கள் தாங்கள் வீட்டில் அணியும் சாதாரண உடைகளுக்கும் தங்களது மனநிலைக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பைப் புரிந்துகொண்டு, தங்களின் நாளை சுறுசுறுப்பாக மாற்றிக்கொள்வார்கள்.