
கடந்த 11/06/25 மிகவும் கோலகாலமாக கீழ பனையூர் ஶ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் கருட சேவை வைபவம் இனிதே தொடங்கி மன்னார்குடி கைலாச நாதர் கோயிலில் முதன் முறையாக வைகாசி பௌர்ணமி 12 உதய கருட சேவையில் சங்கமித்தார்கள்.
கிட்ட தட்ட எனக்குத் தெரிந்து 76 வருடங்களில் ஶ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளி சேவை சாதிப்பது மட்டுமல்லாமல் மற்ற பெருமாளுடன் அதுவும் முதல் முறையாக மன்னார்குடி கைலாசநாதர் கோயிலில் 12 உதயக் கருட சேவை சாதிப்பது மிகவும் விசேஷம்.
மன்னார்குடி சுற்றி உள்ள 12 கிராமங்களில் உள்ள பெருமாள் அவர் தம் ஊரிலிருந்து கருட சேவை வாகன சேவையில் எழுந்தருளி மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால ஸ்வாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கிருந்து கடைதெரு வழியாக 12 பெருமாளும் ஒரு சேர கைலாசநாதர் சன்னதி அடைந்து பக்த கோடிகளுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக அமைந்து இருந்தது.
நம்மில் பல பேர் மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால ஸ்வாமி கருட சேவை, திருநாங்கூர் கருட சேவை, காஞ்சிபுரம், திருப்ப தி மற்றும் மேல்கோட்டை வைர முடி சேவை சேவித்து இருப்போம்.
ஆனால் ஏன் எதற்காக இந்தக் கருட சேவை.? பெருமாளுடன் சேவிக்க வேண்டும்? அதன் தாத்பரியம் என்ன என்பது தெரியாமல் இருக்கும்? அது அவர்கள் குற்றமல்ல.
ஏதோ மன்னார்குடி கருட சேவை. நாங்கூர் கருட சேவை சேவிச்சோம். கன்னத்தில் போட்டு கொண்டோம். திருவிழாவில் பொம்மைகள், வீட்டுச் சாமான்கள் வாங்கினோம் என்கிற மாதிரி தான் இருந்து வந்துள்ளது.
அடியேன் படித்துத் தெரிந்த விஷயத்தைப் பற்றிப் பதிவாகப் போட வேண்டும். என் பதிவுகள் மிக எளிமையாக எல்லோருக்கும் சேர வேண்டும் என்கிற நல்ல எண்ணம் தான்.
இப்போது ஏன் கருட சேவை கொண்டாடப்பட வேண்டும்?
கருடனுக்கு ஏன் இவ்வளவு மகிமை?
பெருமாளுக்கும் கருடனுக்கு உள்ள Bondage என்ன? என்பதைப் பார்ப்போம்.
பெருமாள் கோயில்களில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். "கருட சேவை" அல்லது "கருட வாகன சேவை" என்பது, திருமால் தனது வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தரும் நிகழ்வு.
இது பெரும்பாலும் வைணவக் கோயில்களில் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
கருடனை "பெரிய திருவடி" என்று போற்றுகின்றனர். கருட சேவையைத் தரிசிப்பது பெரும் புண்ணியம் என்பது வைணவர்களின் நம்பிக்கை.
இந்த 12கருட சேவையைத் தரிசிப்பது, 22 திவ்ய தேசங்களுக்குச் சென்று கருட சேவை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த நிகழ்வு, வைணவ பக்தர்களுக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாகவும், ஆழ்வார் பெருமக்களின் பாசுரங்களின் மகிமையைப் பறைசாற்றுவதாகவும் திகழ்கிறது.
கருட சேவையின் சிறப்பு:
* மகாவிஷ்ணுவின் வாகனம்: கருடன் பகவான் விஷ்ணுவின் பிரதான வாகனமாகத் திகழ்கிறார். பெருமாள் கோயில்களில் கருடனுக்கு இறைவனுக்கு இணையாக மதிப்பும், கௌரவமும் அளிக்கப்படுகிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வு: பெருமாள் கோயில்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்களில் கருட சேவை ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். இந்த நாட்களில் கருடனின் படம் வரைந்த கொடியையே கோயில் கொடிமரத்தில் ஏற்றுவார்கள்.
* தோஷ நிவர்த்தி: கருடனை வணங்கி வருபவர்களுக்கு விஷ ஜந்துக்களால் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என்பதும், பல தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. ராமாயணத்தில் இந்திரஜித் ஏவிய நாகாஸ்திரத்தால் ராமனும், வானர வீரர்களும் மயக்கமடைந்தபோது, கருடன் தோன்றி அந்த நாகாஸ்திரங்களை உடைத்து, ராமனும், வானர வீரர்களும் மீண்டு எழ உதவினார் என்று கூறப்படுகிறது.
ஒரே இடத்தில் ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் நிகழ்வு மிகவும் விசேஷமானது.
ஒரு கருட சேவை சேவித்தாலே புண்ணியம், நாகத் தோஷம் நீங்கும் என்கிற ஐதீகம். ஆனால் மன்னார்குடியில் 12கருட சேவை அதுவும் ஒரே இடத்தில்.
இந்த வருடம் போல் தொடர்ந்து 12 கருட சேவை நடைபெற வேண்டும் என்று ஶ்ரீ கஸ்தூரி ரெங்கநாதரை உள்ளூர் வாசிகள் பிரார்த்திப்போம்