மகன் பூஜித்த தந்தை... கவசம் அமைத்து காத்த அன்னை! கீழ்வேளூரில் நடந்த அதிசயம்!

Keezh velur temple
Keezh velur temple credit Daily thanthi
Updated on
Deepam strip
Deepam strip

கீவளூர் என்று தற்போது பேச்சு வழக்கில் அழைக்கப்படும் கீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள திருத்தலத்தில் (Keezh velur temple) இறைவன் கேடிலியப்பர், அட்சயலிங்கேஸ்வரர் என்றும், அன்னை வனமுலைநாயகி, சுந்தரகுஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று.

தேவர்களைக் காக்க சூரபத்மனை வதம் செய்தார் முருகப் பெருமான். சூரனை அழித்த பாவம் நீங்க சிவாலயங்களில் பூஜை செய்தார். ஒவ்வொரு தலத்திலும் அவரின் பூஜைக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முயன்றன கெட்ட சக்திகள். இதனால் முருகப் பெருமான் மனம் துவண்டார். அப்போது சிவபெருமானின் அருளினால் சிக்கல் அருகிலுள்ள இலந்தை வனத்தில் உறையும் சிவபெருமானைப் பூஜிக்க வந்தார்.

இலந்தை வனத்தில் சுயம்புவாக அருளும் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தார். அவரின் பூஜைக்கு தீய சக்திகள் இடையூறு செய்தன. இதனைக் கண்ட பார்வதிதேவி, தன் மகன் செய்யும் சிவபூஜைக்குத் தடங்கல் நேராமல் இருப்பதற்காக காளியாக வந்தார். முருகப்பெருமான் பூஜை செய்யும் இடத்தைச் சுற்றி நான்குபுறமும், மேலேயும் கவசம் உண்டாக்கி, தீய சக்திகளைத் தடுத்து நிறுத்தினார் காளி. இதனால் முருகப்பெருமானின் சிவபூஜை சிறப்பாக தடங்கலின்றி நடந்து முடிந்தது.

முருகப்பெருமான் பூஜை செய்வதற்காக கவசம் ஏற்படுத்தி பாதுகாத்த அன்னை ‘அஞ்சுவட்டத்தம்மன்’ என்று திருநாமத்தோடு இத்திருத்தலத்தில் அருள்புரிகிறார். அஞ்சுவட்டத்தம்மன் இங்கு சுதை வடிவில், பெரிய திருஉருவத்தில் பத்து திருக்கரங்களுடன் அருள்கிறார்.

முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபூஜை செய்தபோது, அபிஷேகத்திற்கு தீர்த்தம் வேண்டும் என்பதால், அருகில் பூமியில் தன் வேலினை ஊன்ற, அதிலிருந்து தீர்த்த நீர் வெளிப்பட்டது. அந்த தீர்த்தமே இப்போதும் இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதன் பெயர் சரவணப் பொய்கை.

இலந்தை வனத்தில் சுயம்புலிங்கமாக அருளிய கேடிலியப்பர், இப்போது இந்த ஆலயத்தின் மூலவராக அருள்கிறார். இவருக்கு புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது. தம்மைப் பூஜிப்பவர்களுக்கு எந்தத் தீவினையும் நெருங்காமல், தோஷங்கள் அண்டாமல் இவர் காப்பதால் கேடிலியப்பர் என்று பெயர்பெற்றார்.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமுதத்தின் ஒரு துளி இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து, வட பத்ரிகாரண்யம் என்ற பெயர் பெற்றது. மற்றொரு துளி தென்னிந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி தென் பத்ரிகாரண்யம் என்று பெயர் பெற்றது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் நிறைந்து காணப்பட்ட இந்த திருத்தலம் தென்பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்படலாயிற்று. இன்றும் இலந்தை மரம் இத்தலத்தில் தலவிருட்சமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: மார்பில் மரு, காலில் தழும்பு, விரல்களில் நகங்கள் - உயிரோட்டமான அதிசய நடராஜர்! எங்கே?
Keezh velur temple

முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபூஜை செய்தபிறகு, கீழ்வேளூரின் எட்டு திசைகளிலும் உள்ள கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் உள்ள கோவில்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

முருகப் பெருமான் சிவபெருமானை பூஜிக்கும் முன்பாக விநாயகரை வழிபடுவதற்காக மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வழிபட்டார். இந்த தலமே இப்போது கீழ்வேளூர் அருகே ‘மஞ்சாடி’ என்று அழைக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com