
‘கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா! உந்தன்னை’ - எனும் திருப்பாவையின் 27வது பாடலுக்கு மகிமை அதிகம். காரணம்?
ஸ்ரீரங்கநாதனுடன் ஆண்டாள் நாச்சியார் கலந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு மார்கழி மாதம் 27ம் தேதியன்று கூடாரவல்லி நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
‘கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’ என்ற திருப்பாவை பாடலைப் பாடி ஆண்டாள் நாச்சியார், தனது விரதத்தை நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்கழி மாதம் என்றாலே மிகக் குளிராக இருக்கக்கூடிய காலமாக இருந்தாலும், தினமும் காலையில் எழுந்து, குளித்து, சுத்தமாகி, சிறப்பு பூஜைகளை வீடுகள் மற்றும் ஆலயங்களில் செய்வது வழக்கம்.
இதன் தொடர்ச்சியாக மார்கழி மாதத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் உறையும் இறைவனையே மணந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் 27 நாட்கள் விரதமிருந்த ஆண்டாள், தனது நோன்பை நிறைவு செய்யக்கூடிய கூடாரவல்லி நிகழ்வு ஜனவரி 11 (மார்கழி 27) அன்று நடைபெறுகிறது.
இன்றைய தினம் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானையும், ஆண்டாள் நாச்சியாரையும் வழிபடுவது வழக்கம். இத்தகைய அற்புத தினத்தில்தான் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
திருமாலின் அருளை பெறுவதற்காகவும், திருவடியாகிய வைகுண்ட பதவியை அடைவதற்கும் வழி செய்யும் பாவை நோன்பின் நிறைவு நாளையே கூடாரவல்லி என போற்றுகின்றோம். இதன் சிறப்பையே திருப்பாவையின் 27வது பாசுரத்தில், ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என ஆண்டாள் குறிப்பிடுகிறார். மணமாகாத பல பெண்கள் இறைவனை வேண்டி பாவை நோன்பு இருக்கின்றர்.
கூடாரவல்லி தினமன்று வைஷ்ணவர்கள், நெய் வடியும் பாலில் செய்த சர்க்கரைப் பொங்கல் எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர். அன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் விசேஷம்.
ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவச் சிலை சன்னிதியில் இல்லாமல், சன்னிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது, அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்று கூறப்படுகிறது. ஆண்டாள், தான் விரும்பியபடி செய்யமுடியாத நைவேத்தியங்களை, பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீராமாநுஜரே செய்து பெருமாளுக்குப் படைத்தார். அதன் காரணமாகவே ஆண்டாள் நாச்சியார், ராமாநுஜரை 'அண்ணா' என்று அழைத்து சன்னிதியை விட்டு வெளியே வந்து அழைத்துச் சென்றாராம். அதை நினைவுறுத்தும் பொருட்டே சன்னிதியை விட்டு, ஆண்டாள் அர்த்தமண்டபத்துக்கு எழுந்தருளுகிறார்.
கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்து, பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
திருப்பாவை - 27 ஆவது பாடல்:
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.‘‘
கோவிந்தா! நீயும் எங்களுடன் இருந்து மகிழ்ச்சி பெருக குளிர்ந்து எமக்கு அருள்வாய்" என்று மனதார வேண்டுகிற ஆண்டாள் நாச்சியாருடன்,
நாமும் கோவிந்தனையும் ஆண்டாளையும் வணங்கி ஆசி பெறுவோம்.