
மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியன்று, பெருமாள் கோயில்களில் காலையில் திறக்கும் பரமபதவாசல் நாள்தான் ‘வைகுண்ட ஏகாதசி’யென அழைக்கப்படுகிறது. பெரும்பாலான கோயில்களில் வடக்குப்பகுதியிலிருக்கும் வாசல் ‘பரமபத வாசல்’ என்று கூறப்படுகிறது. வருடம் முழுவதும் மூடி வைக்கப் பட்டிருக்கும் வாசல், இந்த தனுர் மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப்படும். இதனை ‘சொர்க்க வாசல்’, ‘பரமபத வாசல்’ என்று கூறுகின்றனர்.
இது பற்றிய புராணக்கதை ஒன்று உள்ளது. அது...
ஒரு சமயம், மதுகைடபர்கள் எனப்படும் இரு அசுரர்கள், பிரம்மதேவரிடமிருந்து வேதத்தை அபகரித்துச் சென்றனர். பிரம்ம தேவர், திருமாலிடம் வேண்ட, திருமாலும் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார். மதுகைடபர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்ம தேவரிடம் ஒப்படைத்தார்.
போரில் சாகும்தறுவாயில், மதுகைடபர்கள், தங்களுக்கு முக்தியளிக்குமாறு திருமாலை மனமுருகி வேண்டினர். மனமிரங்கிய திருமால் "மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதம் அளிக்கிறேன்" என்று வாக்கு கொடுத்தார். அவர் அளித்த வாக்குப்படி, பரமபத வாசல் வழியே அவர்களை அழைத்துச் சென்ற தினமே வைகுண்ட ஏகாதசியாகும்.
மார்கழி என்றாலே கண்ணனும், ஆண்டாளும் நினைவில் வருவார்கள். கண்ணன் மார்கழி மாதமென்றால், அது திருமாலுக்கும் உரியது.
பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிக முக்கியமான நாள்.
ஏகாதசிக்கு முதல் நாளாகிய தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடவேண்டும். ஏகாதசி தினம் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும். முடியாதவர்கள், பழங்கள், பால் போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம். இரவு கண் விழித்து ஆழ்வார் பாசுரங்களைப் பாடுவது, திருமாலின் சரிதங்களைக் கேட்பது, பாராயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது பலனையளிக்கும்.
பலர், ‘பரமபத சோபனம்’ என்ற பரம்பரை விளையாட்டை விளையாடுவதுண்டு. மறுநாள் துவாதசி அதிகாலையில் எழுந்திருந்து குளித்து, கடவுளை வழிபட்டு திருமால் நாமம் சொல்லியபின், நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்த எளிய உணவைச் சாப்பிட்டு பட்டினியை நிறைவு செய்யவேண்டும். துவாதசியன்றும், பகலில் உறங்குவதைத் தவிர்த்து இரவில் தூங்கவேண்டும். இதனை ‘ஏகாதசி விரதம்; துவாதசி பாரணை’ என்பார்கள்.
உலகம் முழுவதிலும் எங்கெங்கு பெருமாள் கோயில் இருக்கிறதோ, அத்தனை கோயில்களிலும், வைகுண்ட ஏகாதசி பண்டிகை கொண்டாடப்படும். அதிகாலையில் திருமால் ‘பரமபத’ வாசல் வழியாகத்தான் புறப்பட்டு கண்டருள்வார்.
பெருமாளை மனதார எண்ணி, வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்களுக்கு ‘பரமபத வாசல்’ தானே திறக்கும் என்பது நிதர்சனம்.
அக்னி புராணத்தில், ‘காயத்ரி மந்திரத்திற்கு ஈடான மந்திரமில்லை; தாய்க்கு சமமான தெய்வமில்லை; காசிக்கு அதிகமான புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு சமமான விரதமில்லை!’ என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, விரதங்களின் அரசனாகிய ஏகாதசிகளின் அரசன் என அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பவர்களுக்கு, ஸ்ரீவைகுண்டவாசியாகிய பெருமாள், பரமபத வாசலைத் திறந்துவைத்து அருள் புரிவாரென்பது ஐதீகம்.