
திருமாலின் திருமார்பில் வசிப்பவள்தான் திருமகள். திருமாலை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் அத்திருமாலின் பிரியத்திற்கு முழு பாத்திரமாக இருந்து கொண்டு நம்மை எல்லாம் தமது திருவருளால், திருமாலின் திருவருளுக்கு இலக்காகும்படி செய்பவள் மஹாலக்ஷ்மி தாயார்தான். ‘திருமாலே, எங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியோ, சாமர்த்தியமோ, நல்வினைகளோ எங்களிடம் இல்லவே இல்லை. நீயே பார்த்து போனால் போகிறது என்று எங்கள் மீது கருணை கொண்டு எங்களைக் காப்பாற்றினால்தான் உண்டு’ என்று தன்னை வந்து சரணடைந்தவர்களைக் காப்பதற்காகவே, ‘சரணாகத ரக்ஷணம்’ என்ற யக்ஞத்தை செய்து கொண்டிருக்கிறானாம். அப்படி அந்தத் திருமால் யக்ஞத்தை செய்யும்போது அந்த உத்தமமான தர்மத்திற்கு காவல் காப்பவளாக திருமாலின் அருகிலேயே இருந்து கொண்டு அந்த யக்ஞத்தை வெற்றிகரமாக நடத்தி வைக்கிறாள், விஜயலக்ஷ்மியாய்.