

ஒரு நாள் சுமங்கலி... மறுநாள் விதவை கோலம்! கூவாகம் திருவிழாவின் உருக்கமான பின்னணி... அறிவோமா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளின் முக்கிய புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.
மகாபாரத அரவானின் நினைவு கூறும் வகையில், சித்திரை மாதத்தில் நடைபெறும் 18 ஆம் நாள் திருவிழாவில், திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அடுத்த நாள் கைம்பெண்ணாக மாறுவது புகழ் பெற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த திருவிழாவில் 14ஆம் நாள் திருநங்கைகள், கூத்தாண்டவரின் தாலியை கட்டிக்கொண்டு தங்களை அரவாணி மனைவியாக கருதி உருவகப்படுத்திக் கொள்வார்கள். பதினாறாம் நாள் கூத்தாண்டவர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கைம்பெண்ணாக மாறி தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து வளையல்களை உடைத்து அரவாணி மரணத்தை திருநங்கைகள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு அழகிப்போட்டி நடத்துவார்கள். ஆடிப்பாடி சந்தோஷமாக இருப்பார்கள். இந்த கோவிலும் இந்த திருவிழாவும் திருநங்கைகளின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்த விழா நடைபெறும். இந்த கோவில் விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கூத்தாண்டவர் நாக கன்னிகையின் மகன் அரவான் எனப்படுபவர். மகாபாரதப் போரில் அர்ஜுனன் மனைவி நாக கன்னிகைக்கு பிறந்தவர் தான் இந்த அரவான். மகாபாரத போரில் முதல் பலியாக ஒரு உயிர் பலி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் அரவான் கொல்லப்படுகிறார். அரவான் அதற்கு முன்பாக கிருஷ்ணரிடம் இரண்டு வரம் கேட்கிறார். ஒன்று "சாகப்போகும் நான் இல்லறத்தில் ஈடுபட வேண்டும்" மற்றும் "18 நாள் பாரதப்போரையும் என் கண்களால் பார்க்க வேண்டும்" என்ற வரத்தை பெற்றார்.
மறுநாள் சாகக்கூடிய அரவானுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? ஒருவரும் சம்மதிக்கவில்லை. எனவே கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். மறுநாள் அரவான் பலி கொடுக்கப்பட்டு மோகினி விதவை கோலம் போடுகிறாள். இதன் அடிப்படையில் தான் இந்த விழா நடைபெறுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலில் உள்ள பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு அன்றைய தினம் மிகவும் சந்தோஷமாக ஆடிப்பாடி உற்சாகமாக இருப்பார்கள். மறுநாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிற்பம் வைக்கப்பட்டு கூத்தாண்டவர் கோவிலில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொலைக்களமான அமுத களம் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு அரவான் தலை வெட்டப்படுகிறது. உடனே திருநங்கைகள் தங்கள் கணவர் இறந்ததாக கருதி தங்களது தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து கொள்கிறார்கள். அதன் பின்னர் வெள்ளை புடவை கட்டி விதவை கோலம் போடுகிறார்கள்.
ஆடி செவ்வாயும் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கூத்தாண்டவர் திருநங்கைகளின் காவல் தெய்வமாக செயல்படுகிறார்.
இந்த விழாவில் கிருஷ்ணர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதை அடிப்படையாகக் கொண்டு திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் அவதாரமான மோகினியாக கருதி தங்கள் கழுத்தில் தாலியை கட்டிக்கொண்டு மறுநாள் தாலி அறுக்கும் சடங்கையும் நடத்தி வருகின்றனர். குருசேத்திரப் போர் எப்படி 18 நாட்கள் நடைபெற்றதோ அதேபோன்று இந்த திருவிழாவும் 18 நாட்கள் நடைபெறுகிறது.
அரவான் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவன். மகாபாரத போரில் சகாதேவன் ஓலைச்சுவடியை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவன் தான் முதல் பலி கொடுக்க வேண்டும் என கூறுகிறார். அதன்படி சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்கள் மூன்று பேர். கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் அரவான். கிருஷ்ணன், அர்ஜுனன் இல்லையென்றால் மகாபாரத போர் நடைபெறாது. இதற்காகவே அரவானை பலி கொடுக்க எண்ணினார்கள்.
அரவானின் நிபந்தனைப்படி கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். மறுநாள் அரவான் பலி கொடுத்த பிறகு மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணர் விதவைப் போல உணர்கிறார். அதன்படி வெட்டப்பட்ட தலையுடன் அரவான் 18 நாள் போரையும் கண்டு களிக்கிறார்.
விழுப்புரம் முதல் கோவை வரை அரவானுக்கு 32 கோவில்கள் உள்ளன. இதில் முதன்மை இடத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. எனவே கூத்தாண்டவர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.