கும்பகோணம் செல்லும் வழியில் மயிலாடுதுறையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோழம்பேட்டை அருகே உள்ளது கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் ஆலயம். 14 அடி உயர ஒரே அத்தி மரத்தால் ஆன வானமுட்டிப் பெருமாள் மிகவும் விசேஷமானவர். ஸ்ரீ தயாலக்ஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கின்ற வானமுட்டி பெருமாள் பிப்பல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த தலமாகும்.
சிறந்த பரிகார ஸ்தலம்:
சனி கவசம் பாடப்பட்ட இக்கோவிலில் பெருமாளை வழிபட பிரம்மஹத்தி தோஷம் முதலான கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கோடிஹத்தி என்ற பெயர்தான் பிற்காலத்தில் மருவி கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
சரும நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான சிறந்த பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது. இங்குள்ள விஸ்வ புஷ்கரணியில் நீராடி, வானமுட்டிப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்ய, எந்த வகையான சரும நோய்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. இங்குவந்து வேண்ட சனி கிரக தோஷம் மற்றும் அனைத்து வகையான சரும நோய்களில் இருந்தும் விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
அத்தி மரத்தாலான மூலவர்:
இங்கு மூலவர் 14 அடி உயரத்தில் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். மேல் கைகளில் சங்கு, சக்கரமும் இடது கையில் கதையும், வலது கை அபயஹஸ்தத்திலும் உள்ளது. துளசி மணிகள், ஆபரணங்கள் மற்றும் என் யக்ஞோபவீதம் ஆகியவை மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு, மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கி நின்ற நிலையில் பிரம்மாண்டமாக அருள் புரிகிறார்.
பக்தப்ரியன் என்ற பெயரில் பெருமாள் தயாலட்சுமி, பூமி தேவியோடு காட்சி தருகிறார். கோவிலுக்குள் பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருப்பதி பெருமாளை விட உயரமானவர் இந்த அத்திவரதர். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம் என அமைந்துள்ளது இக்கோவில்.
சப்த ஸ்வர ஆஞ்சநேயர்:
இங்கு 3 1/2 அடி உயரம் உள்ள சப்த ஸ்வர ஆஞ்சநேயர் உள்ளார். இவர் தலைக்குப் பின்னால் வாலை உயர்த்தி, மணியுடன் கூடிய வடிவில் காணப்படுகிறார். சிலையை தட்டினால் ஏழு இடங்களில் ஓசை வருகிறது.
இங்கு யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார் நர்த்தன கிருஷ்ணர், கருடாழ்வார், வரதராஜப் பெருமாள், ராமானுஜர், விஷ்வக்சேனர், பிப்பல மகரிஷி ஆகியோருக்கான சன்னதிகளும் உள்ளன.
கோவிலில் ஏழு கிணறுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஏழு புனித நதிகளில் ஒன்றைக் குறிக்கின்றன. கோவில் விமானம் சந்திர விமானம் என்று அழைக்கப்படும் குடை போன்றது.
திருவிழாக்கள்:
மூன்று நாட்கள் பவித்ரோத்சவம், தையில் பிரம்மோற்சவம் - சிரவணத்தில் தேர்த் திருவிழா, ஆனி ரோகிணியில் அபிஷேகம் நடைபெறும்.
கோவில் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை. இங்கிருந்து செல்வதற்கு பேருந்து வசதிகளும், ஆட்டோக்களும் உள்ளன.