

தனுர் மாதம் எனும் மார்கழி மாதம் சிரேஷ்டமான மாதம்.
பக்திக்கு முதலிடம் தரும் ‘பீடுடைய’ மாதம்.
“மாதங்களில் மார்கழி”யாக இருப்பதாக பகவானே திருவாய் மலர்ந்தருளியிருக்கும் மாதம்.
வீதி பஜன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் அபிஷேக ஆராதனைகளும், உபன்யாசங்களும், சங்கீத ஆராதனைகளும், உற்சவங்களும் களைகட்டும் மாதம்.
திருப்பாவை, திருவெண்பாவை பாடுதலும், வைகுண்ட ஏகாதசியும், ஆடவல்லானின் திருவாதிரைத் திருநாளும் தனுர் மாதத்தின் சிறப்பல்லவா !
சகல சௌபாக்கியங்கள் அருளும் “குசேலர் தினம்” (Kuchela Day or Kuchela Dinam) வரும் மாதமும் தனுர் மாதம் தான்.
ஆம் ! தனுர் மாதத்தின் முதல் புதன் கிழமை அன்று தான் ‘குசேலர் தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் 17ம் தேதி 'அட்சயமான' செல்வத்தை வழங்கும் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது.
குசேலர் கிருஷ்ணரின் பால்ய சிநேகிதர். சுதாமா என்பது தான் அவரது இயற்பெயர்.
ஸ்ரீகிருஷ்ணர் சிறுவயதில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வேதங்கள் பயின்ற போது அவருடன் உடன் பயின்றவர், சுதாமா !
சுதாமாவின் மனைவி பெயர் சுசீலை. சுதாமா வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். நிறைய குழந்தைகள். அவரது ஆடைகள் கிழிந்து அழுக்கடைந்து இருக்கும். அதனாலாயே அவர், 'குசேலர்' என அழைக்கப்பட்டார்.
'குசேலம்' என்றால் கிழிந்து நைந்துபோன துணி. ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்ததால், சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயர் அவருக்கு மாறியது!
வறுமை, பசி, பட்டினி ! சுதாமாவின் மனைவி சுசீலை, கணவரை, அவரது பால்ய நண்பரான ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து ஏதேனும் உதவிகள் பெற்று வர வேண்டுமெனக் கேட்டார்.
அன்பு பரிசு கொண்டு செல்லக் கூட ஏதும் இல்லை.
மூன்று பிடி அவல் மட்டுமே இருந்தது. அதை ஒரு துணியில் முடிந்து கொடுத்தாள் சுசீலை.
அரண்மனையை அடைந்த குசேலரை, அரண்மணை வாசலுக்கே வந்து வரவேற்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
கருணாமூர்த்தி கண்ணனும், ருக்மணி தேவியும் குசேலருக்கு பலவித உபசாரங்கள் செய்தனர். அறுசுவை விருந்து அளித்தனர். கண்ணபிரானின் அன்பில் அகமகிழ்ந்து போன, சுதாமா, தான் வறுமையில் உழல்வதைக் கூறி, வேண்டிய செல்வத்தைப் பெற வேண்டும் என்பதை மறந்தே போனார் !
முக்காலமும் உணர்ந்த கருணாமூர்த்திக்குத் தெரியாதா சுதாமாவின் நிலை ?
இதுவும் அவனது விளையாட்டு தானே ?
“நண்பா ! எனக்காக என்ன கொண்டு வந்தாய் ?” என வினவிய படியே, உரிமையுடன், குசேலர் வசம் இருந்த அழுக்குத் துணியில் கட்டி வைத்த அவலை எடுத்துக் கொண்டார் ஸ்ரீகிருஷ்ணர் !
“ஆகா எனக்குப் பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா?” என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் 'அட்சயம்'' என்று உச்சரித்தார்.
ஒரு பிடி அவலை அவர் உண்ணும் போதே, சுதாமாவின் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டானது!
குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, மாளிகையாக மாறியது.
அந்த வினாடியில் இருந்து, குபேரனுக்கு நிகரான செல்வச்செழிப்புடன் சுதாமா வாழ்ந்தார்.
சுதாமா, துவாரகாபுரிக்குச் சென்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்த நாள், மார்கழி மாதம் முதல் புதன் கிழமை ஆகும். பக்ஷம், திதி, நட்சத்திரம் போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல், மார்கழி (தனுர்) மாதம் முதல் புதன் கிழமை அன்று, குசேலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் குசேலர் தினம், அவல் தினம் எனவும் அழைக்கப்படுகிறது ! கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் பல குருவாயூரப்பன் கோவில்களிலும் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில், அவல், வெல்லம் கலந்த அவல், அவல் பாயாசம் முதலிய நைவேத்தியங்கள் மிகப் பிரசித்தம் !
கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.
கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.
மார்கழி மாதம் , முதல் புதன் கிழமையில், ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினால், செல்வம் பெருகும், மகாலக்ஷ்மி கடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம் !
அவரவர் வீட்டிலும், கிருஷ்ணருக்குப் பூஜை செய்து, அவல் பாயாசம், வெல்ல அவல் நிவேதனம் செய்து, தனலஷ்மியின் அருளைப் பெறுவோமே!