

இந்தியா முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தியாகும். பகவான் கிருஷ்ணரின் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்கள், தங்கள் வீடுகளில் கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து, அவரை வீட்டிற்கு அழைத்து வழிபடுவார்கள்.
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினத்தை போற்றிக் கொண்டாடும் தினமே கிருஷ்ண ஜெயந்தி. தமிழ் மாதம் ஆவணி மாதம், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் இணைந்துவரும் நன்னாளில் இது வருகிறது. இதை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஜென்மாஷ்டமி என பல பெயர்களால் பக்தர்கள் அழைப்பது உண்டு.
ஆண்டுதோறும் இந்த நாளில் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படும் மதுரா நகரிலும், கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்திலும் மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு (2026) கோகுலாஷ்டமி வரும் செப்டம்பர் 4-ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதாவது இந்து மத சாஸ்திரங்களின் படியும், புராணங்களின் படியும் பகவான் கிருஷ்ணர், மதுராவில் உள்ள சிறையில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்ததாக வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 4-ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.
அஷ்டமி திதி செப்டம்பர் 4-ம்தேதி அதிகாலை 02.08 மணிக்கு தொடங்கி அன்றைய தினம் இரவு 11.46 மணிக்கு நிறைவடைகிறது.
ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 4-ம்தேதி அதிகாலை 12.57 மணிக்கு தொடங்கி, அன்றைய தினம் இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.
அதன்படி இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை அன்று வழிபாடு செய்ய செப்டம்பர் 4-ம்தேதி இரவு 9 மணி முதல் இரவு 11.15 மணி வரை சிறந்த நேரமாகும்.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக நம்பப்படுவதால், மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிறப்புப் பூஜைகள் செய்து, நள்ளிரவில் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
மேலும் கிருஷ்ணர் பிறந்த நள்ளிரவு நேரத்தில் விளக்கேற்றி, கிருஷ்ண ஸ்லோகங்கள் சொல்லி வழிபட வேண்டும்.
அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிடித்த வெண்ணெய் மற்றும் அவல் ஆகியவற்றை முக்கிய நைவேத்தியமாகப் படைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யக்கூடாத மற்றும் தவிர்க்க வேண்டியவை :
கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் வெங்காயம், பூண்டு மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
கிருஷ்ணருக்குப் பிரியமான துளசி இலைகள் இல்லாமல் பூஜை செய்யக்கூடாது. பூஜையின்போது துளசி இலைகளைச் சாற்றுவது அவசியம். இந்தாண்டு வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால் அன்றைய தினம் துளசியை பறிக்கக்கூடாது. எனவே முதல் நாளிலேயே துளசியை பறித்து வைத்துவிட வேண்டும்.
முக்கியமாக எந்தவொரு பூஜையையும் தொடங்குவதற்கு முன்பும் மூல முதற்கடவுளான விநாயகரை வணங்காமல் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டைத் தொடங்கக் கூடாது.
அன்றைய தினம் காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருக்கவேண்டும். விரதம் தொடங்கிய நிமிடம் முதல் கிருஷ்ணர் நாமத்தை மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டின் வாசல் தொடங்கி பூஜை அறை வரை கிருஷ்ணரின் சின்னக் கால் பாதங்கள் அரிசி மாவால் வரைந்து அவரை வீட்டிற்குள் அழைத்து வரவேண்டும்.
மாலையில் கோவிலுக்கு சென்று கிருஷ்ணரை வணங்கிவிட்டு அபிஷேகம் செய்யவேண்டும்.
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய், அவல் அல்லது பால் சோறு போன்ற நைவேத்தியங்களை வைக்காமல் வழிபாடு செய்யக்கூடாது.
கிருஷ்ணருக்கு பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தை முதலில் சிறு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அவர்களுக்குக் கொடுக்காமல் நாமே முதலில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த நன்னாளில் யாரிடமும் கோபமாகப் பேசுவதோ, தீய எண்ணங்களை வளர்த்துக்கொள்வதோ அல்லது பிறருக்குத் தீங்கு இழைப்பதோ கூடாது.
போதை வஸ்துக்களை அறவே தவிர்க்கவேண்டும்.
இந்த நாளில் விரதம் இருந்த மனதார கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
கிருஷ்ணரின் அருளைப்பெற நாம் தர்மத்தின் வழியில் வாழவேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்காகவே ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.