
சர்ப்ப தோஷம் மற்றும் சரும நோய்களை நீக்கும், புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் குமாரதாரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது. 5000 வருடம் பழமையான இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
புராண காலத்தில் கத்ரு என்ற நாகமும், அதன் குட்டிகளும் தன் தாய் வினுதாலியை ஏமாற்றி அடிமையாக்கியதை அறிந்த கருடன், கோபமடைந்து அனைத்து நாகங்களையும் கொல்லத் தொடங்குகிறார். இப்படியே பாற்கடலை கடைய கயிறாக இருந்த வாசுகி நாகத்தையும் ஒரு நாள் தாக்கினார். இதைக் கண்ட காஷ்யப் முனிவர் கருடனுக்கு அறிவுரை கூறி வாசுகியை விடுவித்தார்.
காயத்தால் பாதிக்கப்பட்ட வாசுகி ஈசனிடம் தன்னைக் காக்க வேண்டுகிறார். வாசுகிக்கு காட்சி கொடுத்த மஹாதேவன், வாசுகியை பூலோகம் சென்று மஹி நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபடச் சொன்னார். அவ்வாறு வாசுகியும் செய்ய , முருகப் பெருமான் காட்சி தந்து ரட்சித்து, அருள் பாலித்த இடம் தான் குக்கே சுப்பிரமணியசுவாமி கோயில். இங்கு முருகன் அனைத்து நாகங்களுக்கும் தலைவனாக இருக்கிறார்.
நரசிம்மர் வரலாறு:
மத்வாச்சாரிய முனிவர் இமயமலையில் வியாசரை சந்தித்தபோது, 8 சாலிகிராம கற்களையும், சக்திவாய்ந்த நரசிம்ம கல்லையும் மத்வச்சாரிய முனிவரிடம் கொடுத்து ஒரு சக்திவாய்ந்த கோயிலை வியாச முனிவர் உருவாக்க கூறினார். மத்வாச்சாரியார் 6 சாலிகிராமக் கற்களையும் குக்கே சுப்ரமணிய சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
நரசிம்ம கல்லை ஒரு பெட்டியில் வைத்து வழிபட்டார். இங்கு நரசிம்ம சுவாமிக்கு சிறிய கோயில் உள்ளது. அதில் நரசிம்ம சுவாமியின் சக்தி அடங்கிய திறக்கப்படாத பெட்டி உள்ளது.
முன்பொரு காலத்தில் இந்த பெட்டியை திறக்க ராஜா பல்லாளராயர் முயற்சிக்க, அதனால் அவர் உடல் முழுக்க எரிய தொடங்கியுள்ளது. எந்த வைத்தியமும் பலனளிக்காததால் அவர் கோயில் பூசாரியிடம் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். பூசாரி நரசிம்மரை வேண்டி வெண்ணெயை ராஜாவுக்கு பூசி எரிச்சலை குணப்படுத்தியுள்ளார் .
இக்கோயிலின் வாசலில் பால்லாளராயரின் சிலையும் உள்ளது. தினசரி அவருக்கு வெண்ணெய் பூசப்பட்டு குளிர்விக்கப் படுகிறார்.
குக்கே சுப்பிரமணிய சுவாமி:
குகையில் (குக்கே) உள்ள கருவறையில் மூல விக்ரகத்தில் ஆதிசேஷனுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. அவருக்கு மேலே வாசுகி, சுப்ரமணியர் இருக்கிறார். வாசுகியின் விஷக்காற்று பாதிப்பை தரும் என்பதால், இக்கோயில் கருவறைக்குள் யாருக்கும் அனுமதி இல்லை. தூரத்தில் இருந்து வெள்ளி கருடத்தூண் அருகே நின்று தரிசனம் செய்ய வேண்டும்.
ஆதி சுப்ரமணியர் சந்நிதி:
குக்கே சுப்பிரமணியரை தரிசனம் செய்துவிட்டு கோயிலின் பின்புறம் ஆதி சுப்ரமணியர் கோயிலுக்கு செல்லலாம். அங்கு 2 குகைகள் உள்ளன. ஒரு குகையில் வாசுகி முருகனை நினைத்து தவமிருப்பதால் அங்கு செல்ல தடை உள்ளது.
கோயிலுக்கு அருகில் ஓடும் மஹி ஆற்றில் தான் வாசுகி நாகம் நீராடி காயத்தில் இருந்து விடுபட்டது. இந்த மஹி நதியில் தான் சிவசக்தி குமாரனாகிய முருகன் அசுரர்களை கொன்ற பின் தன் ஆயுதங்களைக் கழுவியதால் குமாரதாரா என்று பெயர் பெற்றது. குமாரதாரா நதியில் புனித நீராடி, சுப்பிரமணியரை தரிசனம் செய்தால் சரும நோய்கள் தீரும் என ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சர்ப்ப தோஷம் நீங்கவும் இங்கு நீராடுகிறார்கள். இக்கோயிலுக்கு செல்ல ரயில், பேருந்து வசதிகள் உள்ளன. விமானம் மூலம் செல்பவர்கள் மங்களூர் அல்லது பெங்களூர் சென்றும் பயணிக்கலாம்.