

குளித்தலை அருகே உள்ளது அய்யர் மலை ஆலயம். இங்கே வீற்றிருப்பவர் ரத்தினகிரீஸ்வரர். இதை இரத்தினாசலம் என்றும் கூறுகிறார்கள். இது யுகங்களைக் தாண்டிய தலலமாகும். சூத முனிவர் இந்த தலத்துப் பெருமையை சொல்லியிருக்கிறார்.
இந்திரன் இங்கு தான் அகலிகையினால் பெற்ற சாபம் தீர தவமிருந்தார். குருபகவான் ஆலோசனை படி இம்மலையை வழிபட்டான். வியாழ பகவான் அறிவுரைப்படி இந்திரன் வேப்பமரம் பிரதிஷ்டை செய்தான். அவனே தன் வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கினான். அவன் பாவத்தை மன்னித்து சிவனும் அம்பிகையும் காட்சி தந்து தேவலோகத்தை கொடுத்தனர்.
இந்த மலையில் மன்னன் ஒருவன் அபூர்வ இரத்தினம் வேண்டி தவமிருந்தான். சிவன் ஒரு தொட்டி கட்டச்சொல்லி அதை காவிரி நீரால் நிரப்பச் சொன்னார். ஆனால் தொட்டி நிரம்பவே இல்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமுற்ற மன்னன் தன் வாளால் சிவலிங்கத்தை வெட்டினான். அவர்முன் மாணிக்கம் வந்து விழுந்தது. தன்செயலுக்கு மன்னன் வருந்தினான். இந்த மலை இது போன்ற இன்னும் பல சுவாரசியங்களைக் கொண்டது.
சித்தர்கள் பலர் உலாவும் மலை. ஒருமுறை சிவன் அபிஷேகத்திற்கான பாலை காகம் ஒன்று கவிழ்த்து விட, சித்தரின் கண்பார்வை அதை எரித்தது. அதிலிருந்து காகங்கள் இங்கு பறப்பதில்லை.
தக்ஷிணாயணம், உத்தராயணம், கிரகணம், அமாவாசை, சிரார்த்த தினங்களில் இங்கு தேவதீர்த்தத்தில் நீராடி, வேம்புக்கு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசித்து அந்தணர்களுக்கு தானம் செய்தால் கயா சிரார்த்த நலனைப் பெறலாம்.
வேம்பின் அடியில் கன்னிகா தானம் செய்ய சிவலோகம் கிடைக்கும். இங்குள்ள அந்தணர்களுக்கு தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்கு தங்கி தேவதீர்த்தத்தில் நீராடி வேம்பை பூஜித்தால் குஷ்டம், வாதம் போன்ற கொடிய நோய்கள் நீங்கும். தானே உதிர்ந்த வேம்பை உட்கொண்டால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள் கேட்கும் திறனைப் பெறுவர். ஊமைகள் பேசுவர், தீராத நோய்களைத் தீர்க்கும் பேராலயம் இது.
முன்பு பூமியினைத் தாங்கும் ஆதிசேஷன், தான் பலமானவனா, வாயு பலமானவனா என்று மோதினர். வாயு தன் பலத்தைத் காட்ட மேருமலைச் சிகரங்களை பிடுங்கி வீச முயன்று கைலாயம் பக்கம் வந்த போது சிவனால் சாபம் பெற்றான்.
இது நீங்க இங்கு வந்து தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து தினமும் மல்லிகை, ஜாதி, மகிழ், குவளை ஆகிய பூக்களால் இரத்தினகிரீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்ய, சிவன் காட்சி தந்து அவரை ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன், அபானன், வியானன், நாகன், கூர்மன், கிருஷ்ணன், தேவதத்தன், தனஞ்செயன் என்ற பத்து பெயர்களோடு இருக்க அருள்பாலித்தார். ஐப்பசி பௌர்ணமியில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் நற்கதி பெறுவர்.
ஆதிசேஷனும் தன் சாபம் நீங்கப் பெற்றான். அவன் தன் சாபம் நீங்க கோதண்டம், பிரகாசம், வில்வாரண்யம், சுசீந்திரம், அவினாசி, திருவையாறு ஆகிய தலங்களை தரிசித்த பின் இரத்தின கிரியை அடைந்தான்.
சூரியனின் சாபம் நீங்கிய தலமும் இது . அகத்தியர் இங்கு நெடுங்காலம் பூஜை செய்தார். அவருக்கு வேத ரகசியங்களை உரைத்தார் ஈசன். இது நடந்தது இங்குதான்.
இக்கோவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் சுவையான கெட்டித் தயிராக மாறுகிறது என்பது அதிசயமான ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு துர்காதேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. இங்கு அவள் மகிஷாசுரனை கொன்ற பாவம் நீங்கப் பெற்றாள்.
வேப்பமரமே தலவிருட்சமாக உள்ள இந்த ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி பூஜை நடைபெறுகிறது. இடி இந்திரனின் ஆயுதம்.
இக்கோவிலை கார்த்திகை சோமவாரத்தில் தரிசிப்பது புண்ணியமாகும்.