அற்புதமான கலையும், கற்களில் பொறிக்கப்பட்ட கதைகளும் நம் இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் அரிய சான்றுகளாக இருக்கின்றன. அதன் வரிசையில் தொங்கும் தூணின் மர்மம்... பிரமாண்ட நந்தியின் கம்பீரம்... புராண ஓவியங்களின் பேரழகு! இவை அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்கும் லேபக்க்ஷி வீரபத்ரர் கோவில், ஆந்திராவின் கலைப்பெருமைக்கு சிறந்த சான்றாக சிறப்பிக்கிறது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் ஒவ்வொரு தூணிலும், சுவரிலும், கூரையிலும் இருக்கும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்கின்றன.
மிகப்பெரிய சிற்பம்
இக்கோவிலின் பிரதான ஈர்ப்புகளில் ஒன்று, அதன் நுழைவாயிலில் அமைந்துள்ள நந்தி சிலை. இது உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தி சிலையாகக் கருதப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலை, அதன் நுணுக்கமான வேலைப்பாடுகளால் வியப்பை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய அளவில் இருந்தும், அதன் அமைதியான முகபாவனையும், பிரமாண்டமான நந்தியின் கம்பீரமும் பார்வையாளர்களைக் கவருகின்றன.
சிற்பங்களின் அழகு
இந்தக் கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும், அந்தக் கால சிற்பிகளின் திறமையை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, ஏழு தலையுடைய பாம்பின் கீழ் அமைந்த சிவன் சிலை, கோவிலின் மற்றொரு சிறப்பம்சம்.
ஓவியங்கள்
கோவிலின் கூரைகளிலும் சுவர்களிலும் காணப்படும் ஓவியங்கள் சுமார் 500 ஆண்டுகள் பழமையானவை. இதில் 13 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட வீரபத்ரர் ஓவியம் மிகப்பெரிய ஓவியமாகக் கருதப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம் போன்ற புராணக் கதைகள் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை பல நூற்றாண்டுகளாக இருந்தும் அவற்றின் வண்ணத்தையும், பொலிவையும் இழக்காமல் காணப்படுவது ஆச்சரியமளிக்கிறது. கூடுதலாக, கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்கின்றது. இந்த ஓவியங்கள் விஜயநகர பேரரசின் கலைப்பாணியை பிரதிபலிக்கின்றன.
மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள்
கோவிலில் கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் இணைந்து, அக்கால மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியங்களும் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதனாலேயே இந்தக் கோவில் தனித்துவம் பெற்றுள்ளது.
தொங்கும் தூணின் அதிசயம்
லேபக்க்ஷி கோவிலின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று, அதன் தொங்கும் தூண். இந்த தூண் தரையில் முழுமையாகத் தொடாமல் இருப்பது, கட்டடக் கலைக்கான அந்தக் கால சிறப்புகளை காட்டுகிறது. இன்று வரையில் இந்த தூண் எவ்வாறு தொங்கும் நிலையில் இருக்கிறது என்பது முழுமையாக விளக்கப்படாத அறிவியல் புதிராகவே உள்ளது. மேலும், இந்த தூண் கோவிலின் கட்டமைப்புக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது வியப்பளிக்கிறது.
கோவில் அமைப்பு
லேபக்க்ஷி கோவில் வளாகம் மிகவும் நுட்பமான அமைப்பை கொண்டது. இதில் மூன்று பிரகாரங்கள், மூன்று முக்கிய கோவில்கள், மூன்று துணைக் கோவில்கள், ஒரு துணைமண்டபம் மற்றும் நடன மண்டபம் ஆகியவை உள்ளன. இதில் விஷ்ணு, சிவன், துர்கா தேவி, வீரபத்ரர் போன்ற பல தெய்வங்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கின்றனர்.
லேபக்க்ஷி என்ற பெயர் எப்படி வந்தது?
இடத்தின் பெயருக்கும் ஒரு புராண சம்பந்தப்பட்ட வரலாறு உள்ளது. இராமாயணத்தில், இறந்துபோன ஜடாயுவை இராமர் “லேபக்-ஷி” அதாவது “எழுந்திரு பறவையே!” என்று அழைத்ததால்தான், இந்த இடம் லேபக்க்ஷி என்ற பெயரை பெற்றதாக நம்பப்படுகிறது.
இந்த இடம் கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ‘லேபக்க்ஷி’ என்ற பெயரில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு, தொங்கும் தூணின் புதிரும், நந்தி சிலையின் பிரம்மாண்டமும், கோவிலின் ஓவியங்களும், சிற்பங்களும் இவை அனைத்தும் லேபக்க்ஷி வீரபத்ரர் கோவிலைக் கலை, ஆன்மீகம், அறிவியல், வரலாறு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துள்ள ஓர் அற்புதமான தலம் என்பதை நிரூபிக்கின்றன.
இந்தக் கோவிலுக்கு நீங்களும் ஒரு முறை நேரில் சென்று தரிசிப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.