

பொதுவாக நாம் கோவிலுக்கு சென்றால் அங்கிருக்கும் கடவுளுக்கு பூ, பழம், தேங்காய், ஊதுவத்தி, மாலை இவற்றை தானே சமர்பிப்போம். ஒரு சில காளி கோவில்களில் நாம் வேண்டிய காரியம் நிறைவேறியவுடன் இன்றளவும் ஆடுகளை பலி கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.
ஆனால், இது வரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது, நான் இப்போதுதான் இந்த வித்தியாசமான காணிக்கையை பற்றி கேள்விப்பட்டேன். என்ன தெரியுமா? அதாவது, ஒரு மாநிலத்தில் உள்ள சிவபெருமானிற்கு பக்தர்கள் சிகரெட்டையும் பீடியையும் ஏற்றி அருகிலுள்ள துளையில் காணிக்கையாக வைக்கிறார்கள். இந்த வித்தியாசமான முறையை எங்கு பின்பற்றுகிறார்கள் என்று தெரியுமா?
இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள எழில்மிகு மலைகளுக்கு மத்தியில், நம் இந்து மதத்தின் தலை சிறந்த கடவுளான சிவபெருமானிற்காக லுத்ரு மகாதேவ் என்கிற கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் எரியும் சிகரெட்டுகளையும் பீடிகளையும் நேரடியாக சிவபெருமானுக்கே சமர்ப்பிக்கிறார்கள்.
பொதுவாகவே சிவபெருமானிற்கு பால், வில்வ இலைகள் அல்லது பூக்களை தான் காணிக்கையாக சமர்ப்பிப்பார்கள். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் அப்பாற் பட்டது போல இங்குள்ள சிவலிங்கமானது அதன் இடுக்குகளில் சொருகப்பட்டுள்ள எரியும் சிகரெட்டுகளைப் புகைப்பதுபோல் காட்சியளிக்கிறது. இந்தத் தனித்துவமான அதிசயமானது உலகெங்கிலும் உள்ள பக்தர்களையும யாத்திரிகர்களையும் ஈர்க்கிறது.
சோலன் மாவட்டத்தின் ஆர்கி என்ற இடத்தில் உள்ள ஒரு ரம்மியமான மலையின் மீது அமைந்துள்ள இந்த லுத்ரு மகாதேவ் கோவில், இயற்கையான குகைகளில் கட்டப்பட்டுள்ளது.
முற்காலத்தில், பாகல் சமஸ்தானத்தின் மன்னரான பிருத்வி சிங் என்பவரால் கி.பி. 1621-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. குழாய் போன்ற பள்ளங்கள் மற்றும் துளைகளைக் கொண்ட சிவலிங்க அமைப்பே இந்த கோவிலின் சிறப்பான அம்சமாகும்.
பக்தர்கள் ஏன் சிவபெருமானுக்கு சிகரெட்டுகளை காணிக்கையாக செலுத்துகிறார்கள்?
இந்துப் புராணங்களின்படி, சிவபெருமான் துறவிகளின் கடவுளாகவும், கடினமான சூழ்நிலைகளில் கூட விடாமல் தியானம் செய்பவராகவும் கருதப்படுகிறார். மேலும், அவர் சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சுவதற்காக கஞ்சா அல்லது விஷத்தை உட்கொண்டார் என்றும் கூறப் படுகிறது.
ஆகவே, இங்குள்ள மக்கள் எரியும் சிகரெட்டை அர்ப்பணித்தால், அவர்கள் தங்களுடைய ஆசைகள், தீய பழக்கங்கள் மற்றும் தீயஎண்ணங்களை கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டதாக கருதுகிறார்கள். லிங்கத்தில் உள்ள இயற்கையான துளைகளில் ஒன்றின் வழியாக எரியும் சிகரெட்டை தெய்வத்திற்கு அர்ப்பணிக்கும் போது, அதிலிருந்து புகை வெளிவருவதை நாம் காணலாம்.
இந்த சிவன் கோவில் பின்னணியில் உள்ள மர்மமும் கதையும்:
உள்ளூர் புராணத்தின்படி, பிருத்வி சிங் மன்னருக்கு சிவபெருமான் அளித்த தரிசனத்தைத் தொடர்ந்து இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
அந்த மன்னர் ஒரு குகையைக் கண்டுபிடித்து, அங்கு ஒரு கோவிலைக் கட்டி முடித்தார்.
அந்த இடத்தில் அப்போதைய காலத்தில் சிகரெட் பிடிக்கும் வழக்கம் மிகவும் புதியதாகவும் அரிதாகவும் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த சாது ஒருவர் சிவபெருமானின் மேலிருந்த பக்தியின் காரணமாக, எரியும் சிகரெட்டை இந்த கோவிலின் லிங்கத்தின் விரிசல்களில் வைத்ததாகவும் குகைப் பாறைகளுக்குள் இருந்த இடைவெளிகளின் மூலமாக காற்று வந்ததால், அந்த சிகரெட் அணையாமல் முழுவதுமாக எரிந்தது என்றும் கூறப்படுகின்றன.
இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தார்கள்.
இந்த நிகழ்வை, சிவபெருமான் தங்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஒரு அற்புதச் செயலாக உள்ளூர் மக்கள் கருதினார்கள். மேலும் அவர்கள் இன்றளவும் இதை கடைபிடித்து கொண்டிருக்கிறார்கள்.
கண்டிப்பாக நம்மால் எப்போது இயலுமோ அப்போது நாமும் சென்று சிகரெட்டை காணிக்கையாக பெறும் இந்த சிவபெருமானை ஒரு முறையாவது தரிசித்து வர வேண்டும்.