சிதம்பரம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை: ஆன்மிகப் பயணம் தந்த ஆனந்த அனுபவம்!

சிதம்பரம் நடராஜர் தரிசனம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருத்தொண்டு வரை மனதை நிறைத்த ஆன்மிகப் பயண அனுபவங்கள்.
ஆன்மிகப் பயணம் | lord shiva
ஆன்மிகப் பயணம் | lord shiva
ஆர். நடராஜன்

குருகிருபா இசைப் பள்ளி கர்நாடக சங்கீதம், திருமுறை, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றை கற்றுத்தரும் ஆன்மீகப் பாடசாலை. இசை மற்றும் பாசுரங்களின் மூலம் உள்ளிருக்கும் கலையை வெளிப்படுத்தி, தெய்வத்துடன் ஆன்மீக இணைப்பை உருவாக்கும் ஒரு புனித முயற்சி. இந்த பள்ளியின் முக்கிய உறுப்பினராக, அதன் செயல்பாடுகள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஈடுபாட்டிற்கு பங்களித்து வருகிறார். Sparkle Speakers Gavel Club என்பது 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குரல், தன்னம்பிக்கை மற்றும் மேடைத்திறனை கண்டறிந்து உயர வளர வாய்ப்பளிக்கும் ஒரு மேடை; இதன் நிறுவனர். Toastmasters International அமைப்பின் Distinguished Toastmaster. தொழில்முறையில் Senior Manager – Head of Instrumentation, Automation & Telecommunication, CC7 Global Engineering Solutions, Dubai.

Updated on: 
deepam strip
deepam strip

சிதம்பரம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை — தரிசனம், திருமுறை, இசை, அன்னாபிஷேகம், திருத்தொண்டு என மனதை நிறைத்த ஓர் ஆன்மிகப் பயணம்!

சில கோயில்களுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்கிறோம். சில கோயில்களில் இறைவனைப் பாடி மகிழ்கிறோம். ஆனால், சில அரிய தருணங்களில் இறைவனுக்கே தொண்டு செய்யும் பாக்கியம் கிடைக்கிறது!

தரிசனம் என்பது இறைவனை நாம் காண்பது. திருத்தொண்டு என்பது இறைவன் நம்மைத் தன் பணிக்குத் தேர்ந்தெடுப்பது!

இந்த இரண்டையும் ஒரே பயணத்தில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது வெறும் சுற்றுலாவாக முடிந்துவிடுமா?

அப்படியொரு மறக்க முடியாத அனுபவத்தை எங்களுக்குத் தந்தது அக்டோபர் 24, 25 ஆகிய இரு நாட்களில் மேற்கொண்ட சிதம்பரம் – கங்கைகொண்ட சோழபுரம் பயணம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மகாபிஷேகம் மற்றும் அன்னாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது பிரகதீஸ்வரப் பெருமானுக்கு மிக அருகில் இருந்து திருத்தொண்டு செய்த அனுபவம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

மீண்டும் அங்கே செல்லும் வாய்ப்பு வந்தபோது, அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

மழை மிரட்டியது… பயணம் அழைத்தது!

பயணம் தொடங்கிய நாளில் சென்னையில் மழையின் அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், இறைதரிசனத்திற்குச் செல்லும் உற்சாகம் அதைவிட அதிகமாக இருந்தது.

பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு, குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் அருகே சென்றோம். தீபாவளிப் பொருட்கள் வாங்குவதற்காக அல்ல; எங்களுடன் பயணிக்கவிருந்த சுகந்தி ஜியை அழைத்துச் செல்வதற்காக!

வயதில் மூத்தவராக இருந்தாலும், உற்சாகத்தில் குழந்தைகளுக்கே போட்டியாக விளங்குபவர் அவர். அவருடைய அனுபவங்களும் உரையாடல்களும் பயணத்திற்கு மேலும் இனிமை சேர்த்தன.

வழியில் ஊர்வசி உணவகத்தில் ஒரு சிறிய இடைவேளை. காபி, மசாலா டீ, சாண்ட்விச், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் எனச் சிற்றுண்டிகளை ரசித்துவிட்டு சிதம்பரம் நோக்கிப் பயணித்தோம்.

அங்கே எங்களுக்காகக் காத்திருந்தது குருக்ருபா இசைப்பள்ளியின் அன்பான குடும்பம்!

இசைப்பள்ளியின் குரு திருமதி புவனா கார்த்திக் அவர்களின் இல்லத்தில் அனைவரும் ஒன்றுகூடினோம். பெரியவர்களின் அன்பான உரையாடல்கள், குழந்தைகளின் விளையாட்டுகள், சிரிப்புகள் என அந்த வீடே ஒரு சிறிய திருவிழாவாக மாறியது.

குழந்தைகளின் குறும்புகளும் பயணத்தின் மறக்க முடியாத நினைவுகளாக அமைந்தன. ஷாம்பூவிற்குப் பதிலாக டூத்பேஸ்ட்டைப் பயன்படுத்த நேர்ந்த என்னுடைய குளியல் அனுபவமும் அதில் ஒன்று!

பொங்கல், இட்லி, தயிர்சாதம் எனப் பலவிதமான உணவுகளுடன், பத்து பதினைந்து பேர் ஒன்றாக அமர்ந்து உண்ட அந்த இரவு உணவின் சுவை உணவில் மட்டுமல்ல; ஒன்றாக இருந்த மகிழ்ச்சியிலும் இருந்தது.

ஆனால் எங்கள் அனைவருக்கும் இன்னும் ஓர் அற்புதமான ஆன்மிக அனுபவம் காத்திருந்தது.

தில்லை நடராஜரின் திருத்தரிசனம்!

தில்லையில் ஒரு தரிசனம்… பல ஆன்மிக அனுபவங்கள்!

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகப் போற்றப்படுவது சிதம்பரம்.

நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை நினைவூட்டும் இந்தத் திருத்தலத்தில் சித்சபை, கனகசபை, நிருத்தசபை, தேவசபை, ராஜசபை என ஐந்து சபைகள் அமைந்துள்ளன.

ஆன்மிகப் பயணம் | சிதம்பரம் நடராஜப் பெருமாள்
ஆன்மிகப் பயணம் | சிதம்பரம் நடராஜப் பெருமாள்

அங்கே எங்களை மிகவும் கவர்ந்த ஓர் அனுபவம், ஒரே இடத்தில் நின்றபடி ஒரு புறம் நடராஜப் பெருமானையும் மறுபுறம் கோவிந்தராஜப் பெருமாளையும் தரிசித்தது.

சிவனும் திருமாலும் ஒரே திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அந்தக் காட்சி, சமய ஒற்றுமையின் அழகை உணர்த்தியது.

அடுத்து, திருக்கோயிலின் சுவரில் செதுக்கப்பட்டிருந்த திருமுறை கண்ட விநாயகரின் திருவுருவத்தைத் தரிசித்தோம்.

அந்தத் தரிசனம் எங்களுக்குச் சிறப்பானதாக இருந்தது.

ஏனென்றால், குருக்ருபா இசைப்பள்ளியில் நாங்கள் கற்றுப் பாடிக்கொண்டிருக்கும் திருமுறைகளின் வரலாற்றோடு தொடர்புடைய திருத்தலம் அல்லவா சிதம்பரம்!

சைவத் திருமுறைகள் மீட்கப்பட்ட வரலாற்றில் இராஜராஜ சோழனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் முக்கியமான இடம் உண்டு.

மரபுவழி வரலாற்றின்படி, தேவாரப் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் சிதம்பரம் திருக்கோயிலில் கண்டறியப்பட்டன.

அந்தத் திருமுறைகள் மீட்கப்படாமல் போயிருந்தால், எத்தனையோ அரிய தமிழ்ப் பக்திப் பாடல்களை நாம் இன்றும் பாடும் வாய்ப்பை இழந்திருக்கக்கூடும்!

ஒரு தலைமுறை பாதுகாத்த திருமுறைகளை, அடுத்த தலைமுறை கற்றுப் பாடுவது எத்தனை பெரிய பண்பாட்டுத் தொடர்ச்சி!

சிதம்பர ரகசியத்தின் ஆன்மிகத் தத்துவத்தையும் நினைவுகூர்ந்தபடி, நடராஜப் பெருமானின் அருளை மனதில் நிறைத்துக்கொண்டு திரும்பினோம்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சோழர்களின் பெருமை!

மறுநாள் அதிகாலையில் எங்கள் பயணம் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கித் தொடர்ந்தது.

ஆன்மிகப் பயணம் | பிரகதீஸ்வரர் திருக்கோயில்
ஆன்மிகப் பயணம் | பிரகதீஸ்வரர் திருக்கோயில்

பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் திருக்கோயில், சோழர்களின் கட்டடக்கலைக்கும் ஆன்மிக ஈடுபாட்டிற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சோழர் பெருங்கோயில்களில் இதுவும் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட அந்தக் கற்கோயிலைப் பார்க்கும்போது வியப்பு ஏற்படாமல் இருக்க முடியாது.

இத்தனை பெரிய கட்டுமானத்தை உருவாக்கிய மனிதர்களின் அறிவு, உழைப்பு, கலைத்திறன் ஆகியவை காலத்தைக் கடந்து இன்றும் நம்மிடம் பேசுகின்றன.

ஆனால், இந்த முறை எங்கள் நோக்கம் கோயிலைப் பார்த்து வியப்பதோடு நின்றுவிடவில்லை.

அங்கே நடைபெறவிருந்த மகாபிஷேகத்திற்கான பணிகளில் பங்கேற்பதுதான் எங்களின் முக்கியமான விருப்பம்.

தரிசிக்க வந்தோம்… திருத்தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றோம்!

காஞ்சி காமகோடி மகாசுவாமிகள் மண்டபத்தை அடைந்து, காலை உணவை முடித்துக்கொண்டு திருத்தொண்டில் ஈடுபட்டோம்.

பிரகதீஸ்வரப் பெருமானின் அபிஷேகத்திற்காகச் சாத்துக்குடிச் சாறு தயாரிக்கும் பணியில் பங்கேற்றோம். தொடர்ந்து இளநீர் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளிலும் உதவினோம்.

வீட்டில் நாம் அன்றாடம் செய்யும் ஒரு சாதாரண வேலை, இறைவனுக்கான அபிஷேகப் பணியாக மாறும்போது அதன் அர்த்தமே வேறாகிவிடுகிறது!

நாங்கள் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், எங்களுடன் வந்த மற்றொரு குழுவினர் பெரியநாயகி அம்மன் சன்னிதியில் மலர்த் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பூக்களைத் தொடுத்து, அலங்காரத்திற்கான மாலைகளைத் தயாரித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு குழுவின் கைகளில் அபிஷேகப் பொருட்கள்!

மற்றொரு குழுவின் கைகளில் மலர் மாலைகள்!

பணிகள் வேறுபட்டாலும், அனைவரின் மனதிலும் இருந்த எண்ணம் ஒன்றுதான்.

இறைவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும்!

அப்போது திருநாவுக்கரசர் பெருமானின் உழவாரத் திருத்தொண்டு நினைவுக்கு வந்தது.

கோயில்களைத் தூய்மைப்படுத்தி, அவற்றைப் பராமரிப்பதையே இறைப்பணியாகக் கருதியவர் அப்பர் பெருமான்.

உழவாரப்பணி என்பது வெறும் தூய்மைப் பணி மட்டுமல்ல; எந்தப் பணியையும் இறைவனுக்கான சேவையாகக் கருதும் மனப்பக்குவத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

அன்று நாங்கள் செய்த அபிஷேக ஏற்பாடுகளிலும் மலர்த் தொண்டிலும் அந்தச் சேவை மனப்பான்மையின் மகிழ்ச்சியை உணர முடிந்தது.

இறைவனின் இல்லத்தில்… இறைவனுக்கே இசை!

அபிஷேகத்திற்குப் பிறகு அலங்காரத்திற்காகச் சன்னிதி மூடப்பட்டிருந்த நேரத்தில், எங்கள் குருக்ருபா இசைப்பள்ளிக் குழுவினர் திருக்கோயில் வளாகத்திலேயே இறைவனைப் போற்றிப் பாடினார்கள்.

குழந்தைகளும் பெரியவர்களும் இணைந்து பாடிய அந்தத் தருணம் தனித்துவமானது.

மேடை இல்லை. ஒலிபெருக்கியின் ஆரவாரம் இல்லை. கைதட்டல்களை எதிர்பார்க்கும் மனநிலையும் இல்லை.

பாடல்களைக் கேட்பதற்காக இருந்தவர் ஒருவர்தான்.

இதையும் படியுங்கள்:
குருவின் மகனை மீட்க பெருமாள் செய்த அற்புதம்: குருவித்துறை தல வரலாறு தெரியுமா?
ஆன்மிகப் பயணம் | lord shiva

அந்தப் பாடல்களுக்கே உரிய இறைவன்!

பழமையான திருக்கோயிலின் சூழலில், திருமுறைகளும் பக்திப் பாடல்களும் ஒலித்தபோது இசை என்பது வெறும் கலை மட்டுமல்ல; இறைவனை அடையும் ஓர் அழகிய வழி என்பதையும் உணர்ந்தோம்.

பின்னர் மண்டபத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குச் சென்று அலங்காரத் திருக்கோலத்தில் பிரகதீஸ்வரரையும் பெரியநாயகி அம்மனையும் தரிசித்தோம்.

மறுநாள் நடைபெறவிருந்த அன்னாபிஷேகத்தில் இந்த முறை பங்கேற்க இயலவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்ட அன்னாபிஷேகத்தின் நினைவுகள் மனதில் மீண்டும் எழுந்தன.

ஒவ்வொரு பருக்கையிலும் ஒரு சிவலிங்கம்!

அன்னாபிஷேகம் என்பது சிவபெருமானுக்குச் செய்யப்படும் சிறப்பான வழிபாடு.

சிவலிங்கத் திருமேனியைச் சமைத்த அன்னத்தால் அலங்கரித்து வழிபடும் இந்த நிகழ்வு, அன்னத்தின் புனிதத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகத்தைக் கண்டபோது, அதன் பிரம்மாண்டம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

அப்போது சுமார் மூன்று டன் அரிசி பயன்படுத்தப்பட்டதாக அறிந்தோம். நாள் முழுவதும் நடைபெற்ற அன்னம் தயாரிக்கும் பணிகளுக்குப் பிறகு, மாலையில் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரகதீஸ்வரப் பெருமானின் திருக்காட்சி கண்களைக் கவர்ந்தது.

ஆனால் அந்தக் காட்சி எனக்குள் எழுப்பிய சிந்தனை, அதன் பிரம்மாண்டத்தைவிட முக்கியமானது.

ஒவ்வொரு அரிசிப் பருக்கையிலும் ஒரு சிவலிங்கத்தைக் காணும் பக்தி உணர்வு!

ஒரு பருக்கை அரிசி நம் தட்டிற்கு வருவதற்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது?

விதை விதைக்கும் விவசாயி, பயிரை வளர்க்கும் மழை, அறுவடை செய்யும் தொழிலாளர்கள், அரிசியைப் பதப்படுத்துபவர்கள், உணவைச் சமைப்பவர்கள் எனப் பலரின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது.

அப்படிப்பட்ட அன்னத்தை நாம் எவ்வளவு எளிதாக வீணாக்கிவிடுகிறோம்!

திருமண விருந்துகளிலும் விழாக்களிலும் உணவகங்களிலும் தட்டில் மீதமாகும் உணவைப் பார்க்கும்போது, இந்த அன்னாபிஷேகத்தின் செய்தி நம் நினைவுக்கு வர வேண்டும்.

நாம் வீணாக்கும் ஒவ்வொரு அரிசிப் பருக்கையையும் ஒரு சிவலிங்கமாக நினைத்தால், அதை வீணாக்க மனம் வருமா?

அன்னத்தை மதிப்பது என்பது உணவை மதிப்பது மட்டுமல்ல.

விவசாயியின் உழைப்பை மதிப்பது.

இயற்கையை மதிப்பது.

நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்வாதாரத்தை மதிப்பது.

அன்னாபிஷேகத்தின் மூலம் நாம் பெற வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் இதுதான்!

கண்முன்னே இறைவன்… ஆனால் கண்கள் கைப்பேசியில்!

இந்தப் பயணத்தில் மனதில் பதிந்த இன்னொரு சிந்தனையும் உண்டு.

இன்றைய காலத்தில் பலரும் கோயிலுக்குச் சென்றவுடன் இறைவனை நேரடியாகத் தரிசிப்பதைவிட, கைப்பேசியில் படம் எடுப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகிறார்கள்.

நினைவுகளைப் பதிவு செய்வது தவறல்ல.

ஆனால் நினைவுகளைப் பதிவு செய்யும் ஆர்வத்தில், அந்தத் தருணத்தை அனுபவிக்க மறந்துவிடக் கூடாது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில், பிரம்மாண்டமான சிவலிங்கத்தின் முன்பு நிற்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, சில நிமிடங்களாவது அனைத்தையும் மறந்து இறைவனை மனதாரத் தரிசிக்க வேண்டாமா?

புகைப்படம் நம் கைப்பேசியில் இருக்கும்.

ஆனால் உண்மையான தரிசனம் நம் இதயத்தில் நிலைத்திருக்கும்.

சன்னிதியில் கைப்பேசி அணைந்திருக்கட்டும்… மனம் விழித்திருக்கட்டும்!

பயணம் முடிந்தது… திருத்தொண்டு தொடர்கிறது!

திரும்பும் வழியில் எங்கள் உரையாடல்கள் முழுவதும் பயண அனுபவங்களையே சுற்றி வந்தன.

சிதம்பரத்தில் கிடைத்த தரிசனம், குழந்தைகளின் குறும்புகள், கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரம்மாண்டம், அபிஷேகப் பணிகள், மலர்த் தொண்டு, இசை என ஒவ்வொரு நினைவும் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது.

வழியில் ஐஸ்வர்யா பவனில் காபி, தர்பூசணிச் சாறு, போண்டா, பஜ்ஜி எனச் சிறிய இடைவேளைக்குப் பிறகு, இரவு எட்டு மணியளவில் வீடு திரும்பினோம்.

பயணம் முடிந்திருந்தது.

ஆனால் அதன் அனுபவங்கள் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தன.

இந்தப் பயணம் எங்களுக்கு இன்னொரு உண்மையையும் உணர்த்தியது.

குருக்ருபா இசைப்பள்ளி என்பது இசையைக் கற்றுக்கொடுக்கும் இடமாக மட்டும் இல்லாமல், குடும்பங்களை ஒன்றிணைத்து, குழந்தைகளுக்குப் பண்பாட்டையும் பக்தியையும் சேவை மனப்பான்மையையும் அனுபவத்தின் வழியாக உணர்த்தும் ஓர் அழகிய சமூகமாக வளர்ந்து வருகிறது.

குழந்தைகள் பாடல்களைப் புத்தகத்தில் படிப்பதோடு நிற்காமல், அவை பாடப்பட்ட திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும், திருக்கோயில் பணிகளில் பங்கேற்பதும் அவர்களுக்குக் கிடைக்கும் அரிய அனுபவங்கள்.

ஒன்றாகப் பயணிப்பது மகிழ்ச்சி. ஒன்றாகப் பாடுவது ஆனந்தம். ஒன்றாகச் சேவை செய்வதுதான் வாழ்க்கைக்குப் பெருமை!

இறைவனைத் தரிசித்தோம்… இதயத்தில் இறுத்திக்கொண்டோம்!

இந்த இருநாள் பயணத்தின் நிறைவில், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இடம்பெறும் பிடித்த பத்து பதிகத்தின் முதல் பாடல் மனதில் ஒலித்தது.

இதையும் படியுங்கள்:
தீராத பாவம் மற்றும் தோஷங்கள் நொடியில் விலகும் திருத்தலையூர் ரகசியம்!
ஆன்மிகப் பயணம் | lord shiva

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே!

பசியறிந்து பால் ஊட்டும் தாயைவிடவும் அதிகமான அன்புடன் நம்மைக் காத்து, உள்ளத்தை உருக்கி, எல்லையற்ற ஆனந்தத்தை அருளும் சிவபெருமானை இறுகப் பற்றிக்கொள்ளும் பக்தனின் உணர்வு இது.

அந்த உணர்வுதான் எங்களுக்கும் ஏற்பட்டது.

சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசித்தோம்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்குத் திருத்தொண்டு செய்தோம்.

அவருடைய திருக்கோயிலிலேயே மனமுருகிப் பாடினோம்.

கோயிலிலிருந்து திரும்பிவிட்டோம்.

ஆனால் அந்த இறையனுபவத்திலிருந்து இன்னும் திரும்பவில்லை!

இறைவனைத் தரிசிக்கச் சென்றோம். இறுதியில் அவனை நம் இதயத்திலேயே சிக்கெனப் பிடித்துக்கொண்டோம்!

“யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்… எங்கெழுந்தருளுவதினியே!”

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

திருச்சிற்றம்பலம்!