மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம்: நாளை முதல் 9 நாட்களுக்கு ஆன்மீகக் கொண்டாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி மாதத்திருவிழாவான ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை (ஜூன் 20-ம் தேதி) தொடங்குகிறது.
ஆனி ஊஞ்சல் திருவிழா
ஆனி ஊஞ்சல் திருவிழாAI Image
Updated on

துரையின் அடையாளமாக மதுரை நகரின் மையத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் ஆன்மிகம், வரலாறு, கலை, பண்பாட்டின் சின்னமாக இன்று வரை திகழ்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இந்தியாவின், தமிழகத்தில், மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள உலகப் பிரசித்திப் பெற்ற பழமையான சிவாலயமாகும்.

இது 65,000 சதுர மீட்டர் பரப்பளவில், தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களின் மூலக்கோவிலாகத் திகழ்கிறது. இக்கோவிலில் அன்னை மீனாட்சி அம்மன் முதன்மை தெய்வமாக வழிபடப்படுகிறார்.

இக்கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன. இதில் தெற்கு கோபுரம் மிக உயரமானது. மேலும் இந்த கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ஒரு முக்கிய கலைப் பொக்கிஷமாகும். இதன் தூண்கள் இசையெழுப்பும் தூண்களாகவும், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நேராகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற திருவிழா என ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த 12 மாதத் திருவிழாக்களில் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பெருவிழாவாகும். அதில் மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகளை கண்டு தரிசனம் செய்திட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதுண்டு.

மேலும் மாதந்தோறும் மதுரை மீனாட்சி அம்மன் திருவிழா காண்பதால் ஆண்டு முழுவதும் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். அதேபோல் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடும்.

அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி மாதத்திருவிழாவான ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை (ஜூன் 20-ம்தேதி) தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரர் சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் ஜூன் 29-ம்தேதி நடக்கிறது.

அந்த வகையில் ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் வரை 9 நாட்கள் என 20-ம்தேதி முதல் 28-ம் தேதி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் சாயரட்டை பூஜைக்கு பின் மீனாட்சி- சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள்.

சிவனுக்கு முக்கனி அபிஷேகம் |ஆனி ஊஞ்சல் திருவிழா
முக்கனி அபிஷேகம்|ஆனி ஊஞ்சல் திருவிழாAI Image

அங்கு ஊஞ்சல் கொண்ட பின் அருளாளர் மாணிக்கவாசகர் பெருமான் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் 29-ம்தேதி ஆனி ஊஞ்சல் உற்சவத்தின் முடிவில் நான்கு சித்திரை வீதியில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

ஆனி உத்திரம் தினமான 22-ம்தேதி அதிகாலையில் 3 மணியளவில் (வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும்), உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மனுக்கும் சுவாமி சன்னதி 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் 100 கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். அப்போது நடராஜர் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
மீனாட்சி திருக்கல்யாணத்தில் யாருக்கு முதல் மாங்கல்யம்? பலரும் அறியாத 'பிரியாவிடை' அம்மன் ரகசியம்!
ஆனி ஊஞ்சல் திருவிழா

பின்னர் கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமி அம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும்.

இந்த ஆனி உத்திரம் திருவிழாவிற்கு அபிஷேக திரவிய பொருட்களை காணிக்கையாக வழங்க விரும்பும் பக்தர்கள் வருகிற 21-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை), அதாவது நாளை மறுநாள் இரவு 7 மணி வரைக்கும் கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 மணிக்கு பின்னர் வழங்கப்படும் அபிஷேக திரவிய பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவகாலத்திற்கு ஓவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்படி ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி 29-ம்தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது. இது முக்கனி அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது.

நாம் செய்யும் இந்த முக்கனி அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டு அருளும் இறைவன், இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பசியையும் தீர்த்து அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. இந்த மூன்று பழங்களின் தனித்துவமான சுவைகள் இறைவனின் பரிபூரண அருளைக் குறிக்கின்றன. முப்பழ அபிஷேக பூஜையன்று 4 சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
மதுரையில் ஆன்மீகக் கொண்டாட்டம்: மீனாட்சி அம்மன்- கள்ளழகர் கோவில்களில் வசந்த உற்சவம் தொடக்கம்!
ஆனி ஊஞ்சல் திருவிழா

மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழாவில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொள்ள வருவார்கள் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com