

மகாபலிபுரம் எனும் திருக்கடல்மல்லைத் தலத்தின் சிறப்பு, ஆதிசேஷன் இல்லாமல் தரையில் சயனிக்கும் ஸ்தல சயனப் பெருமாளின் வரலாற்றால் விளக்கப் படுகிறது. புண்டரீக மகரிஷியின் தூய பக்திக்காக முதியவர் வேடத்தில் வந்த திருமால், கடல் நீரைத் தானே அள்ளி, அங்கேயே தாயாருடன் சயனித்து பக்தர்களுக்கு அருள்புரிவதாகக் கதையிலிருந்து தெரிகிறது.
மகாபலிபுரம் என்று தற்போது அறியப்படும் திருத்தலம் முன்பு கடல்மல்லை, கடல்மல்லைத் தலசயனம், அர்த்தசேது, திருக்கடல்மல்லை போன்ற பெயர்களால் அறியப்பட்டது. பெருமாளின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் 63ஆவது தலமாக விளங்குவது திருக்கடல்மல்லை.
சயனத் திருக்கோலத்தில் அருளும் திருத்தலங்களில் ஆதிசேஷன் மீது சயனித்திருப்பார் ஸ்ரீமந்நாராயணன். ஆனால் இத்திருத்தலத்தில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் சயனித்திருக்கிறார் திருமால். அதற்கான வரலாற்றைப் பார்க்கலாம்.
ஸ்தல சயன பெருமாள் அளித்த தரிசனம்: புண்டரீக மகரிஷியின் இணையற்ற பக்தி:
ஒருமுறை புண்டரீக மகரிஷி தாமரை மலர்களால் திருமாலைப் பூஜிக்க விரும்பினார். அதுவும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருக்கோலத்தில் பெருமாளை, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர்களால் பூஜித்து மகிழ விரும்பினார். அதற்காக ஒரு கூடை நிறைய தாமரை மலர்களைச் சேகரித்தார். கூடையுடன் கிழக்கு நோக்கிப் பயணித்தார். வழியில் கடல் குறுக்கிட்டது.
மகரிஷிக்கு எப்படியாவது திருமாலைத் தரிசித்துவிட வேண்டும் என்று மனம் தவித்தது. கடலைக் கடந்து எப்படிப் போவது? பக்தியின் மேலீட்டால் கடல் நீரைக் கைகளால் இறைக்கத் தொடங்கினார். மலர்க் கூடையை ஓரமாக வைத்துவிட்டு, இரு கைகளாலும் சமுத்திர நீரை சலிக்காமல் வாரி வாரி இறைத்தார். இத்தனை நீரையும் எப்படி இறைத்து முடிப்பது, சாத்தியமாகுமா என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. எப்படியாவது திருமாலைத் தரிசித்து, பூஜை செய்யவேண்டும் என்ற ஆவல் அவரைத் தூண்டியதால், வேறு எந்தவித சிந்தனையும் இல்லாமல் கடல் நீரைக் கைகளால் இறைத்தவண்ணம் இருந்தார்.
சமுத்திர ராஜன் இதற்கெல்லாம் இரங்கவில்லை. ஆனால் திருமால் தன் பக்தனின் சிரமத்தைப் பொறுப்பாரா? முதியவர் வேடத்தில் திருமால் வந்து புண்டரீக மகரிஷியிடம், சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். முதியவருக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணிய மகரிஷி,
“இந்தக் கூடையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஊருக்குள் சென்று உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன். திருப்பாற்கடல் சென்று திருமாலைப் பூஜிக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த சமுத்திர நீரை இறைத்துக் கொண்டிருந்தேன்.
இப்போது உங்களுக்காக நான் சென்று வரும்வரை இந்த மலர்க் கூடையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதோடு, கடல் நீரையும் இறைத்துக் கொண்டிருங்கள். நான் விரைவில் வந்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஊருக்குள் விரைந்து சென்றார்.
மகரிஷி சென்ற பின் முதியவர் உருவில் இருந்த பரந்தாமன் தன் கைகளால் கடல் நீரை அள்ளியதும், கடல் உள்வாங்கியது. மகரிஷி திரும்பி வந்தபோது, தரையில் சயனத் திருக்கோலத்தில் தாயாருடன் ஸ்தல சயனப் பெருமாளாகக் காட்சி தந்தார் பரந்தாமன். தான் கொண்டுவந்த உணவை இறைவனுக்குப் படைத்து, தாமரை மலர்களால் பூஜித்து மகிழ்ந்தார் புண்டரீக மகரிஷி. மேலும் திருமாலை அங்கேயே, அப்படியே தங்கி, பக்தர்களுக்கு எப்போதும் அருள்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனால் இன்றுவரை ஆதிசேஷன் இல்லாமல் வெறும் தரையில் சயனித்திருக்கிறார் திருமால். அருகே புண்டரீக மகரிஷி கை கூப்பிய வண்ணம் நிற்பதையும் இப்போதும் நாம் தரிசிக்கலாம். கடல் நீரை இறைத்துவிட்டு, அப்படியே தரையில் சயனித்துவிட்டதால் ‘ஸ்தல சயனப் பெருமாள்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
இத்திருத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இவரின் கையில் ஒரு தாமரை மொட்டுடன் இருப்பதைக் காணலாம். 108 திவ்ய தேசங்களில் கையில் தாமரை மொக்குடன் உற்சவர் அருள்வது இத்திருத்தலத்தில் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் கிபி ஏழாம் நூற்றாண்டில் இத்திருத்தலத்தில் தான் அவதரித்தார். திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக பூதத்தாழ்வார் கருதப்படுகிறார். இத்திருத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாக பூதத்தாழ்வார் தம் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். திருமங்கையாழ்வாரும் இப்பெருமாளைப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
புண்டரீக மகரிஷியின் மாசில்லாத பக்திக்கு பரந்தாமன் அருள் செய்தது போல, நாமும் தூய மனத்துடன் பக்தியோடு இத்தல திருமாலை வழிபட்டால், வேண்டும் வரங்களை அள்ளித்தந்து காத்தருள்வார் ஸ்தல சயனப் பெருமாள்.
மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் திருக்கோவிலின் ஆன்மீக பின்னணி, ஆதிசேஷன் இல்லாமல் பெருமாள் எழுந்தருளியுள்ளதன் காரணம் மற்றும் பூதத்தாழ்வார் அவதாரத் தலமான திருக்கடல் மல்லையின் மகத்துவங்களை விரிவாக உணர்ந்து, உங்கள் ஆன்மீக அறிவையும் வழிபாட்டுப் பலன்களையும் பெருக்கிக் கொள்ள முடியும்.