சுடுகாட்டுச் சாம்பலில் அபிஷேகம்! உலகையே வியக்க வைக்கும் உஜ்ஜயினி 'பஸ்ம ஆரத்தி' ரகசியம்!

Mahakaleswarar Temple
Mahakaleswarar Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on
deepam strip
deepam strip

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் க்ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது மகாகாளேஸ்வரர் கோவில். இது இந்திரபுரி, அமராவதி, அவந்திகா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் மிகவும் புகழ்பெற்ற தலமாகும். இங்கு ஈசன் தெற்கு நோக்கி சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். 

மூலவர்: மகாகாளேஸ்வரர் 

அம்பிகை: சங்கரி, ஹரசித்தி தேவி தலவிருட்சம்: ஆலமரம் 

தீர்த்தம்: சிப்ரா நதி தீர்த்தம், கோடி தீர்த்தம் 

புராணப் பெயர்: அவந்திகா

பஸ்ம ஆரத்தி: உலகிலேயே மயான சாம்பலைக் கொண்டு தினமும் அதிகாலை அபிஷேகம் இங்கு மட்டுமே நடைபெறுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. இவருக்கு சுடுகாட்டு சாம்பலால் (பஸ்மம்) தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலை 4 மணிக்கு செய்யப்படும் பஸ்மா ஆரத்தி உலகப் புகழ்பெற்றது. இது சிவனின் காலசம்ஹார வடிவை உணர்த்துகிறது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புகழ்பெற்ற கும்பமேளா நடைபெறும் நான்கு இடங்களில் இதுவும் ஒன்றாகும். மகாகாளேஸ்வர் என்றால் 'காலத்தின் அதிபதி' என்று பொருள். இவரை வணங்குவது அகால மரணத்தைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் ருத்ர சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. 

7 முக்தி ஸ்தலங்களில் ஒன்றான சுயம்பு மூர்த்தி:

இந்த ஜோதிர்லிங்கம் மனிதர்களால் நிறுவப்படவில்லை; தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக கருதப்படுகிறது. சுயம்பு மூர்த்தியான மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்கு பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவமாகும். 

7 முக்தி ஸ்தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பூமியின் மையம் (நாபி) என்றும் புராணங்களால் சிறப்பித்து கூறப்படுகிறது. இக்கோவில் 108 தூண்களுடன் சிவபுராணக் கதைகளை விளக்கும் பிரமிக்க வைக்கும் சிற்பங்களுடன் கூடிய 3 அடுக்கு கோவிலாகும்.

இதையும் படியுங்கள்:
பீகார் விராட் ராமாயணக் கோவிலில் தமிழ்நாட்டுச் சிற்பி செதுக்கிய 130 டன் 'சஹஸ்ரலிங்கம்'!
Mahakaleswarar Temple

தல சிறப்பு: சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மகோத்பலா சக்தி பீடமாகும்.

கோவில் அமைப்பு: இது மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். கீழ் அடுக்கில் மகாகாளேஸ்வரர், நடுவில் ஓங்காரேஸ்வரர், மேல் அடுக்கில் நாகசந்திரேஸ்வரர் வீற்றிருக்கின்றனர். தரை மட்டத்திற்கு கீழே ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள் வழியாக சென்று தரிசிக்கலாம். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் காணப்படுகிறது.

அங்கு மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்சி தருகிறார். மகாகாளேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு மேலே செல்ல படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் மூன்றாவது அடுக்கில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சன்னதி நாக பஞ்சமி அன்று மட்டுமே திறக்கப்படுகிறது. கருவறையின் மூன்று திசைகளிலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு) பரிவார தெய்வங்களாக விநாயகர், பார்வதி, கார்த்திகேயன், பைரவர் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பக்தி Vs. மகிழ்ச்சி: இந்தியாவின் தீப நகரங்கள்... வாரணாசி Vs. மைசூர்! எது அதிக பிரபலம்?
Mahakaleswarar Temple

திருவிழாக்கள்:

மகா சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை மாத பௌர்ணமி, நாக பஞ்சமி, சிராவண மாதம் போன்ற விசேஷமான நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் காலபைரவர் வழிபாடும் முக்கியமானது. இங்கு பைரவருக்கு மதுபானம் நிவேதனமாக படைக்கப்படுகிறது. மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள உஜ்ஜயினி மாகாளி கோவில், காலபைரவர் கோவில் மற்றும் சாந்திபனி முனிவர் ஆசிரமம் போன்றவற்றையும் சென்று தரிசித்து வரலாம்.

எப்படி செல்வது?

அருகில் உள்ள விமான நிலையம் இந்தூர். சாலை அல்லது ரயில் வழியாக உஜ்ஜைன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோவில் திறந்திருக்கும். அதிகாலை 4 மணி அளவில் பஸ்ம ஆரத்தி நடைபெறும். தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் வசதிகளும் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com