மணவாள மாமுனிகள் 656ஆவது திருநட்சத்திரம்: வைணவ வரலாறும் பால் புடலங்காய் தளிகை ரகசியமும்!

எம்பெருமான் நேரில் சமர்ப்பித்த தனியன் மற்றும் மணவாள மாமுனிகளின் வரலாற்றுச் சிறப்புகள்!
மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,
மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன், தபால் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி 2010-ல் ஓய்வு பெற்றவர். 1985 முதல் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதி வருகிறார். 75 கதைகள், 5 கதைத் தொகுப்புகளின் ஆசிரியர். தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு வென்றவர்.

Updated on: 

ஸ்ரீ: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

“இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே!

எழில் திருவாய்மொழிப் பிள்ளை இணையடியோன் வாழியே!

ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே!

அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே!

எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தான் வாழியே!

ஏதாரு மெதிராசர் எனவுதித்தான் வாழியே!

முப்புரிநூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே!

மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே!

செல்வ மணவாள மாமுனி லோககுரு எங்கோன்!

திருவடிகள் அல்லதொரு தெய்வம் அறியேன்!

பொருளின் சுருக்கம்:

* "இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே" - இந்தப் பூமியில் ஸ்ரீரங்கநாதருக்கு (அரங்கேசருக்கு) உரிய கைங்கரியங்களையும் பெருமைகளையும் மீண்டும் நிலைநிறுத்தித் தந்தவர் வாழ்க!

* "ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே" - ஐப்பசி மாதம் திரு மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் வாழ்க!

* "மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே" - ஆதிசேஷனின் அம்சமாகவும், யதீந்திரர்களின் (இராமானுஜரின்) மறுவடிவமாகவும் விளங்கும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் எக்காலமும் வாழ்க! என்று இப்பாடல் போற்றும் விதமாக எங்கள் ஆச்சார்யார்கள் தாத்தாவும், மூன்று மாமாக்களும் சேவிப்பதுண்டு.

அதைத் தொடர்ந்து,

'ஸ்ரீசைலேச தயாபாத்ரம்' என்னும் புகழ்பெற்ற தனியன் (ஸ்லோகம்), ஸ்ரீ வைணவ மரபில், குறிப்பாகத் தென்கலைப் பிரிவில் மணவாள மாமுனிகளைப் போற்றும் மிக முக்கியமான மங்கள ஸ்லோகமாகும். திவ்யப் பிரபந்தங்களைச் சேவிப்பதற்கு முன்பாக ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் வணக்கம் செலுத்தும் விதமாக இந்தத் தனியன் சொல்லப்படுகிறது.

1. முழு ஸ்லோகம் (சமஸ்கிருதம் & தமிழ் வடிவம்)

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்

ஸ்ரீசைலேசரின் (திருவாய்மொழிப் பிள்ளையின்) கருணைக்குப் பாத்திரமானவரும், ஞானம், பக்தி உள்ளிட்ட அனைத்து நற்குணங்களுக்கும் கடலாக விளங்குபவரும், எம்பெருமானார் இராமானுஜரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவர் என்னும் முனிவரை நான் வணங்குகிறேன்."

ஸ்ரீ வைணவ வரலாற்றில் இந்தத் தனியன் தோன்றிய விதம் மிகவும் அற்புதமானது:

காலட்சேபம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், மணவாள மாமுனிகள் ஆழ்வார்களின் திருவாய் மொழிக்கு மிக ஆழமான விரிவுரைகளைக் (காலட்சேபம்) கூறி வந்தார். அவரது தூய தமிழும், தத்துவ விளக்கமும் அங்கிருந்த அனைத்து பக்தர்களையும் அறிஞர்களையும் ஈர்த்தது.

மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,
மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,Image credit: Gemini

* நம்பெருமாள் வருகை: மாமுனிகளின் உபநியாசங்களைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாதரே (நம் பெருமாள்), இந்தத் தத்துவ ஞானியைப் போற்றும் வகையில் ஒரு சிறிய அர்ச்சகக் குமாரன் (சிறுவன்) வடிவில் சபைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.

* ஸ்லோகம் சமர்ப்பித்தல்: சபையின் நடுவே நின்ற அந்தத் திவ்யக் குழந்தை, மேலே உள்ள 'ஸ்ரீசைலேச தயாபாத்ரம்' என்னும் ஸ்லோகத்தை உரக்கச் சொல்லி மணவாள மாமுனிகளுக்குச் சமர்ப்பித்தது.

*அந்தச் சிறுவன் நேராக மூலஸ்தானத்திற்குள் சென்று மறைந்துவிட்டான். அப்போதுதான் அது அரங்கநாதனின் திருவிளையாடல் என்பது அனைவருக்கும் புரிந்தது.

* எம்பெருமானே நேரில் வந்து இயற்றிச் சமர்ப்பித்த இந்த ஸ்லோகத்தையே, மாமுனிகளுக்கான பிரதான தனியனாகச் சபையினர் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் இன்று வரை தென்கலை வைணவ மரபில் அனைத்துச் சேவைகளுக்கும் முன்பாக இந்தத் தனியன் தவறாமல் சேவிக்கப்படுகிறது.

எம்பெருமான் இந்தத் தனியனை அனைத்து திவ்யதேசங்களுக்கும் அனுப்பிச் சேவாகாலத் தொடக்கத்திலும் முடிவிலும் இதனை அனுசந்திக்கச் சொன்னார். திருவேங்கடமுடையானும் திருமாலிருச்சோலை அழகரும் இந்தத் தனியனை அருளிச்செயல் அனுசந்தானத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் அனுசந்திக்க வேண்டுமாறு பணித்தனர்.

பெருமை வாய்ந்த ஶ்ரீ மணவாள மா முனிகள் அவர்களின் 656 வது திரு நட்சத்திரம் வரும் 13/11/2026 அன்று எல்லாக் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருக்கோவிலூர் பெருமாளின் விஸ்வரூப தரிசனம்!
மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,

இனி அவரைப் பற்றி,

அவர் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரானுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் ஆதிசேஷனுடைய அவதாரமாய் யதிராஜருடைய புனராவதாரமாய் (மறுபிறவியாய்) பிறந்தார். அவருக்கு அழகிய மணவாளன் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும்) என்று பெயரிட்டனர். அவர் சாமான்ய சாஸ்திரம் (அடிப்படை சித்தாந்தம் மற்றும் வேதாத்யயனத்தை அவரது தகப்பனாரிடம் கற்றார்.

திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமைகளைக் கேட்டு, அவரிடம் சரணாகதி செய்தார்.

அருளிச்செயல்களைக் கற்றுத்தேர்ந்தவரான இவர், திருவாய்மொழி மற்றும் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமும் மிகவும் சிறப்பாக வழங்குவார்.

ராமானுஜரின் மீது இவருக்கு அளவில்லாப் பற்று இருந்ததால் அவருக்கு ஆழ்வார்திருநகரியில் பவிஷ்யதாசார்யன் சந்நிதியில் நிறைந்த கைங்கர்யம் செய்தார்.

பின்னர் அவரது ஆசார்யரின் நியமனம் நினைவுக்கு வந்ததால் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று வாழ்ந்து நம் ஸம்ப்ரதாயத்தைப் பரவச்செய்தார். ஸ்ரீரங்கத்திற்குச் சென்ற பிறகு ஸந்யாஸாச்ரமத்தை ஏற்று ‘அழகிய மணவாள முனிகள்’ என்றும் ‘பெரிய ஜீயர்’ என்றும் விளங்கலானார்.

மாமுனிகள் திவ்யதேச யாத்திரைகள் பல செய்து அனைத்து பெருமாள்களுக்கும், ஆழ்வார்களுக்கும் மங்களாஸாசனங்கள் செய்தார்.

மாமுனிகளைப் பற்றியும் அவரது கைங்கர்யங்களைப் பற்றியும் கேட்பதற்கே வியப்பாக உள்ளது அல்லவா!

யார் இந்த ஶ்ரீ மணவாள மாமுனிகள்?. ஏன் அவர் ஜன்ம திருநட்சத்திரம் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.? அன்றைய தினம் ஏன் பால் புடலங்காய் தளிகை சமர்பிக்கப்படுகிறது.?

இந்தப் பால் புடலங்காய் பற்றி என் மாமாக்களிடம் கேட்டபோது அவர்கள் (சுய ஆச்சார்ய புருஷர்கள் )அந்த நேரம் புடலங்காய் சீசன் எனவே சமர்ப்பிக்கின்றோம் என்றார்கள்.

தந்தையிடம் கேட்டபோது ஶ்ரீ மணவாள மாமுனி அவர்களுக்குப் பிரியம் அதனால் சமர்ப்பிக்கின்றோம் என்றார். அதில் ஓரளவு logic இருந்தது.

பின்னர் நான் தெரிந்துகொண்ட விஷயத்தை உங்களிடம் பகிர்கிறேன்.

ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரத் திருநாளில் (ஐப்பசி மூலம்) கோயில்களிலும் இல்லங்களிலும் 'பால் புடலங்காய்' (பால் மற்றும் புடலங்காய் சேர்த்துச் செய்யப்படும் கூட்டு அல்லது பிரசாதம்) தளிகை சமர்ப்பிக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான ஆன்மீகத் தாத்பரியமும் வைணவ குருபரம்பரை வரலாறும் உள்ளது.

ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் மணவாள மாமுனிகள் வாழ்ந்த காலத்தில், தினமும் அவருக்குப் பல வகையான பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். ஒருமுறை மாமுனிகளுக்கும் அவரது சீடர்களுக்கும் எளிமையான முறையில் உணவு தயாரிக்கும் பொறுப்பு ஒரு சீடரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,
மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,Image credit: Gemini

அன்று மதிய உணவுக்குப் புடலங்காய் மற்றும் பால் சேர்த்து ஒரு கூட்டு (பால் புடலங்காய்) தயாரிக்கப்பட்டது. அந்தச் சமயம் மாமுனிகள் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தப் பொருள்கள் குறித்தும், எம்பெருமானின் திருக்கல்யாண குணங்கள் குறித்தும் ஆழ்ந்த தியானத்திலும் உபநியாசத்திலேயும் ஈடுபட்டிருந்தார்.

அந்த எளிய பிரசாதத்தை எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனுக்கும் (நம்பெருமாள்) மற்றும் ஆச்சாரியனுக்கும் மிகுந்த பக்தியுடன் சமர்ப்பித்து மகிழ்ந்தனர்.

* சத்துவக் குணம் (தூய்மை): பாலும் புடலங்காயும் வெள்ளை நிறம் மற்றும் குளிர்ச்சியான தன்மைக் கொண்டவை. இது மன அமைதியையும், சாத்வீகமான (சத்துவ) பக்தியையும் குறிக்கிறது.

* எளியோர்க்கும் எளியவன் இறைவன்: மாமுனிகள் எளிய வாழ்க்கையை வாழ்ந்து, ஆன்மீக ஞானத்தை அனைவருக்கும் சமமாகப் பரப்பியவர். எனவே, ஆடம்பரமற்ற எளிய காய்கறியான புடலங்காயும் பாலும் கொண்டு செய்யப்படும் இந்தத் தளிகை, ஆச்சாரியரின் எளிமையையும் நிர்குண பக்தியையும் பிரதிபலிக்கிறது.

வைணவ நெறியை இந்தியாவின் பல மூலைகளிலும் பரப்புவதற்காக, தனது முதன்மையான எட்டுச் சீடர்களை 'அஷ்ட திக் கஜங்கள்' என்று தேர்ந்தெடுத்துப் பொறுப்புகளை வழங்கினார்.

தன் இறுதி நாட்களில், மிகுந்த சிரமத்தோடே, மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயத்திற்குப் பாஷ்யம் (உரை) எழுதினார். தன் திருமேனியை விட்டுப் பரமபதத்திற்கு ஏக முடிவு செய்தார்.

இதையும் படியுங்கள்:
திருக்கோவிலூர் பெருமாளின் விஸ்வரூப தரிசனம்!
மணவாள மாமுனிகள் - Manavala Mamunigal,

ஆர்த்தி ப்ரபந்தத்தை அனுசந்தித்துக் கொண்டே இந்தச் சம்சாரத்திலிருந்து தன்னை விடுவித்து ஏற்றுக் கொள்ளுமாறு எம்பெருமானாரை ப்ரார்த்தித்தார். பின், எம்பெருமானின் அனுக்ரஹத்தால், மாமுனிகள் பரமபதத்திற்கு ஏகினார். அச்சமயம் செய்தி கேட்டு, பொன்னடிக்கால் ஜீயரும் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்ப வந்து, மாமுனிகளுக்கு அனைத்த சரம கைங்கர்யங்களையும் செய்தார்.