ஸ்ரீவித்யா ராஜகோபால திருக்கோலத்தில் மன்னார்குடியில் அருளும் மாலவன்!

Mannargudi Malavan in Srividya Rajagopala Thirukolam
Mannargudi Malavan in Srividya Rajagopala Thirukolamhttps://maragadham.blogspot.com

கத்துக்கே குருவாய் நின்று பகவத் கீதையை உபதேசித்த பெருமாள், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அந்த கிருஷ்ண பரமாத்மா ஸ்ரீவித்யா ராஜகோபலனாக அருள்பாலித்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான இடம்தான் இராஜமன்னார்குடி என்று அழைக்கப்படும் மன்னார்குடி. தெற்கு துவாரகை என்றும் போற்றப்படுவது இந்த இடம்தான். ஹாரித்ரா நதி (குளம்) முதல் பெருமாளுக்கு நடைபெறும் 18 நாள் பிரம்மோத்ஸவம் வரை பல தனிச்சிறப்புக்கள் வாய்ந்த ஒரு இடமே மன்னார்குடி.

ஹாரித்ரா என்றால் மஞ்சள் என்று அர்த்தம். ஒரு காலத்தில், கோபிகைகளுடன் கோபாலன் குளித்த குளம் என்பதால், மஞ்சள் நிறம் கலந்த புனித நீராகவே இது இருந்தது. குளத்தின் நிறம் இன்று மாறி இருந்தாலும், கண்ணனின் திருவடி பட்ட ஒரு மிகப்பெரிய ( நதி) குளம் என்ற பெருமையோடு இன்றும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டு, நம்மை சிலிர்க்க வைக்கிறது ஹாரித்ரா நதி.

இங்கே இருக்கும் பெருமாளின் திருக்காதுகளை பார்த்தோமானால், வலது காதில் குண்டலமும் இடது காதில் பெண்கள் அணிந்து கொள்ளும் தோட்டையும் (தாடங்கத்தையும்) அணிந்து கொண்டு ராஜகோபாலன் இன்றளவும் காட்சி கொடுப்பதை நம்மால் பார்க்க முடியும். ஒரு முறை ஹாரித்ரா நதியில் கண்ணனுக்கும் கோபிகைகளுக்கும் இடையே ஒரு போட்டி நடந்ததாம். ஹாரித்ரா நதியில் நீராடிவிட்டு யார் சரியாக அவரவர்களது ஆபரணங்களையும் நகைகளையும் அணிந்து கொள்கிறார்களோ அவர்களே போட்டியில் ஜெயித்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்பதே போட்டியின் விதி.

ஒரு கோபிகை வேகமாக நீராடி விட்டு அவளது ஆபரணங்களை சரியாக அணிந்து கொண்டிருந்தபோது, சட்டென்று அங்கே வந்த குறும்பன் கண்ணன், அவளிடமிருந்து தாடங்கத்தை (தோட்டை) எடுத்து தான் அணிந்துகொண்டு விட்டாராம். ‘தாடங்க குண்டலதரம் வாமே தக்ஷிண யோஹோ’ என்பது இப்பெருமாளின் திருக்கோலத்தைப் பற்றி பேசும் ஸ்லோகம். ‘நீதான் கண்ணா ஜெயித்து விட்டாய். இந்த மாதிரி மாற்றி மாற்றி காதில் போட்டு கொண்டதால் இன்னும் நீ அழகாய் தெரிகிறாய். எப்போதும் போல எதிலும் எப்போதும் நீயே எங்களை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று கோபிகைகள் சொன்னதை போல இன்றும் அந்த ராஜகோபாலன் தம் அழகாலும் அருளாலும் நம்மை எல்லாம் ஜெயித்துக்கொண்டேதான் இருக்கிறான்.

கோபாலனின் அருள் அலைகடலாய் வீசிக்கொண்டிருக்கும் ஒரு புனிதமான இடம் என்பதாலோ என்னவோ இத்திருக்கோயிலை சுற்றி இருக்கும் தெருக்களுக்கு, ‘கோபால சமுத்திரம்’ என்றே பெயர். தெற்கு கோபால சமுத்திரம், வடக்கு கோபால சமுத்திரம், கிழக்கு கோபால சமுத்திரம், மேற்கு கோபால சமுத்திரம் என்று தெருக்கள் கூட கோபாலனின் திருநாமாவைத் தாங்கி நிற்கும் பேற்றினை பெற்றிருக்கிறது.

முன்னொரு காலத்தில் கோபிலர், கோப்ரளயர் என்ற இரண்டு மகரிஷிகள் கண்ணனை துவாரகையில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தென்னாட்டிலிருந்து துவாரகை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது, அவர்களை நாரத மகரிஷி தடுத்து, கண்ணன் துவாரகையை விட்டு ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்) சென்று விட்ட செய்தியை கூற, அதை கேட்டதுமே மன்னார்குடியில் இருந்த அந்த ரிஷிகளும் மயக்கமடைந்து விட்டார்கள். இவர்களின் இந்த நிலையை பார்த்து நாரதர் அவர்களிடம், “கவலைப்படாதீர்கள் மகரிஷிகளே... இதோ இந்த இடத்திலேயே துவாரகாதீசனான கிருஷ்ணனை நோக்கி தவம் இருங்கள். உங்கள் தவத்திற்கு மெச்சி பகவான் இங்கேயே நீங்கள் விரும்பும் கோலத்தில் உங்களுக்குக் காட்சி கொடுப்பான்” என்று கூற, அங்கிருக்கும் குளங்களில் நீராடி, அந்த ரிஷிகள் பெருமாளை நோக்கி கடும் தவம் புரியலானார்கள். அவர்களின் தவத்தை மெச்சி பெருமாள் இத்திருத்தலத்தில் பரவாசுதேவன் திருக்கோலத்தில் அந்த ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் அதே பரவாசுதேவன் கோலத்தில்தான் மூலவர் நமக்கும் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கோடைக் காலத்தில் இதய ஆரோக்கியம் காக்கும் எட்டு வகை சிவப்பு உணவுகள்!
Mannargudi Malavan in Srividya Rajagopala Thirukolam

ரிஷிகள் பகவானை 32 முறை வலம் வர, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக அவர்களுக்குக் காட்சி கொடுத்த பெருமாள், 32வது முறை அவர்கள் வலம் வந்தபோது காட்சி கொடுத்த திருக்கோலம்தான் ஸ்ரீவித்யா ராஜகோபால திருக்கோலம். அதே திருக்கோலத்தில் அல்லவா உத்ஸவர் இன்றும் நமக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்?

தன்னை தரிசிக்கும் அனைவருக்கும், தன்னை நினைக்கும் அனைவருக்குமே சகல விதமான நன்மைகளையும், சிறப்பான ஒரு வாழ்க்கையையும் தருவதற்காக உதட்டோரம் புன்சிரிப்போடு இருக்கும் ராஜமன்னார்குடியின் ஸ்ரீராஜகோபாலனை, ஸ்ரீவித்யா ராஜகோபாலனை நம் இதய சன்னிதியில் குடி புக வைப்போமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com