

நாம் வாழ்கின்ற உலகத்தில் மனித சக்திக்கு மேலாக ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது தெய்வ சக்தியாகும். அப்படிப்பட்ட தெய்வங்கள் பெருந்தெய்வங்களாக மட்டுமல்லாமல் சிறு தெய்வங்களாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சிறு தெய்வங்கள் மனிதர்களாக வாழ்ந்து பிறகு தெய்வ தன்மையை அடைந்து தெய்வமாக மாறிவிடுகின்றன.
இப்படி மனிதர்களாக வாழ்ந்து தெய்வமாக மாறிய மேல முடி மன்னார்கோட்டை மற்றும் கீழ முடி மன்னார்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் (chandanamari amman history) சந்தனமாரிகளின் வரலாற்றை இக்கட்டுரையில் இனி விரிவாய்க் காண்போம்.
சந்தனமாரிகளின் வரலாறு!
ஒரு காலத்தில் மேல முடி மன்னார்கோட்டையில் சந்தனமாரி என்ற பெண் வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். அவளுடைய பெயரும் சந்தனமாரி! அவள் பக்கத்து ஊரான கீழ முடி மன்னார்கோட்டையில் வாழ்ந்து வருகிறாள்.
அந்த காலத்தில் எந்த ஒரு பேருந்து வசதியும் எதுவும் இல்லாத காரணத்தினால் வருடத்திற்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமை மட்டுமே சந்தனமாரி என்பவள் கீழ முடி மன்னார் கோட்டையில் உள்ள தன்னுடைய தங்கச்சி சந்தன மாரியை பார்ப்பதற்கு செல்வாள் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு நாள் கீழ முடி மன்னார்கோட்டைக்கு தன்னுடைய தங்கச்சி வீட்டிற்கு சென்றாள் அக்காள் சந்தனமாரி.
இன்று தன்னுடைய அக்கா சந்தனமாரி என்பவள் வீட்டிற்கு வருவாள் என்பதை அறிந்த தங்கச்சி சந்தனமாரி, தன்னுடைய 7 பிள்ளைகளை கோழி அடைக்கும் பஞ்சரத்தினுள் வைத்து மூடி விட்டு தண்ணீர் எடுக்க சென்று விட்டாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்த அக்கா சந்தனமாரி வீட்டில் அமர்ந்திருந்தாள். அப்போது குழந்தைகள் அழுகும் சத்தம் கேட்டது. அதனை அறிந்து பக்கத்தில் செல்லும் போது பஞ்சரத்தினுள் குழந்தைகள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ஒவ்வொரு பஞ்சரமாக திறக்க, ஏழு குழந்தைகள் இருந்தன. இதனை அறிந்த சந்தனமாரி தான் பிள்ளை இல்லாமல் இருப்பதால் தான், அவள் குழந்தை பெற்றதை கூட என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்று எண்ணிக்கொண்டு அந்தக் குழந்தைகளை ஒரு தடியால் அடித்து அத்தனை குழந்தைகளையும் கல்லாக மாற்றி விட்டு தன்னுடைய ஊருக்கு கோபத்தில் சென்று விடுகிறாள்.
தண்ணி எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்த சந்தனமாரி, குழந்தைகள் இப்படி கல்லாக கிடப்பதை பார்த்து மிகவும் வேதனை பட்டு, தன்னுடைய அக்காளை சமாதானப்படுத்துவதற்காக அவள் சென்ற திசையை நோக்கி ஓடி அவளைப் பிடித்து வழிமறைத்து நிற்கிறாள். இப்படி வழிமறைத்து நின்ற இடம் நிலையம் என்று கூறப்படுகிறது. இதே போல் மூன்று இடங்களில் வழி மறைத்து நிற்கிறாள்.
மூன்றாவதாக மேல முடி மன்னார்கோட்டையில் அருகில் இருக்கக்கூடிய முனியாண்டி கோவில் அருகில் அக்காவும் தங்கையும் நிற்கிறார்கள். அப்பொழுது தங்கச்சி சந்தனமாரி, "என்னை மன்னித்துவிடு அக்கா! எனக்கு குழந்தைகள் பிறந்ததை உன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டேன்" என்று கண்ணீர் மல்க அழுது புலம்ப, அக்கா சந்தனமாரி என்பவள் “இனிமேல் நான் உன்னை பார்ப்பதற்கு கீழே முடிமன்னார் கோட்டைக்கு வரமாட்டேன். நீ வேணுமென்றால் என்னை பார்க்க மேலமுடி மன்னார் கோட்டைக்கு வா” என்று கூறிவிட்டு மேலமுடி மன்னார் கோட்டைக்குச் சென்று விடுகிறாள். பிறகு தங்கச்சி சந்தனமாரியும் கீழ முடிமன்னார் கோட்டைக்கு திரும்பி வருகிறாள். இருவரும் தெய்வமாக மாறி அங்கேயே நின்று விடுகின்றனர்.
தெய்வமாக மாறிய இவர்களுக்கு மேல முடி மன்னார்கோட்டையிலும் கீழ முடி மன்னார்கோட்டையிலும் கோயில் எழுப்பி அந்த மக்கள் இன்றளவும் வழிபட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வழிவந்த மக்கள் அவர்களுக்கு வருடந்தோறும் விழா எடுத்து சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பு கட்டுதல்!
வருடந்தோறும் பங்குனி மாதம் மேல முடி மன்னார்கோட்டை கீழ முடி மன்னார் கோட்டையில் உள்ள மக்கள் காப்புக் கட்டி பங்குனி பொங்கல் விழாவில் சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
கீழ முடி மன்னார்கோட்டை பூசாரி
இந்த பங்குனி பொங்கல் விழாவில் கீழ முடி மன்னார் கோட்டையில் உள்ள பூசாரி மேல் தங்கச்சி சந்தனமாரி இறங்க, கரகம் செய்வதற்கு தேவையான பொருட்களைக் எடுத்துக்கொண்டு கொட்டு மேளத்துடன் மேல முடிமன்னார்கோட்டைக்கு வருவார்.
வழியில் இருக்கும் நிலையங்கள்!
தங்கச்சி சந்தனமாரி அக்காள் சந்தன மாரியை வழிமறைத்த இடங்கள் நிலையங்கள் என இன்று வரை மக்களால் பேசப்படுகிறது. இந்த நிலையம் என்று கூறப்படும் இடத்தில் கீழ முடி மன்னார்கோட்டையில் இருந்து வரும் பூசாரி அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று திருநீரை தூவி விட்டு வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த இடம் அக்காள் சந்தனமாரியை தங்கச்சி சந்தனமாரி வழிமறைத்த இடம் என்று அனைவராலும் தெரிந்து கொள்ளப்படுகிறது. இப்படி மூன்று இடங்களில் வழி மறைத்த இடத்தில் பூசாரி திருநீரை தூவி விடுகிறார்.
மேல முடி மன்னார்கோட்டை எல்லையை அடையும் பூசாரி!
கீழமுடிமன்னார்கோட்டையில் இருந்து வந்த பூசாரி மேல முடி மன்னார்கோட்டை எல்லைக்குள் நுழையும் போது அந்த ஊர் மக்களால் மேளதாளத்துடன் வரவேற்கப்படுகிறார். அப்பொழுது மேல முடி மன்னார்கோட்டையில் உள்ள பூசாரியின் வீட்டில் உள்ள அக்காள் சந்தனமாரி கோவில் பூசாரி சாமி இறங்கி ஆடுகிறார். இரண்டு கோட்டை பூசாரி சாமிகளும் கட்டிப்பிடித்து அழுது சாமி ஆடுகிறார்கள்.
நந்தவனத்தில் உள்ள கிணறு!
கீழ முடி மன்னார்கோட்டை மற்றும் மேல முடி மன்னார் கோட்டையில் உள்ள பூசாரி இருவரும் இந்த நந்தவனத்திற்கு செல்கின்றனர். அங்கு தாங்கள் எடுத்து வந்த கரகம் செய்ய தேவையான பொருட்களை வைத்து கரகம் செய்ய தொடங்குகின்றனர். இப்படி கரகம் செய்யும் பொழுது அந்த நந்தவனத்தில் உள்ள கிணற்று நீரில் இருந்து தண்ணீர் எடுத்து கரக செம்பினுள் ஊற்றுகின்றனர். இந்த கிணறு மற்ற நாட்களில் தண்ணீர் இல்லாமல் இருப்பதும் இந்த பங்குனி மாதத்தில் இன்று ஒரு நாள் மட்டும் தண்ணீர் ஊறி வருவதும் அதிசயமாக அந்த ஊர் மக்களால் பேசப்பட்டு வருகிறது.
அழகான கரகம்!
இப்படி நந்தவனத்தில் கரகத்தை அலங்காரம் செய்கின்றனர். அந்த கரகச் செம்பு அரை பொதி எடை உடைய கரகமாக பல்வகையான மலர்களைக் கொண்டு ஜோடிக்கப்படுகிறது. இப்படி அதிகப்படியான எடை உடைய கரகத்தினை தலையில் வைத்து சந்தனமாரியம்மன் அருளுடன் பூசாரிகள் சாமி வந்து ஆடுகின்றனர்.
அப்பொழுது இரு கரகமும் ஒன்றுடன் ஒன்று உரசப்படுகிறது. இந்த நிகழ்வானது நிறைவடையும் நிலைக்கு வருகிறது. பிறகு அந்த மேல முடி மன்னார்கோட்டை கரகம் கோவிலின் உள் வைக்கப்படுகிறது. பிறகு தங்கச்சி சந்தனமாரி கோவில் பூசாரி அந்த அரை பொதி எடை உடைய கரகத்தினை தலையில் வைத்து பிடிக்காமல் சுமந்து கொண்டு சுமார் 15 கிலோ மீட்டர் திரும்ப நடந்து வருகிறார். இப்படிப்பட்ட கரகத்தினை சுமந்து கொண்டு வருவது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு அந்த சந்தனமாரிகளின் அருளே மிக முக்கிய காரணம் என்று அந்த ஊர் பொதுமக்களால் பேசப்படுகிறது.
கீழ முடி மன்னார் கோட்டைக்கு கரகம் வருதல்!
ஒருவழியாக அக்காள் சந்தன மாரியை பார்த்து விட்டு தங்கச்சி சந்தனமாரி கோவில் பூசாரி கரகத்தினை சுமந்து கொண்டு கீழ முடி மன்னார்கோட்டைக்கு வந்து கோவிலின் உள்ளே கரகம் இறக்கி வைக்கப்படுகிறது.
அம்மன் மூச்சு விடும் நிகழ்வு!
அந்த நாள் அன்று ஊர் பொதுமக்கள் அனைவரும் இரவு 12 மணிக்கு மேல் வெளியே வராமல் இருக்கின்றனர். இந்த நேரத்தில் ஊரில் உள்ள பெரியவர்கள் ஒரு ஐந்து நபர்கள் மட்டும் தேங்காய் வாழைப்பழம் இளநீர் ஆகியவற்றை கொண்டு அம்மன் சன்னதிக்கு செல்கின்றனர். அப்பொழுது கோவில் பூசாரி அவர்கள் அம்மனுக்கு இளநீரை உடைத்து கொடுக்கும் போது அந்த கரக செம்பினுள் இருந்து மூச்சு விடும் சத்தம் கேட்கிறது. இது அந்த சந்தன மாரியம்மன் மூச்சு விடும் சத்தம் என்று அந்த ஊர் மக்களால் இன்று வரை நம்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நிகழும் என்று கூறப்படுகிறது.
கோலாகலமாக பொங்கல்!
மறுநாள் காலையில் இருந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்கினி சட்டி ஏந்துதல், சேவல் அறுத்தல், இப்படி நேர்த்திக்கடன்களை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
வரங்களை அள்ளிக் கொடுக்கும் சந்தனம்மாரி!
இந்த சந்தன மாரியம்மன் கோவிலில் பிள்ளை இல்லாத பெண்கள் வந்து வழிபட்டு சென்றால் அவர்களுக்கு மறுவருடம் கோவிலுக்கு வரும்போது கையில் குழந்தையுடனே வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதைப்போல திருமணம் ஆகாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என்று பல்வேறு வகையான வேண்டுதல்களை இந்த சந்தன மாரியம்மனிடம் வைத்தால் கண்டிப்பாக நிறைவேற்றிக் கொடுப்பாள் என்று ஊர் பொதுமக்களால் இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.
அந்தக் காலத்தில் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களையே நாம் குலதெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நமக்கு சிறு தெய்வமாக இருந்து நம் குலங்களை காத்து வருகின்றனர்.