

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த மன்னீஸ்வரர் என்ற சிவன் கோவில். 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
முன்பு காடாக இருந்த இந்த பகுதியில் வாழ்ந்த அன்னி என்ற வேடன் காட்டிலுள்ள மிருகங்கள், பறவைகள் இவற்றை வேட்டையாடி சாப்பிடுவது பாவம் என கருதினான்.
எனவே அவன் காட்டில் உள்ள பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் இவற்றை சமையல் செய்து சாப்பிட்டு வந்தான். ஒரு சமயம் காட்டுப்பகுதியில் அவன் கிழங்கு தோண்டி எடுக்கும் போது அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அந்த வேடன் மன்னரிடம் விஷயத்தை கூறினான்.
மன்னர் தனது ஆட்களை அனுப்பி அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்க்கச் சொன்னார். அங்கே மிகவும் ஆழமான பகுதியில் ஒரு சிவலிங்கம் தென்பட்டது. அதை எவ்வளவோ எடுக்க முயன்றும் அவர்களால் எடுக்க முடியவில்லை. உடனே மன்னன் அந்த சிவலிங்கத்தை சங்கிலியால் பிணைத்து யானைகளை கொண்டு இழுக்க செய்தான். அப்படி இருந்தும் சிவலிங்கம் வெளியே வரவில்லை.
பின்னர் ராஜ குருவின் யோசனைப்படி அந்த இடத்தில் பூஜை பரிகாரங்கள் செய்தவுடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. தன்னை சங்கிலியால் பிணைத்து எடுத்த மன்னனை தண்டிக்காமல் மன்னித்து விட்டதால், இந்த சிவன் மன்னீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
அன்னி என்ற வேடன் மூலம் சிவலிங்கம் வெளிப்பட்டதால் இந்த ஊருக்கு அன்னூர் என பெயர் ஏற்பட்டது. கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
மன்னன் பாவங்களை போக்கியதால் இந்த கோவில் பாவங்களைப் போக்கும் பரிகார ஸ்தலமாக போற்றப்படுகிறது. மக்கள் பாவங்களைப் போக்குவதற்காக இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்தால் அவர்கள் செய்த பாவங்கள் நிவர்த்தி அடையும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது.
மூலவர் மன்னீஸ்வரர், தாயார் அருந்தவச்செல்வி. சுமார் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாக உள்ளது. கருடன் உயரத்திலிருந்து பறந்து கீழே உள்ள பொருட்களை துல்லியமாக பார்க்கும் திறன் உடையது. அதேபோன்று மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னீஸ்வரர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது இந்தக் கோவில்.
இந்தக் கோவிலில் மன்னர்கள் பற்றிய 51 கல்வெட்டுகள் உள்ளன. மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்புவாக காட்சி தருகிறார். அம்மன் அருந்தவ செல்விக்கு தனி சன்னதி உள்ளது. இவை தவிர சுற்று பிரகாரங்களில் பைரவர், குரு பகவான், நடராஜர், வள்ளி தெய்வானை சமேத முருகன், ஆஞ்சநேயர், 63 நாயன்மார்கள், திருநீலகண்டர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். சனி பகவானுக்கும், காலபைரவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள சனி பகவானை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டம சனி தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது இங்குள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மூலவராக எம்பெருமான் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள சிவனை தரிசித்தால் ஆயிரம் லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும். கருவறையில் உள்ள சுவாமி மணல் நிறத்தில் காணப்படுகிறார். லிங்கத்தின் இருபுறமும் கருடன் இறக்கை போன்று காணப்படுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மன்னன் சங்கிலியால் பிணைத்த தடமும் வேடன் கோடாலியால் வெட்டிய தழும்பும் காணப்படுகிறது.
தொழில் வியாபாரம் செழிக்கவும், தங்களது பாவங்கள் போக்கவும், ஏழரை சனி, அஷ்டம சனியில் இருந்து விடுபடவும் இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் தவிர வெளியூரில் இருந்தும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள். மார்கழி பிரம்மோற்சவம், சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி பூஜை, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் நிச்சயம் நிவர்த்தியாகும்.