பாலா? நெய்யா? அதிக மதிப்பு எதுக்கு? காஞ்சி மஹாபெரியவா சொன்ன கதை!

Milk vs Ghee
Milk vs Ghee
Published on

‘ஐயோ! ஐயோ! என் உடம்பெல்லாம் சூடேறி எரிய ஆரம்பிக்குதே! இறைவா எனக்கு ஏன் இந்தத் தண்டனை? ரெண்டு மணி நேரம் முன்பு எவ்வளவு பாதுகாப்பாய்… நிம்மதியாய்… அமைதியாய்… அனைவரும் தொட்டுக் கும்பிடும் பசுவின் வயிற்றின் ஓரத்தில் பத்திரமாய் இருந்தேன்! அதற்குள்ளாகவா என் விதி இப்படி மாற வேண்டும்? பாத்திரத்தில் ஊற்றி, என்னை இந்தப் பாழும் அடுப்பிலேற்றிச் சூடு படுத்திக் கொதிக்க விடுதல் முறையா?’ - கேட்டபடி கோபத்தில் பொங்கியது அந்தப் பசும் பால்!

நன்கு பொங்கி அடங்கியதும் பாலுடன் பாத்திரத்தை இறக்கிக் கீழே வைத்தார்கள். மெல்ல சூடு அடங்க, ஒரு வழியாக நிம்மதிப் பெரு மூச்சு விட்டது பால். ‘அப்பாடா!’ முழுதாகச் சூடு அடங்கியதும், ஒரு ஸ்பூன் தயிரை அதன் மேல் ஊற்றினார்கள். பாலுக்கு ரொம்பவும் சந்தோஷம். குளிர்ச்சியான தயிரை அதனுடன் ஊற்றிக் கலக்க, அதன் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. அந்த மகிழ்ச்சியில் திளைத்து அப்படியே உறைந்து போனது! அதற்குள் ஓடி விட்டது ஓர் இரவு.

காலை வந்ததும் விடுதலை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது, பாலாக இருந்து, கொதித்து அடங்கித் தயிருடன் இணைந்து, உறைந்து தயிராகிய பால். ஆனாலும் விதி வலியதாயிற்றே! பத்து மணி வாக்கில் பானையில் ஊற்றப்பட்ட தயிரை, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். முதலில் யாரோ ‘கிச்சு..கிச்சு’ மூட்டுவதாக எண்ணிச் சிரித்தது தயிரான பால்! மத்தின் வேகம் அதிகரித்து, உறைந்திருந்த அதனை உருமாற்றம் செய்யும் நோக்குடன் செயல்பட ஆரம்பித்ததும், மீண்டும் அதனை வருத்தம் கவ்விக் கொண்டது.

என்ன தவறுதான் நான் செய்தேன்? பாலாகப் பிறந்தது என் குற்றமா? ’கடவுளே நேற்றே என்னைத் தீயில் கொதிக்கச் செய்தாய்! அத்தோடு முடிந்து விட்டது என்று நினைத்தேன். இன்றோ மத்தில் மசிக்கச் செய்கிறாய்! இன்னும் என்னவெல்லாம் செய்யச் சித்தமோ? இப்பொழுதே சொல்லி விடு. நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தயாராகி விடுகிறேன். எதிர் பாராமல் எனக்கு இடைஞ்சலைக் கொடுக்காதே! என்னால் தாங்க முடியவில்லை!’ என்று கெஞ்சியது தயிரான பால்!

மத்தால் கடைந்தவர்கள், அதன் வேண்டுதல் பற்றிய எந்தக் கவலையுமின்றி மேலும், மேலும் கடைந்து கொண்டே இருந்தார்கள். திரண்டு வரும் வெண்ணையை வழித்துப் பக்கத்தில் வைத்திருந்த பாத்திர நீரில் பக்குவமாக மிதக்க விட்டபடி மேலும் கடைந்தார்கள். ஒரு வழியாக, கடைந்தவர்கள் எதிர் பார்த்த அளவுக்கு வெண்ணை சேர்ந்ததும், ஒன்றாகச் சேர்த்துக் கலயத்தில் இட்டு வைத்து விட்டு, மோரைத் தனியாகப் பிரித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
நிமிஷத்தில் வரம் அருளும் ஸ்ரீ நிமிஷாம்பாள்!
Milk vs Ghee

பாலாக இருந்து, நெருப்பில் வெந்து பொங்கிய போது இருந்த சினத்தைக் காட்டிலும் அதிகச் சினம் இப்போது ஏற்பட்டது மோரான பாலுக்கு! ஆறித் தயிரோடு இணைந்தபோது, இணைவதில் இன்பம் இருந்தது. ஆனால்,வெண்ணை என்றும் மோர் என்றும் பிரிக்கப்பட்டதால் பெரும் துயருக்கு ஆளானது மோரான பால்! பிரிவு எப்பொழுதும், எல்லோருக்கும் துன்பத்தைத் தருவதுதானே! இந்தப் பிரிவோடாவது தனது துன்பம் தீர்ந்துவிடாதா? என்று ஆதங்கப்பட்டது வெண்ணை! 

இரண்டொரு நாட்கள் கலயத்தில் ஓய்வெடுத்த வெண்ணையை, மறுபடியும் பெரிய வாணலியில் போட்டு, அடுப்பில் ஏற்றினார்கள். ’அட ஆண்டவா! மீண்டும் தீயா? மீளவே எனக்கு வழியில்லையா?’ என்று ஏக்கம் கொண்டது வெண்ணையாகிய பால். மிதமான தீயில் வைத்து ஸ்டவ்வை எரிய விட, மெல்ல…மெல்ல…உடலெங்கும் சூடேற…வெண்ணை கரைந்து நெய்யாக ஆரம்பித்தது. சூட்டைத் தாங்க முடியாது கரைந்து கொண்டிருந்த வெண்ணை, தனக்குள்ளாகப் புலம்பிக் கொண்டே இருந்தது. ’எத்தனை தடவைதான் என்னை இப்படிச் சுட்டுப் பொசுக்குவீர்கள்? பாலென்று சொல்லிப் பல புனித நிகழ்வுகளுக்கு என்னைப் பயன்படுத்தும் நீங்கள், இப்படிக் கொதிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது நியாயமா? என் அலறலும், வேண்டலும் யார் காதிலுமே விழவில்லையா?’ என்று ஓலமிட்டது!     

இதையும் படியுங்கள்:
ராகு - கேது தோஷமா? வக்கிரமடைந்து வில்லங்கம் செய்யும் கிரகங்களால் தொல்லையா? கவலைய விடுங்க...இந்த கோவிலுக்கு போங்க
Milk vs Ghee

ஒரு வழியாக,வெண்ணை முழுதும் நெய்யானது. அதனை முறையாக ஆற வைத்து, பாட்டிலில் அடைத்தார்கள். கடைகளுக்கு எடுத்துச் சென்றார்கள். அந்த சூப்பர் மார்க்கட்டின் உள்ளே நுழையும் போதே, ஓரமாக உள்ள ட்ரேயில் பால் பாக்கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. உள்ளே நின்ற உயரமான ரேக்குகளில் நெய் பாட்டில்கள் வரிசை கட்டி நின்றன. அப்பாவும், மகளும் அந்த சூப்பர் மார்க்கட்டின் உள்ளே நுழைந்தார்கள். மகள் சொன்னாள்: ’டாடி! அம்மா மறக்காம பாலையும், நெய்யையும் வாங்கிக் கிட்டு வரச் சொன்னாங்க! இது ஒரு லிட்டர், அது ஒரு லிட்டர் வாங்கிக்கிடலாமா டாடி?’   

‘பால் ஒரு லிட்டர் வாங்கிக்கிடலாம்! அது நாற்பது ரூபாதான் இருக்கும். ஆனா நெய் ஒரு லிட்டர் வாங்கணும்னா நானூறு ரூபாய்க்கு மேல இருக்கும்மா! அதைக் கொறைச்சி வாங்கிக்கிடலாம்!’  ‘என்ன டாடி சொல்றீங்க? பால்ல இருந்துதானே நெய் வருது! ஆனா அதுக்குப் பத்துமடங்குக்கு மேலும் வெலையா? ஏன் டாடி அப்படி?’     

‘கறந்த உடனேயே பால் கெடைச்சிடுது. அதனால அதற்குக் கொறச்சலான வெலை. ஆனா நெய் அப்படி இல்லையேயம்மா! அது பொங்கித் தயிராகி, கடையப்பட்டு வெண்ணையாகி, மீண்டும் கொதிக்க வைக்கப்பட்டு நெய்யாகற வரைக்கும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு! அதனாலதான் அதுக்கு அதிக வெலை!’

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார். ’நமக்கும் இது மாதிரிதாம்மா வாழ்க்கை! அப்படியே ‘ராவா’ இருந்தா நம்ம மதிப்பு கூடாது. கஷ்டப்பட்டு உழைக்கணும்!நேர்மையா, உண்மையா உழைச்சோம்முன்னா நெய் மாதிரி நாமும் காஸ்ட்லியா ஆகிடலாம்.’   

இதையும் படியுங்கள்:
'டங்'என்ற சத்தம், நிகழ்ந்தது அற்புதம், தோன்றியது அன்னையின் திருஉருவம்!
Milk vs Ghee

இந்த பால் - நெய் கதையை மக்களுக்காகச் சொன்னவரு காஞ்சிப் பெரியவரும்மா! அந்த மகான்தாம்மா மக்கள் நல்லா வாழ, உன்னைப் போன்ற இளவயசுக்காரர்கள் கஷ்டப் பட்டு முன்னேற இந்தக் கதையைச் சொல்லி வெச்சுருக்காரு’. ’தான்’கிற அகங்காரம் இல்லாம, தன்னைத் தரிசிக்க வர்ற ஆசிரியர்கள், பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், இசைக் கச்சேரி செய்பவர்கள், பெற்றோர்கள்னு அத்தனை பேர்க்கிட்டயும் இந்தக் கதையைப் பரப்பி, இளைஞர்களை நல்வழிப் படுத்துங்கன்னு அந்த மகான் கேட்டுக்கிடுவாராம்! இந்த உலகத்தின் மேலயும், இளைஞர்கள் மேலயும் அவருக்கு அவ்வளவு பிரியம்! அளவு கடந்த பாசம்! போற எடத்ல இருக்கற குறைகளைக் களைய அவர் அந்த எடத்லயே தவமோ, தியானமோ ஆரம்பிச்சிடுவாராம். கை மேல பலனும் கெடைச்சிடுமாம்! அவர் மூலமா ஆண்டுக் கணக்கில மழையையே பார்க்காத ஊர்கள் பல மழையைப் பார்க்க… மக்கள் மகிழ்ந்து போய் அவரைக் கொண்டாடுவார்களாம்.' 

உலகத்தை உய்விக்க, மனித வடிவில் வந்த அந்த மகானை வணங்குவோம்! அவர் காட்டிய வழியில் வாழ்ந்து முன்னேறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com