மும்பை மகாலட்சுமி கோயில்: ஆடி மற்றும் நவராத்திரி திருவிழாக்களின் ஆன்மீக அதிசயங்கள்!

அரபிக் கடலோரத்தில் வீற்றிருக்கும் திரிதேவியரின் அருள் பெற அரிய ஆன்மீகத் வழிகாட்டி!
மகாலட்சுமி கோயில் - Mumbai Mahalaxmi Temple,
மகாலட்சுமி கோயில் - Mumbai Mahalaxmi Temple,AI Image
Updated on

மும்பை மகாலட்சுமி கோயில் அரபிக் கடலோரம், வோர்லி (Worli) கடற்பகுதியின் பின்னணியில் அமைந்திருக்கும் மிக ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த அற்புதத் தலம். மும்பையில் வாழும் தமிழர்களுக்கும், மகாலட்சுமி தாயாரின் பக்தர்களுக்கும் இந்தத் தலம் ஒரு மிகப்பெரிய புகலிடம்.

தமிழ் மாதமான ஆடி மாதம் (Aadi Month) அம்பிகை, துர்க்கை, லட்சுமி வழிபாட்டிற்குரிய மிக உன்னதமான மாதமாகும். நாங்கள் தோழிமார்கள் ஒன்று கூடி நடந்து சென்று அடிக்கடி தரிசனம் செய்த அந்த மகாலட்சுமி கோயிலில், ஆடி மாதத்தில் நடைபெறும் சிறப்பான ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் அதன் வழிபாட்டுத் தகவல்கள் பற்றி இப்பதிவில் காண்போம்:

ஆடி வெள்ளிக்கிழமைகளில் முப்பெரும் தேவியர் தரிசனம்;

மும்பை மகாலட்சுமி கோயிலில் நடுவில் மகாலட்சுமி, இடப்பக்கம் மகாகாளி, வலப்பக்கம் மகாசரஸ்வதி ஆகிய 'திரிதேவிகள்' (Tridevi) ஒரே சன்னதியில் வீற்றிருக்கிறார்கள்.

ஆடி வெள்ளிச் சிறப்பு: தமிழ் மரபுப்படி ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். இந்நாட்களில் மூன்று தேவியருக்கும் சிறப்புத் தங்கக் கவசங்கள், விதவிதமான மலர் அலங்காரங்கள் (பட்டு உடுத்தி, நவரத்தின ஆபரணங்கள்) அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

வரலட்சுமி விரத மகோற்சவம்

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம் ஆகும். மகாலட்சுமி தாயாரின் முதன்மை ஆலயம் என்பதால், அந்நாளில் மும்பை கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

பூஜைகள்: அதிகாலை காலை ஆர்த்தி (Main Aarti) முதல் இரவு வரை லட்சுமி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

தாம்பூலம் மற்றும் பிரசாதம்: ஆடி வெள்ளியிலும் வரலட்சுமி நோன்பு நாளன்றும் கோயிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளைகாப்பு/காப்பரிசி மற்றும் தாம்பூலங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆடிப்பூரம் மற்றும் மாவிளக்கு பிரார்த்தனை

ஆடிப் பூரம் என்பது அம்பிகையின் அவதார நட்சத்திர நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் மனக்குறைகள் நீங்கவும், குடும்பத்தில் வளம் பெறவும் கோயிலின் வெளிப் பிரகாரத்திலும், மாடங்களிலும் நெய் தீபங்கள் மற்றும் அரிசி மாவில் வெல்லம் சேர்த்துப் போடும் மாவிளக்கு தீபம் ஏற்றி தாயாரை வழிபடுவார்கள்.

'ஷ்ராவண' (Shravan) மாதத் தொடக்கத்தின் அலைகள்

தமிழ் ஆடி மாதமும், மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படும் புனிதமான 'ஷ்ராவண்' (Shravan Month) மாதமும் ஒரே காலகட்டத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) ஒத்துப்போகும்.

மகாலட்சுமி கோயில் - Mumbai Mahalaxmi Temple,
மகாலட்சுமி கோயில் - Mumbai Mahalaxmi Temple,

இதனால், தென்னிந்திய பக்தி மரபான 'ஆடி வழிபாடும்', வடஇந்திய மரபான 'ஷ்ராவண் வழிபாடும்' இணைந்து, மும்பை மகாலட்சுமி கோயிலில் ஒரு மிகப்பெரிய ஆன்மீகச் சங்கமத்தையே உருவாக்கும்.

ஆடி அமாவாசை நாட்களிலும் இங்குப் பித்ரு தர்பணம் செய்துவிட்டு தாயாரைத் தரிசிக்கப் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள்.

எப்பொழுதும் நான் நினைவுகூறக்கூடிய சில கோயில் அடையாளங்கள்:

கடல் காற்றுடன் கூடிய பிரகாரம்: கோயிலின் பின்புறப் படிக்கட்டுகளில் இறங்கினால் அரபிக் கடலின் அழகிய அலைகளையும், குளிர்ந்த காற்றையும் ரசித்தபடியே பிரசாதம் சாப்பிட்ட தருணங்கள்.

பூக்கடைகளின் மணம்: பூலாபாய் தேசாய் சாலையிலிருந்து (Bhulabhai Desai Road) கோயிலை நோக்கிச் செல்லும் அந்தச்சிறிய சந்துப் பாதையில் விற்கப்படும் தாமரை மலர்கள், தேங்காய்-பழத் தட்டுகள் மற்றும் பிரசாதக் கடைகளின் நறுமணம்.

வெள்ளிச் சிங்கம்: சபா மண்டபத்தின் நடுவே அமைந்திருக்கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கம்பீரமான சிங்கம் மற்றும் பித்தளை விளக்குகள்.

ஆடி மாதத்தில் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதிகாலை 6:00 AM நடை திறக்கும் நேரத்திலோ அல்லது மாலை 7:30 PM மெயின் ஆர்த்தி நேரத்திலோ தரிசனம் செய்வது மனதிற்குப் பேரமைதியைத்தரும்.

நாங்கள் மும்பையில் இருந்தபோது ஆடி மாதத்தில் மாலை வேளைகளில் அங்கு சென்று தாமரை மலர் சாற்றி வழிபட்ட நினைவுகள் அந்தக் கடல் அலையாய் நினைவுக்கு வருவது போல், நவராத்திரியும் நினைவுக்கு வருவதுண்டு. அதனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் சில இதோ:

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
மகாலட்சுமி கோயில் - Mumbai Mahalaxmi Temple,

'கடஸ்தாபனம்' மற்றும் அகண்ட தீபம் (Ghatasthapana)

நவராத்திரியின் முதல் நாளன்று கோயிலில் மிகவும் புனிதமான 'கடஸ்தாபனம்' எனப்படும் கலச பிரதிஷ்டை செய்யப்படும்.

தாயாரின் சன்னதிக்கு அருகில் நவவாசம் (ஒன்பது வகை தானியங்கள்) தூவப்பட்டு, மண் கலசத்தில் புனித நீர் நிரப்பி பிரதிஷ்டை செய்யப்படும்.

ஒன்பது நாட்களும் அணையாமல் எரியும் 'அகண்ட ஜோதி' (தீபம்) ஏற்றி வைக்கப்படும். இந்த ஒன்பது நாட்களில் அந்தத் தானியங்கள் பச்சைப் பயிராக முளைத்து வளர்வது செழிப்பின் குறியீடாகக் கருதப்படுகிறது.

ஒன்பது நாட்களும் ஒன்பது அலங்காரங்கள்

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் திரிதேவியரான மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி ஆகிய மூவருக்கும் விசேஷமான பட்டுப் புடவைகள் மற்றும் தங்க, வைரம், நவரத்தின ஆபரணங்களால் அலாதியான அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவியர் சிம்ம வாகனம், மயில், யானை போன்ற பல்வேறு வாகனங்களில் வீற்றிருப்பது போலச் செய்யப்படும் மலர் அலங்காரங்கள் கண்கள் குளிரச்செய்யும்.

பக்தர்கள் அந்தந்த நாளுக்குரிய வண்ண உடைகளை அணிந்து வந்து தாயாரைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

லலிதா சகஸ்ரநாமம் மற்றும் 'சண்டி ஹோமம்'

நவராத்திரி நாட்களில் கோயில் பிரகாரத்தில் இடைவிடாது வேத மந்திரங்களும், லலிதா சகஸ்ரநாம பாராயணமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அஷ்டமி மற்றும் நவமி நாட்கள்: மிகவும் சக்திவாய்ந்த 'சண்டி ஹோமம்' (Chandi Hoomam) கோயிலில் நடைபெறும். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் துன்பங்கள் நீங்கவும் இந்த மகாயாகம் நடத்தப்படுகிறது. இந்நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று 'ஸ்ரீ சூக்தம்' மற்றும் 'துர்க்கா சப்தசதி' பாராயணம் செய்வார்கள்.

இரவிலும் ஒளிரும் பெருங்கூட்டம் (24 மணி நேரத் தரிசனம்)

நவராத்திரி நாட்களில் மகாலட்சுமி கோயில் இரவு முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு (Illumination) மாளிகை போலக் காட்சியளிக்கும்.

மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிராவின் பிற ஊர்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கால்நடையாகவே (Padayatra) நடந்து வந்து தாயாரைத் தரிசனம் செய்வார்கள்.பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நடை அதிகாலை வரை திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை பெரிய கோயில் வாராகி அம்மன் அலங்கார ரகசியங்கள் மற்றும் ஆஷாட நவராத்திரி பலன்கள்!
மகாலட்சுமி கோயில் - Mumbai Mahalaxmi Temple,

மங்களகரமான நிறைவு (Vijaya Dashami): பத்தாம் நாளான விஜயதசமி (தசரா) அன்று கடஸ்தாபனம் செய்யப்பட்ட முளைப்பயிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். அத்துடன் சிறப்பு மகா ஆரத்தியுடன் இந்த ஒன்பது நாள் ஆன்மீகத் திருவிழா நிறைவடையும்.

நவராத்திரி காலத்தில் நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது அந்த நீளமான வரிசையில் நின்று 'ஜெய் மாதா தி' (Jai Mata Di) என்று கோஷமிட்டபடியே தாயாரைத் தரிசித்த இன்னும் இது போன்ற பல நினைவுகள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

logo
Kalki Online
kalkionline.com