சாமுண்டி மலை இரகசியங்கள்: உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் மைசூர் அம்மனின் அற்புத மகிமைகள்!

ஆடி மாதத்தில் அன்னை சாமுண்டேஸ்வரியைத் தரிசித்து வாழ்வில் அளவில்லா ஆனந்தமும் தெய்வீக அருளும் பெறும் வழிகள்.
சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்
சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்AI Image
Updated on

ரு பக்தராக, மலை ஏறிச்சென்று அன்னையைத் தரிசித்தபோது மெய் சிலிர்த்து உணர்ந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் மறக்க முடியாது. அதோடு அன்னை பற்றிய சிறப்பான தகவல்களையும் இப்பதிவில் காண்போம்:

மலையின் தெய்வீக அதிர்வு

மைசூர் நகரின் பரபரப்பிலிருந்து விலகி, அந்தப் பச்சைப்பசேல் என்ற சாமுண்டி மலையில் ஏறும் போதே மனதிற்குள் ஒரு அமைதி குடியேறியது. குறிப்பாக, அந்தப் பிரம்மாண்ட ஒற்றைக்கல் நந்தியைத்தாண்டி, மகிஷாசூரன் சிலையைக் கடந்து செல்லும்போது ஒரு வரலாற்றுப் பக்கத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதுதான் அந்த மலையின் தெய்வீக அதிர்வு என்று கூறலாம்.

கம்பீரமான ராஜகோபுரம்

கோவிலின் வாசலில் நின்று அந்த ஏழு நிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்தபோது, உடையார் வம்சத்து மன்னர்களின் கட்டிடக்கலையும், ஆன்மீக ஈடுபாடும் நம்மை வியக்க வைத்தது.

கருவறைப் பேரொளி

கோவிலின் நீண்ட வரிசையில் நின்று, அந்தத் தங்கக் கவசங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் மின்ன, அஷ்டபுஜங்களுடன் (எட்டு கரங்கள்) சிங்க வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சாமுண்டேஸ்வரி அம்மனை நேருக்கு நேர் பார்த்த அந்தச் சில நொடிகள்... நம் கவலைகள் அனைத்தையும் மறக்கடித்து மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அன்னையின் கண்களில் உள்ள அந்த உக்கிரமும் கருணையும் கலந்த பார்வை உருக வைத்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு கோவிலைத் தரிசிக்கும்போது ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை நானும் பெற்றேன்.

பின்னர், கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகரான மைசூரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,300 அடி உயரத்தில் உள்ள சாமுண்டி மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கர்நாடக மக்களின் 'நாட தேவி' (மாநிலத் தெய்வம்) என்று போற்றப்படும் இந்த அன்னை மற்றும் இக்கோவில் பற்றிய மிகச்சிறப்பான தகவல்கள்களை சேகரிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து சில குறிப்புகள் இதோ:

18 மகா சக்தி பீடங்களில் ஒன்று

ஆன்மீக ரீதியாக இத்தலம் மிக உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. தக்ஷன் நடத்திய யாகத்தில் சதி தேவி தன் உடலை மாய்த்துக் கொண்டபோது, அவரது உடலை ஏந்தி சிவன் ஆடிய பிரளய தாண்டவத்தின் போது, சதி தேவியின் தலைமுடி (கூந்தல்) விழுந்த இடமாக இந்த மைசூர் சாமுண்டி மலை கருதப்படுகிறது. எனவே, இது இந்தியாவின் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாக, 'கௌரவ பீடம்' அல்லது 'குரௌஞ்ச பீடம்' என்ற பெயருடன் விளங்குகிறது.

மைசூர் மற்றும் சாமுண்டி பெயர்க் காரணம்:

புராணங்களின்படி, இப்பகுதியை ஆண்ட எருமை முகம் கொண்ட 'மகிஷாசூரன்' என்ற கொடிய அசுரனை, அன்னை துர்க்கை 'சாமுண்டேஸ்வரி' அவதாரம் எடுத்து வதம் செய்த இடம் இந்த மலை உச்சிதான்.மகிஷாசூரன் வதம் செய்யப்பட்ட இடமான 'மகிஷூரு' (Mahishuru) என்ற பெயரே காலப்போக்கில் மருவி 'மைசூரு' (Mysuru) என்று மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
எரியும் தீயில் குளியல்! பொய் சொன்னால் தண்டிக்கும் மரம்! அம்மன் கோயில்களின் அமானுஷ்ய ரகசியங்கள்!
சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்

அஷ்டபுஜ சாமுண்டேஸ்வரி (எட்டு கரங்கள்):

கருவறையில் வீற்றிருக்கும் சாமுண்டேஸ்வரி அம்மனின் அசல் சிலை தூய கல்லால் ஆனது. அன்னை இங்கு எட்டு கரங்களுடன் (Ashtabhuja), கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, மகிஷாசூரனை வதம் செய்த கம்பீர கோலத்தில், அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.

மைசூர் அரச குடும்பத்தின் குலதெய்வம் (Wodeyars):

1399-ஆம் ஆண்டு முதல் மைசூரை ஆண்ட ஒப்பற்ற உடையார் (Wodeyar) அரச வம்சத்தின் முதன்மைக் குலதெய்வமாகச் சாமுண்டேஸ்வரி அம்மன் விளங்குகிறாள்.இக்கோவிலின் பிரம்மாண்டமான 7 நிலை ராஜகோபுரம் 1827-ஆம் ஆண்டில் மன்னர் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்டது என்றும்,கோவிலில் உள்ள அம்மனின் தங்கச் சிம்ம வாகனம் மற்றும் விலைமதிப்பற்ற நகைகள் பலவும் இந்த அரச குடும்பத்தினர் காணிக்கையாக அளித்தது என்றும் கூறுகின்றனர்.

சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்
சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்AI Image

பிரம்மாண்டமான நந்தி சிலை:

மலைப் பாதையின் வழியாகக் கோவிலுக்குச் செல்லும் வழியில் (700-வது படிக்கட்டில்) அமர்ந்திருக்கும் ஒற்றைக்கல் நந்தி சிலை (Monolithic Nandi) இக்கோவிலின் மாபெரும் சிறப்பாகும்.1659-ஆம் ஆண்டில் தொட்ட தேவராஜ உடையார் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த நந்தி, 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய நந்தி சிலைகளில் இதுவும் ஒன்றாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க 1008 படிக்கட்டுகள்:

பக்தர்கள் மலையேறிச் செல்ல ஏதுவாகச் செதுக்கப்பட்ட 1,008 படிக்கட்டுகள் ஆன்மீக ரீதியாகத் தனித்துவம் வாய்ந்தவை. இந்தப் படிக்கட்டுகளின் தொடக்கத்தில், அன்னை சாமுண்டேஸ்வரியால் வதம் செய்யப்பட்ட மகிஷாசூரனின் 16 அடி உயர பிரம்மாண்ட வண்ணச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நீலமாக மாறும் பால் அதிசயம்! 2000 ஆண்டுகள் பழமையான 'தென் பத்ரி' மலை மண்டல பெருமாள் கோவில்!
சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்

கையில் வாளுடனும் பாம்புடனும் இருக்கும் இந்தச்சிலை மைசூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா (Dasara)

கர்நாடகாவின் 'நாட ஹப்பா' (மாநிலத் திருவிழா) என்று கொண்டாடப்படும் மைசூர் தசரா பண்டிகையின் மையப்புள்ளியே இந்தச் சாமுண்டேஸ்வரி அம்மன்தான். விஜயதசமி அன்று, 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் (Golden Howdah) சாமுண்டேஸ்வரி அம்மனின் உற்சவர் சிலை வைக்கப்பட்டு, மைசூர் அரண்மனை யிலிருந்து யானைகளின் பிரம்மாண்ட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் அற்புதம் உலகப் புகழ்பெற்றது.

கூடுதல் தகவல்: இந்த மலைக்கு முற்காலத்தில் சிவபெருமானின் வழிபாட்டுத் தலமாக இருந்ததால் 'மஹாபலாத்ரி' (Mahabaladri) என்ற பெயர் இருந்தது. இன்றும் சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு மிக அருகில் உள்ள 'மஹாபலேஸ்வரர் கோவில்' தான் இந்த மலையின் மிகப்பழமையான கோவிலாகும்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய உன்னதமான மாதம். அதிலும் குறிப்பாக, மைசூர் சாமுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதக் கொண்டாட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மாதத்தில் அன்னைக்கு நடக்கும் பிரத்தியேக விசேஷங்கள் இதோ:

ஆடி வெள்ளி - 'சாமுண்டி ஜெயந்தி' (Chamundi Jayanti)

ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் இங்கு விசேஷம் என்றாலும், ஆடி மாத கிருஷ்ண பட்ச சப்தமி திதியில் வரும் வெள்ளிக்கிழமை 'சாமுண்டி ஜெயந்தி' ஆகக் கொண்டாடப்படுகிறது.

• உடையார் வம்சத்து மன்னர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா, அன்னை சாமுண்டேஸ்வரி மனித வடிவில் அவதரித்த தினமாகக் கருதப்படுகிறது.

• அன்று அன்னைக்கு மைசூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் பிரத்யேக தங்க, வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டு, விசேஷ பூசைகளும், பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் ஆடி வெள்ளிக் கிழமைகள்.

இதையும் படியுங்கள்:
தீமைகளை வேட்டையாடும் மல்ரட்டசாமி! திம்மாச்சிபுரம் சுடலைமாடன் கோவிலின் மிரளவைக்கும் ரகசியங்கள்!
சாமுண்டி மலை - சாமுண்டேஸ்வரி அம்மன்

ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில் மைசூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமுண்டி மலைக்கு வருவார்கள்.

• அதிகாலை 3.30 மணிக்கே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு 'ருத்ராபிஷேகம்' மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் விசேஷமாக நடத்தப்படும்.

• பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, ஆடி வெள்ளிக்கிழமைகளில் தனியார் வாகனங்கள் மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டு, அரசு சார்பில் இலவசப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

ஆஷாட சுக்ல பஞ்சமி (ஆடி மாத வளர்பிறை பஞ்சமி)

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி அன்று, அன்னைக்கு வாராஹி தேவியின் அம்சமாக விசேஷ அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. சாமுண்டேஸ்வரி அன்னை சப்தகன்னியரில் ஒருவரான வாராஹியின் வடிவமாகவும் போற்றப்படுவதால், இந்நாளில் அம்மனைத் தரிசிப்பது தீராத பிணிகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் என்பது நம்பிக்கை.

விதவிதமான 'அலங்காரப் பேரழகு'

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அன்னை சாமுண்டேஸ்வரிக்கு வாராவாரம் வெவ்வேறு வடிவங்களில் பிரம்மாண்ட அலங்காரங்கள் (உதாரணமாக: சிம்ம வாகன அலங்காரம், கஜலட்சுமி அலங்காரம், மகிஷாசூரமர்த்தினி அலங்காரம்) செய்யப்படும். இந்த அலங்காரங்களைக் காண்பதே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த அம்மனைத் தரிசியுங்கள் அளவில்லா ஆனந்தம் அடைவீர்கள்!

logo
Kalki Online
kalkionline.com