
நட்சத்திரக் கூட்டங்களில் மிகவும் ஒளிபொருந்தியது, சுவாதி நட்சத்திரம். ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. அப்பேர்ப்பட்ட இந்த நட்சத்திர தினத்தின் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். நரசிம்மரின் திரு நட்சத்திரம் சுவாதி இவரது அவதாரம் நிகழ்ந்தது மாலை நேரத்தில் என்பதால் நரசிம்மரை மாலை நேரத்தில் வணங்குவது சிறப்பு. குறிப்பாக பிரதோஷ நாளில், மாலை நேரத்தில் நரசிம்மரை ஆராதித்து வருவது சிறப்பு. செவ்வாய், புதன், சனி ஆகிய தினங்களில் வணங்குவது விஷேசம். இவரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். ராகுவால் ஏற்படும் தோஷம் நீங்கும். பில்லி, சூனியம், எதிரிகளால் உண்டாகும் அச்சுறுத்தல் விலகும்.
திருமாலின் 10 அவதாரங்களில் பக்தனை காப்பதற்காகவும், நாராயண மந்திரத்தின் மகிமையை உணர்த்துவதற்காகாவும், இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உலகம் அறியச் செய்யவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.
பெருமாளின் உக்கிர வடிவமாக கருதப்படும் நரசிம்மர் வித்தியாசமான பல ரூபங்களில் பல கோவில்களில் காட்சி தருகிறார். அவ்வகையில், நரசிம்மர் மனித முகத்துடன் சைவ, வைணவ ஐக்கியமாக சிவலிங்கத்துடன் கருவறையில் ஒரே இடத்தில் காட்சி தரும் கதிர் (கத்ரி) நரசிங்கப் பெருமாள் கோவில்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்திலுள்ளது. இந்த பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோவில். கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம் ஏந்தி, நின்ற கோலத்தில், நரசிம்மர் காட்சி தருகிறார். பத்ம விமானத்தின் கீழ் இருக்கும் இவருக்கு, சிங்க முகம் கிடையாது; சாந்தமாக, மனித முகத்துடன் காட்சி தருகிறார். சன்னிதி எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். ஜாதக ரீதியான தோஷங்களை போக்க இங்கு நெய் தீபம் ஏற்றுவதுதான் சிறப்பு. எண்ணெய் ஊற்றி இங்கு தீபம் ஏற்றுவதில்லை. திருமண தடை நீங்கவும், நல்ல கணவர் பெற வேண்டியும், மன அழுத்தம் குறையவும் ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
நினைத்ததை நிறைவேற்றும் சுதர்சன நரசிம்மர்: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், சுற்றிலும் நெல் வயல்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள, கரிசூழ்ந்த மங்கலம் சுதர்சன நரசிம்ம சுவாமி ஆலயத்தில் உற்சவராக வெங்கடாசலபதி அருள்கிறார்.
ஆலயம் உற்சவர் பெயராலேயே வெங்கடாசலபதி கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. பிற ஆலய சுதர்சனர் சந்நதிகள் போன்று இங்கு யோக நரசிம்மரைத் தரிசிக்க பின்புற பலகணி இல்லை. மாறாக அவரை தரிசிக்கும்படியாக நிலைக்கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நரசிம்மருக்கு ஆரத்தி காண்பிக்கும்போது மட்டுமே கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்மரைக் கண்டு வணங்கலாம். இங்கு தொடர்ந்து 11 பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு பானக நைவேத்யம் செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். மகப்பேறு, மணப்பேறு வேண்டி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு, பாயச நைவேத்தியம் செய்து, ஆலயத்தையொட்டியுள்ள தாமிரபரணி நதிக்கரை படியில் குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். இதை படிப்பாயசம் என்கின்றனர்.
நின்ற கோல நரசிம்மர்: கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ள மொண்டிப்பாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது தாளக்கரை இங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அபூர்வமாக நின்ற கோலத்தில் நரசிம்மர் அருள் பாலிக்கிறார். பொதுவாக நரசிம்மர் தனித்தோ, லட்சுமியுடனோ அமர்ந்த கோலத்தில் தான் காட்சி தருவார். ஆனால் இங்கே நரசிம்மரும், தாயாரும் அருகருகே நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய அருள்பாலிக்கிறார்கள்.இது 800 ஆண்டுகள் பழமையான கோயில். இங்குள்ள உற்சவ மூர்த்தியும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்றே அழைக்கப்படுகிறார். இவரும் சிம்ம முகத்துடன் இருப்பது ஆச்சரியமான விஷயம்.
பல் நோய்கள் போக்கும் நரசிம்மர்: சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணசுவாமி கோவிலில் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் யோக நரசிம்மர் இருக்கிறார். பொதுவாக சிவன் கோவிலில் சன்னதி கோஷ்டத்தின் பின் புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். பல்வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்ள பல் நோய்கள் சரியாகும் என்பது நம்பிக்கை.
பிரதோஷம் விழா காணும் நரசிம்மர் :மதுரை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தக்கடை ஊராட்சி யானைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் திருக்கோயில். குடைவறை கோயிலாக அமைந்துள்ள இத்தலத்தில் மிகவும் பெரிய நரசிம்ம பெருமானின் உருவம் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான கோயில். பெரிய குடைவறை கோயில் என்ற பெருமை உடையது. பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தலம். எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷ தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைப்பிடிக்கப்படுகிறதென்றல் அது இந்த கோயிலில் தான்.
உக்கிர நரசிம்மர்: புதுச்சேரி - விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இங்கு மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள். 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர்; சிறிய உருவில் யோக நரசிம்மர் மற்றும் சிறிய வடிவில் பாலநரசிம்மர்.
பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் இப்படி ஒரே கருவறையில் மூன்று கோலத்தில் நரசிம்மர் இருப்பது இங்கு மட்டுமே. சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா நடக்கிறது.
365 நாளும் சூரிய பூஜை காணும் நரசிம்மர்: விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் சென்னையிலிருந்து தென்மேற்கே 195 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அந்திலியில் 1600 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. காலை நேர நடை திறக்கப்பட்ட நிலையில் சூரிய ஒளி வருடத்தின் 365 நாட்களும் நரசிம்மர் மீது படரும் காட்சி காண்பது இங்கே அரிதான நிகழ்வாகும்.