
பத்மாவதி, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடையது நாராயணவனம் என்னும் திருத்தலம். இத்தலம் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையது.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திர மாஸ கணக்குபடி, வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது. இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர். அந்த திருமணத்தைக் காண 33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம்.
தல சிறப்பு :
இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம்.
இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும். இதுதான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம்.
நாராயணவனத்தில்தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது.
உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம்தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில்.
இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம்.
திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவில் பெருமாளை தரிசித்தால், திருமணத் தடை விலகும். சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால்தான் அனைவருக்கும் இங்கே தெரியும்.
உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றைப் பார்க்கலாம். பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைகூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்கவும் பெருமாளை வேண்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயணவனம் உள்ளது. இந்த நாராயணவனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது. பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள்.
வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருச்சானூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்த நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம்.