நலம்தரும் நவராத்திரி!

Navarathiri
Navarathiri
Published on

நவராத்திரி என்பது ஒன்பது நாட்களுக்கு நீண்டு பத்தாம் நாள் விஜய தசமியாக நிறைவுறும் மகிழ்ச்சியான கொண்டாட்டம். அதாவது பக்தி செலுத்துவதற்கும், இறை அருளுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறைகளில் ஒன்று. 

பொதுவாகவே பக்தி செலுத்துவது என்பதே குதூகலமான விஷயம்தான். இறைவன் நாமங்களை ஜபித்தோ, இறை ஸ்லோகங்களைப் பாடியோ நாம் நம் சந்தோஷ மனநிலையை வெளிப்படுத்துவதே பக்தி. இதில் கொஞ்சமும் வருத்தம் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை. எல்லாம் இன்ப மயம்தான். வேண்டுதல் – பரிகாரம் எல்லாம் பக்தியில் சேர்த்தி இல்லை. அது பரம்பொருளோடு நாம் மேற்கொள்ளும் வியாபார நிபந்தனை, அவ்வளவுதான். நம் நெஞ்சத்துக்கு மிகவும் நெருங்கியவருடன் உரையாடும் ஆத்மார்த்த உணர்வைத் தருவதுதான் பக்தி. 

இந்த பக்தியை விழா, பண்டிகை, கொண்டாட்டம் என்று பலவகையாக நாம் இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம். இந்த வகை பக்தியில் சுயநலம் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதாவது இதுபோன்ற பண்டிகைகளில் நாம் பிறருடைய நலனுக்காகவும் பக்தி செலுத்துகிறோம் என்பதுதான் உள்ளீடாக மறைந்திருக்கும் உண்மை. பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நாம் சிலவகை நிவேதனப் பொருட்களைத் தயாரிக்கிறோம். அவற்றை நாம் உட்கொள்வதற்கு முன்னதாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, பிரசாதமாக அக்கம் பக்கத்தவருக்கு விநியோகிக்கிறோம். அச்சமயம் வீட்டுக்கு வரும் உறவினர், நண்பர் ஆகிய விருந்தினர்களுக்கும் அளிக்கிறோம். இப்படி நாம் சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்குகிறோம்.

அதோடு பண்டிகையைக் கொண்டாடும்போது, பூஜைக்காக மலர்கள், பழங்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், நிவேதன மூலப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதன் மூலம் சிலபல வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கும் நாம் உதவுகிறோம். இப்படி சமுதாய பொது நலன் நாடி நாம் கொண்டாடும் பண்டிகைகள் சந்தோஷத்தை மட்டுமே பரிமாறிக் கொள்கின்றன என்பதுதானே உண்மை?  

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு வித்திடும் நவராத்திரி!
Navarathiri

சரி, நவராத்திரி வைபவம் பற்றி காஞ்சி பரமாச்சார்யார், ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் என்ன சொல்கிறார்?

‘‘நவராத்திரி நாட்களில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். இவ்வாறு மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அவர்கள் எல்லோருமாக இருப்பவள் பராசக்தி ஒருவளே. இந்த உண்மையை, பரதேவதையே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) என்றும், அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணி) என்றும் அவளே ஸம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்றும் லலிதா ஸஹஸ்ரநாமம் வர்ணிக்கிறது. அதாவது லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறாள் என்று பொருள்.

ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியாகையால் மலைமகள்; மஹாலக்ஷ்மியாகப் பாற்கடலில் தோன்றியதால் அலைமகள், சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள். 

பார்வதி, மஹாலக்ஷ்மி மற்றும் ஸரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும், எல்லோருக்கும் பொதுவாக அனுக்ரஹம் செய்யக் கூடியவர்கள். இவர்கள் என்னவோ குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே வழிபடத் தகுந்தவர்கள் என்ற வறட்டு சித்தாந்தம் சரியல்ல. ஏனென்றால், பார்வதி, கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக, காத்யாயினியாகக் கொண்டாடப்படுகிறாள். ‘பட்டாரிகை‘ என்று ஸ்ரீவித்யா உபாசகர்கள் குறிப்பிடும் மஹாலக்ஷ்மிதான் கிராமங்களில் ‘பிடாரி‘யாக வழிபடப்படுகிறாள். ‘பட்டாரிகா மான்யம்‘ என்று பழைய செப்பேடுகளில் காணப்படும் சொத்து, மானியம் போன்ற குறிப்புகளின் அடிப்படையில்தான் ‘பிடாரி மானியம்‘ என்று பேச்சுமொழி உருவாகியிருக்கிறது. அதேபோல ஸரஸ்வதியை ‘பேச்சாயி‘ என்றழைத்து தம் பக்தியை அர்ப்பணித்து வருகிறார்கள். அதாவது பேச்சுக்கே ஆயி, வாக்தேவி என்ற ஸரஸ்வதிதான் இந்தப் பேச்சாயி.‘‘

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொலு டிப்ஸ்!
Navarathiri

உலகத்தையே அச்சுறுத்தி வந்த அரக்கர்களை, அன்னை பராசக்தி, துர்க்கையாக அவதாரம் எடுத்து அழித்தாள். அசுர குணம் கொண்டவர்களேயானாலும் கடுந்தவம் இயற்றி பல வரங்களைப் பெற்றிருந்தார்கள் அரக்கர்கள். தாய்மை நிறைந்த ஒரு பெண்ணே அவர்களை அழிக்க முன் வருகிறாள் என்றால் அவர்கள் எத்தகைய கொடுமைக்காரர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிரூபிக்கத்தான் மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் தங்கள் சக்தியையும், ஆயுதங்களையும், துர்க்கைக்கு வழங்கி அந்த வதம் நிகழ உதவினார்கள்.

இவ்வாறு பராசக்தியின் மூன்று அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று நாட்களாக மொத்தம் ஒன்பது நாட்கள் என்று பிரித்து நவராத்திரி என்று ஆனந்தமாகக் கொண்டாடுகிறோம். 

நாளை முதல் ஒவ்வொரு நாளும் இந்த விழாவின் தாத்பர்யத்தை அனுபவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com