எட்டாம் நாள் - கல்விக் கடலின் கரை காண, தோணியாவாள் கலைவாணி!

Navarathiri
Navarathiri
Published on
இதையும் படியுங்கள்:
ஏழாம் நாள் - சகல கலைகளையும் அருள்வாள் கலைவாணி!
Navarathiri

காளிதாசன் தன்னிகரற்ற, தரணி போற்றும் ஏற்றமிகு புலவர். சாகுந்தலம், ரகுவம்சம், சியாமளா தண்டகம், மேகதூதம், குமார சம்பவம், விக்கிரமோவர்சியம், மாளவிகாக்கினி மித்திரம், ருது சம்ஹாரம் முதலான பல கவிதை நூல்களை யாத்துள்ளார். இதனாலேயே அவருக்கு வித்யா கர்வம் மேலிட்டிருந்தது. ‘யாமே கவி, எமக்கு நிகரில்லை‘ என்ற இறுமாப்பு கொண்டிருந்தார்.

மன்னன் போஜராஜன் சபையில் இருந்த எட்டு கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். ஒருசமயம் மன்னன் இந்த எண்மரில் யார் தலை சிறந்தவர் என்று மதிப்பீடு செய்ய விரும்பினான். ஆகவே உளமாற சரஸ்வதி தேவியைத் துதித்தான். அந்த அவையில் நிறைகுடமாக கவிஞர்கள் ததும்பி நின்றதில் அன்னைக்குப் பெரிதும் மகிழ்ச்சி. அதனால் கல்வியைப் போற்றும் போஜராஜன் கோரினால் உடனே அசரீரியாக விளக்கங்களைச் சொல்ல அவள் எப்போதுமே தயாராக இருந்தாள்.

அந்த வகையில் இப்போதைய மன்னனின் சந்தேகத்துக்கு, ‘கவிஞர் தண்டிதான் சிறந்தவர்,‘ என்று பதிலளித்தாள் அன்னை. இதைக் கேட்டு வெகுண்டார் காளிதாசர். தன்னுடன் உரையாடுமளவுக்கு தனக்கு மிகவும் நெருக்கமான கலைவாணி தன்னை சிறந்தவனாக அறிவிக்கவில்லையே என்று ஏமாற்றம் கொண்டார். உடனே, ‘அப்படியானால் நான் யாரடி?’ என்று கோபத்துடன் வினவினார். அவருடைய அகம்பாவத்தைக் கண்டு சபையோர் திடுக்கிட்டுத் திகைக்க, அவருடைய கவி லாவண்யத்தில் மெய்மறந்திருந்த சரஸ்வதி தேவியோ, ‘நீ வேறு யார், நானேதான்!‘ என்று சொல்லி காளிதாசனை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கினாள்.

ஆனால், பேசக் கற்றுக் கொடுத்த தாயாகிய தன்னையே ஏசிப்பேசும் மகனை அவள் கண்டிக்கவும் தயங்கவில்லை. அதனால் அடுத்த ஜன்மத்தில் அவன் பேச்சிழந்தவனாக பிறக்கட்டும் என்று சபித்துவிட்டாள். இது மட்டுமல்ல, மனம் வருந்திய காளிதாசன் மன்னிப்பு கோரியபோது, ‘கவலைப்படாதே உன் கவித்துவம் உன்னை எல்லா ஜன்மங்களிலும் தொடரும்‘ என்று ஆறுதலாகவும் சொன்னாள் அம்பிகை.

இதில் இன்னொரு நுணுக்கமும் இருக்கிறது. அதாவது வட பாரதத்தில், மால்வா பகுதியில் தன் கவித் திறமையால் காளிதாசன் புகழ் பரப்பியதுபோல, தென் பகுதியிலும் அவருடைய மேதாவிலாசம் விளங்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறாள் சரஸ்வதி! அதனால்தான் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்தார் காளிதாசன்.

இதையும் படியுங்கள்:
ஆறாம் நாள் - மனமகிழ்ந்து அருள்வாள் மங்கல மஹாலக்ஷ்மி!
Navarathiri

சாபத்துக்கேற்ப, பிறந்ததிலிருந்தே பேச்சிழந்த அவர் மூகர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் பூர்வ ஜன்ம வாசனையால் எப்போதுமே காமாட்சி அம்மன் சந்நதி முன்னாலேயே அமர்ந்திருந்து அம்பிகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்.

ஒருசமயம் தேவி உபாசகர் ஒருவர் அதே சந்நதிக்கு வந்து, தான் மேன்மேலும் கல்வி, ஞானத்தில் சிறக்க விரும்பி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு அருள் புரிய விரும்பிய அன்னை அவரருகே வந்தாள். அம்பிகையை மூகர் கவனித்துவிட்டார். உடனே, ‘தாயே..‘ என்று அழைக்க முற்பட்டார். ஆனால் வார்த்தை வரவில்லை, வாயிலிருந்து ‘பே…பே…‘ என்ற ஒலி மட்டும்தான் வந்தது. இதனால் எரிச்சலுடன் கண் திறந்த உபாசகர் தன் தியானம் கலைய காரணமானவள் பெண்ணாகி வந்தவள்தான் என்று கருதி, ‘ஏன் என் தியானத்தைக் கலைத்தாய், போ இங்கிருந்து…‘ என்று சுடு சொற்களால் அம்பிகையை விரட்டினார்.

மணக்கும் தாம்பூலத்தைத் தரித்திருந்த தேவி அவரை விட்டு அகன்றாள். தன்னையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த மூகரின் வாய்க்குள் தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். அவ்வளவுதான், அந்தக் கணமே கவிப் பேரருவி மூகரின் வாயிலிருந்து பீறிட்டது. ஆர்ய சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் என்று ஐநூறு துதிகளால் அம்பிகையைப் போற்றி மகிழ்ந்தார். இந்தத் துதி ‘மூக பஞ்ச சதீ‘ என்று போற்றப்பட்டது. இந்த ஒவ்வொரு துதியிலும் காமாக்ஷி, காஞ்சி அல்லது காமகோடி ஆகிய பதங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!
Navarathiri

இப்படி அறிவிலியையும் அறிவார்ந்த கல்விமானாக வளர்ப்பதில் சரஸ்வதி தேவி பேரார்வம் கொண்டுள்ளாள். அந்த அன்னையை இந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் எட்டாம் நாளன்றும் பூஜித்து மகிழ்வோம்.

இன்று சாமந்தி, மருதோன்றி, சம்பங்கி, வெண்தாமரை போன்ற மலர்களால் கலைவாணியை அர்ச்சித்து மகிழ்வோம். பால் சாதம், மொச்சை சுண்டல் தயாரித்து நிவேதனம் செய்வோம்.

கல்விக் கடலின் கரை காண, தோணியாவாள் கலைவாணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com